16 Aug 2018 3:26 pm
இலெமுரியா அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழாவில் தமிழ் மாணவர்களுக்கு விருதுகள், தமிழ் நாடகம், தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு நாசிக் சந்திப் பல்கலைக்கழக துணைவேந்தர் கர்னல் (பேராசிரியர்) நல். இராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இந்திய அரசின் மேனாள் கூடுதல் செயலாளர் கோ. பாலச்சந்திரன் ஐஏஎஸ் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். திருமதி ந. அம்பிகா ஐபிஎஸ் வாழ்த்துரை வழங்கினார்.
ஆகஸ்ட் 15ம் தேதி (15.08.2018) புதன் கிழமை மாலை 6.45 மணிக்கு, தாதர் சிவாஜி பார்க்கில் மேயர் மாளிகை அருகில் அமைந்துள்ள சுததந்திர வீர் சாவர்க்கர் அரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் இலெமுரியா அறக்கட்டளை அறங்காவலர் திருமதி நங்கை குமணராசன் வரவேற்புரையாற்றினார்.
சீர்வரிசையார் நினைவு விருதுகள்:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச்சான்றோர்கள் பெயரால் சீர்வரிசை சண்முகராசன் நினைவு விருதுகள் வழங்கப்படுகின்றது. இவ்வாண்டு மும்பை தமிழ்ச்சங்க மேனாள் செயலாளர் வெ.பாலு அவர்களுக்கு அவரது தமிழ் தொண்டை பாராட்டி ‘‘பெரும்புலவர் தொல்காப்பியர் விருது’’ பொற்கிழி ரூ.10,000/- மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ‘அய்யன் திருவள்ளுவர் விருது’ – செல்வி. கௌரி பெரிய சாமி (பிரைட் உயர்நிலைப் பள்ளி), ‘தந்தை பெரியார் விருது’ – செல்வன். டோணி கென்னடி ஜோசப் (மாநகராட்சிப் பள்ளி, மலாடு மேற்கு), ‘பெருந்தலைவர் காமராசர் விருது’ – செல்வி. கீர்த்தி ரமேசு, (அணுசக்திக் கழக மத்தியப் பள்ளி, டிராம்பே) ‘புரட்சியாளர் அம்பேத்கர் விருது’ – செல்வி. மகாலட்சுமி கணேசன், (கம்பன் உயர்நிலைப் பள்ளி) ‘அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் விருது’ – செல்வி. ராகவி தங்கபாண்டி (அணுசக்திக் கழக மத்தியப் பள்ளி, அணுசக்தி நகர்) ஆகிய விருதுகள் அவர்களது கல்வி ஆர்வம் மற்றும் சமூகப் பணியினை பாராட்டி வழங்கப்பட்டது.
செவிலியர் சேவையை பாராட்டும் வகையில் இவ்வாண்டு சிறப்பு விருதுதாக ‘அன்னை தெரசா விருது’ – திருமதி. பேபி விஜய லட்சுமி (செவிலியர், கே.இ.எம். மருத்துவ மனை) அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருதுடன் ரூ.5000/- பொற்கிழியும் வழங்கப்பட்டது.
அவ்வையார் விருதுகள்:
மேலும் தமிழில் கல்வி கற்று நன் மதிப்பெண்ணும்,- புலமையும் பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘அவ்வையார் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மாணவர்கள்:
ஒவ்வொருவருக்கும் விருதுகள், சான்றிதழ்கள் வழங்கி ரூ. 2500க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டது.
நூல்கள் வெளியீடு:
இவ்விழாவில் தமிழ் மாணவர்கள் பயன்படும் வகையில் தயார் செய்யப்பட்ட ‘தமிழ் சொற்கள் அறிவோம்’ என்ற நூலும், இலங்கை, மலையகம் கவிஞர் எஸ்தர் எழுதியுள்ள “கால்பட்டு உடைந்தது வானம்” என்ற நூலும் வெளியிடப்படுகிறது. இந்நூலை கவிஞர் இராசு மாதவன் வெளியிட வனிதா இளங்கோவன் பெற்றுக்கொண்டனர்.
வாழ்த்துரை:
விழாவில் மும்பை காவல்துறை துணை ஆணையர் திருமதி ந.அம்பிகா இ.கா.ப வாழ்த்துரை வழங்குகினர்.
தவமணி சண்முகராசன், அமலா ஸ்டான்லி, அனிதா டேவிட், செலின் ஜேக்கப், தேவசெல்வி சாமுவேல், ஜெஸ்டினா ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாராட்டு
மாணவர்களுக்கான விருதுகளை மருத்துவர் பவானி வேல்ராசு, திருமதி கனிமொழி அன்பழகன், திருமதி காந்திமதி இராமசாமி, திருமதி சுகுணா அன்பழகன் ஆகியோர் வழங்கிப் பாராட்டினர்.
தமிழர் இயல் இசை பண்பாட்டு விழுமியங்களை போற்றும் வகையில் டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் சார்பில் நெல்லை பைந்தமிழ் எழுதி, இயக்கி, நடிக்கும் ‘தடம் மாறியத் தமிழர்கள்’ என்ற கருத்து நாடகம் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினர்களாக டாக்டர். பொன்.அன்பழகன் இஆப, சு.கி.விமலநாதன் இவப, மும்பை காவல்துறை கூடுதல் ஆணையர் எஸ். ஜெயக்குமார், நாசிக் மாவட்ட ஆட்சியர் பி.இராதாகிருஷ்ணன், மும்பை காவல்துறை மேனாள் அதிகாரி தி.சிங்காரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் தமிழ் மக்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். இறுதியில் அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் நன்றியுரை ஆற்றினார்.
We can not do it alone. Join with us.