தமிழர் பண்பாடு கலைவிழா மாணவர் விருதுகள் வழங்கும் விழா 2019

30 Dec 2019 2:30 pm

தமிழர் பண்பாடு கலைவிழா மாணவர் விருதுகள் வழங்கும் விழா 2019 Alt

இலெமுரியா அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் தமிழ் பண்பாட்டை முன்னிறுத்தி நடைபெறும் கலைவிழாவில் ஆடல், பாடல், நாடகம் என பல நிகழ்ச்சிகளும் தமிழ்ச் சான்றோர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மாணவர் விருது வழங்கும் விழா மும்பை முலுண்ட் (மே) காளிதாசு கலையரங்கில் 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.

நீலம் கலைக்குழுவினரின் பறை இசையுடன் தொடங்கிய இவ்விழாவில் தமிழ் வாழ்த்து நடனம் மற்றும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘‘நெஞ்சம் மறப்பதில்லை’’ என்ற நாடகம் நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமாக உருவாக்கப் பட்டுள்ள இந்த நாடகத்தை ‘நெல்லைப் பைந்தமிழ்’ இயக்கினார். மொத்தம் 53 கலைஞர்கள் இதில் பங்கேற்ற்றனர். மேலும் திருவிளையாடல் என்ற நாடகமும் நடைபெற்றது.

விருது வழங்கும் விழா
தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவிற்கு மகாராட்டிரா மாநில தொழில் வளர்ச்சி குழுமத் தலைவர் டாக்டர் பொ.அன்பழகன் ஐ.ஏ.எஸ். தலைமை தாங்கினார்.
மோனாள் காவல்துறைத் தலைவர் திரு.டி.சிவானந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். இலெமுரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் வரவேற்புரையாற்றினார்.

மராத்திய மாநில வீட்டு வசதி ஆணையம் தலைவர். பா.இராதாகிருட்டிணன் ஐ.ஏ.எஸ், நேசனல் கல்விக் குழுமத் தலைவர் டாக்டர் இரா.வரதராசன், சென்னை மெட்டக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் வீ.க.செல்வக்குமார், தைரோகேர் நிறுவன இயக்குனர் ஆ.சுந்தர ராசு ஆகியோர் மாணவர் விருதுகள், பொற்கிழிகளை வழங்கி பாராட்டினர்.

வாழ்த்துரை & சிறப்புரை
மராத்திய மாநில கூடுதல் காவல்துறைத் தலைவர் ச.ஜெகந்நாதன் ஐபிஎஸ் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் சிறப்புரையாக தமிழ்நாட்டிலிருந்து புகழ்பெற்ற நடிகரும் இயக்குனருமான ஜோ.மல்லூரி தமிழ்மொழி குறித்தும் வரலாறு குறித்தும் சிறப்புரையாற்றினார்.

முன்னிலை:
மங்கத்ராம் (பி) லிமிடெட் மேலாண்மை இயக்குனர் எஸ்.இராமச்சந்திரன், ஆணி பேசிலிட்டீஸ் அண்ட் சர்வீசஸ் மேலாண்மை இயக்குனர் ஆ.டென்சிங், திராவிடர் மறுமலர்ச்சி நடுவம் நிறுவனர் ஸ்டீபன் இரவிக்குமார், தானே சிட்டி டைரி உரிமையாளர் ந.கண்ணன் சேட், அபூர்வா கெமிக்கல் மேலாண்மை இயக்குனர் கண்ணன் இராமகிருஷ்ணன், தருண்பாரத் இயக்கம் நிறுவனர் இராசேந்திர சுவாமி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ்ட் துணைப் பொது மேலாளர் அ. இரவிச்சந்திரன், அதினா குளோபல் சிஸ்டம்ஸ் மேலாண்மை இயக்குனர் சிவக்குமார் இராமச்சந்திரன், ஹோலி டிரினிட்டி பள்ளி நிறுவனர் டாக்டர் ஆ.தங்கப்பன், பம்பாய் திருவள்ளுவர் மன்றத் தலைவர் ஜேம்ஸ் தேவதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சீர்வரிசையார் நினைவு விருதுகள்:
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ச்சான்றோர்கள் பெயரால் சீர்வரிசை சண்முகராசன் நினைவு விருதுகள் வழங்கப்படுகின்றது. பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிறுவனர் வி.தேவதாசன் அவர்களின் தமிழ்த்தொண்டைப் பாராட்டி ‘‘பெரும்புலவர் தொல்காப்பியர் விருதும்’’ ரூ.10,000 பொற்கிழியும் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறந்த எழுத்தின் வன்மைக்காக கவிஞர் புதிய மாதவி என்ற மல்லிகா சங்கரநயினாருக்கு ‘‘பேரறிஞர் அண்ணா விருது’’ வழங்கப்பட்டது. மும்பையில் சிறந்த பேச்சாளரான முகமதலி ஜின்னாவிற்கு “பேரறிஞர் அண்ணா சிறப்பு விருது” வழங்கப்பட்டது. ஐம்பெரும் இலக்கியங்களுக்கு உரை எழுதி தமிழத்தொண்டாற்றி வருகின்ற ப.ஜெகதீசன் அவர்களுக்கு ‘‘இளங்கோவடிகள் காப்பிய விருது’’ வழங்கப்பட்டது. தமிழ்மொழி, இன உணர்வு மற்றும் பண்பாட்டு விடயங்களைத் தன் எழுத்தாலும் நடிப்பாற்றலாலும் மும்பை தமிழர்களிடையே கொண்டு செல்லும் நெல்லைப் பைந்தமிழ் அவர்களுக்கு ‘‘கலைவாணர் என்.எசு.கிருட்டிணன் விருது’’ வழங்கப்பட்டது. மும்பையில் நீண்ட கால எழுத்தாளரும் பொதுவுடைமைத் தத்துவத்தை மக்களிடையே கொண்டு செல்பவருமான ஞான அய்யாப்பிள்ளை அவர்களுக்கு “பொதுவுடைமைப் போராளி ப.ஜீவானந்தம் விருது” வழங்கப்பட்டது. கணிவான மனதுடன் செவிலியர் சேவையைச் செய்து வருகின்ற இளந்தளிர் வாலண்டினா தெகிலன் பெர்னாண்டோ அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மாணவர் விருதுகள்:
மலாடு (மே) லிபர்ட்டி கார்டன் உயர்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி குளோரியா ஜோசப்பிற்கு ‘அய்யன் திருவள்ளுவர் விருதும்’ முலுண்டு கோசால ஆங்கிலப் பள்ளி 8-ம் வகுப்பு மாணவி அனீஸ் பாத்திமாவிற்கு ‘தந்தை பெரியார் விருதும்’ பாண்டூப் பிரைட் மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி ப.மகேசுவரிக்கு ‘பெருந்தலைவர் காமராசர் விருதும்’ சீத்தாகேம்ப் ஐடியல் இளநிலைக் கல்லூரி 11-ம் வகுப்பு மாணவி ரோஷி நசீர் அகமதுவிற்கு ‘புரட்சியாளர் அம்பேத்கர் விருதும்’ டோம்பிவிலி மாடல் ஆங்கிலப் பள்ளி 11ம் வகுப்பு மாணவன் அரவிந்த் அய்யம்பெருமாளுக்கு ‘அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் விருதும்’ வழங்கப்பட்டது.

மேலும் தமிழ்வழிக்கல்வியில் பயிலும் 12 மாணவர்களுக்கு ‘அவ்வையார் விருது’ வழங்கப்பட்டது. அவர்களாவன; ரே ரோடு நவாப்டேங்க் மாநகராட்சி தமிழ்ப்பள்ளி மாணவிகள் பிரீத்தி ராஜு, அபிநயா அஞ்சபுலி, மாணவன் ராகவன் பரத், முலுண்ட், எஸ்.எல்.ரோடு மாநகராட்சி தமிழ்ப்பள்ளி மாணவி எஸ்.தேவகி, கோவண்டி தேவ்னார் காலனி மாநகராட்சி தமிழ்ப்பள்ளி மாணவன் கவுதம் ராஜா, சீத்தாகேம்ப் சஹாஜிநகர் மாநகராட்சி தமிழ்ப்பள்ளி மாணவி கவிதா குமார், மாணவன் ராகுல் வீரபாண்டியன், தாராவி சந்த் காக்கையா மாநகராட்சி தமிழ்ப்பள்ளி மாணவி ஷேக் ரூபினா, கோரேகாவ் ஆரே காலனி மாநகராட்சி தமிழ்ப்பள்ளி மாணவன் ஏ.கார்த்திக், மாணவிகள் கே.நமீதா, எம்.மகாலட்சுமி, சயான் கோலிவாடா கே.டி.காய்க்வாட் மாநகராட்சித் தமிழ்ப் பள்ளி மாணவி கார்த்திகா கந்தசாமி ஆகியோர்களாவர்.

இந்த விழாவில் நெல்லை பைந்தமிழ் எழுதிய ‘‘பண்பாட்டை சிதைக்கும் இந்தியா’’ என்ற நூலும், அண்ணா கதிர்வேல் எழுதிய ‘‘அப்பா’’ என்ற நூலும் வெளியிடப்படுகிறது. நூல்களை முறையே கருவூர் பழனிச்சாமி, கே.ஆர்.சிறினிவாசன் ஆகியோர் வெளியிட்டனர்.

நிகழ்ச்சியை புவனா வெங்கட் நெறியாள்கை செய்தார். இறுதியில் பெ.கணேசன் நன்றியுரை ஆற்ற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தன்னார்வ ஒருங்கிணைப்பாளர்கள் வெ.சித்தார்த்தன், சக்தி பழனி, கி.தனுஷ்கோடி, இல.தேவராசன், முத்தமிழ் தண்டபாணி, அ.கண்ணன், மகேசன், இர.இராஜேந்திரன், இறை.ச.இராசேந்திரன், சாலமன் ராஜா, காரை.இரவீந்திரன், சங்கர் திராவிட், த.செ.குமார், புல.தேவராசன், உ.பன்னீர்செல்வம், எஸ்.எம்.இலட்சுமணன் மற்றும் இலெமுரியா அறக்கட்டளை நிருவாகிகள் செய்தனர்.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives