27 Jan 2025 1:38 pm
இலெமுரியா அறக்கட்டளை சார்பில் தமிழின் தொன்மை இலக்கண நூலான தொல்காப்பியத்தை முன்னிறுத்தி ஒரு திருவிழா. உலகிலேயே முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திருவிழா மகாராட்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் 25 சனவரி 2025, சனி மற்றும் 26 சனவரி 2025 ஞாயிறு ஆகிய இருநாள் விழாவாக நவி மும்பைத் தமிழ்ச் சங்கம் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் அரங்கில் கொண்டாடப் பட்டது.
தொல்காப்பிய நூல் குறித்த ஆவணக் கண்காட்சி, தொல்காப்பியக் கருத்தரங்கம், எட்டுத் தொகைக் கவியரங்கம், தொல்காப்பிய மரபு மற்றும் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த நூல்கள் வெளியீடு, தொல்காப்பியர் விருது, மாணவர் அரங்கம், தனிதமிழ்ச் சொற்பொழிவுப் போட்டி, தமிழின் மேன்மையினை எடுத்தியம்பும் பல்வேறு பொருண்மைகளில் தமிழறிஞர்களின் சொற்பொழிவு என பல்சுவை இலக்கிய விருந்தாக இவ்விழா அமைந்தது.
மகாராட்டிரா மாநிலம் மேனாள் காவல்துறைத் தலைவர் திரு த. சிவானந்தம் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில் மேற்கு வங்க மாநில மேனாள் தலைமை செயலாளர் திரு கோ. பாலசந்திரன் IAS மகாராட்டிரா மாநில நிதித்துறை செயலாளர் திரு நல், இராமசாமி IAS மும்பை காவல்துறை இணை ஆணையர் திரு சூ. ஜெயகுமார் IPS சேதுபாஸ்கரா கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் சேதுகுமணன் உட்பட பல உயர் அதிகாரிகளும், தமிழ் அறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இவ்விழாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொல்காப்பியக் கருத்தரங்கில் முனைவர் வளனறிவு, முனைவர் பேராசிரியர் அரங்க மல்லிகா, முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.
மேலும் “செவ்வியல் இலக்கியங்கள் ஓர் அறிமுகம்” என்ற நூல் ஆங்கில மொழியிலும், “தொடரும் தொல்காப்பிய மரபு” என்ற தமிழ் நூலும் வெளியிடப்பட்டன. எட்டுத் தொகை இலக்கியங்கள் குறித்து நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் புதிய மாதவி, இறை.ச. இராசேந்திரன், இராசு. மாதவன், பிரவீனா சேகர், வெங்கட்.சுப்பிரமணியம், வ,ரா. தமிழ்நேசன், நெல்லை பைந்தமிழ், புலவர் கார்த்தியாயிணி ஆகியோர் கவி பாடினர்.
மும்பையில் தமிழ் மொழி, தமிழர் நலம் மற்றும் சமுகச் சேவையில் முன்னிற்கும் சாதனையாளர்களுக்கு திருவள்ளுவர், தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அப்துல் கலாம், புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், அன்னை தெரசா, கலைவாணர் என்.எஸ்.கே, சீர்வரிசை சண்முகராசன், டி.எம். சவுந்திரராசன், முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் பெயரில் விருதுகள் வழங்கப்பட்டது. சமுகச் சேவைத் தளபதி விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் மும்பையின் முக்கியப் பிரமுகர்கள் பலர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை இலெமுரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் செய்திருந்தார்.
We can not do it alone. Join with us.