துளி 1 – முன்னுரை

03 Jan 2022 11:04 am

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்

தொல் தமிழர் வகுத்த ஐந்திணை ஒழுக்கத்தின் நானிலப் பரப்பின் முன்பனிக் குளிரில் காலை இளம்பருதியின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்த ஒரு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்காக யாம் பதிவிடுகின்றோம்

துளி: 1
வாசிப்பு நேரம் : 4 நிமையங்கள் / 30-12-2021

ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்- ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்றேனையது
தன்னேரிலாத் தமிழ்!

– (தண்டியலங்காரம்)

எழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்தினும்
பழுத்த வாய்மொழிப் பாவலர் பண்புற
இழைத்த பாத்தொகை எண்ணில வாய்வளந்
தழைத்த முத்தமிழ்த் தாயினைப் போற்றுவாம்

– (புலவர் குழந்தை)

கனியிடை ஏறிய சுளையும் – முற்றல்
    கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
    பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்! 
- (புரட்சிக் கவிஞர்)

தமிழ் மொழி குறித்து நம் முன்னோர் சிலரின் முன்மொழிவுகளே மேற்கண்ட செய்யுள் வரிகள்..

வடமொழியாளர்கள் தன் முன்னோர் மொழியாகப் போற்றும் சமசுகிருத்தில் பாணினியைப் போற்றுவது போல அல்லது அர்த்த சாசுத்திரம், இராமாயாணம், மகாபாரதம் போன்ற இலக்கண, புராணக் கதைகளை முன்னெடுப்பது போல அல்லது கொண்டாடி மகிழ்வது போல தமிழினமானது இவ்வுலகின் மொழிகளுக்கெல்லாம் முன்னத்தி ஏராகத் திகழும் நம் தமிழ் மொழியையோ, ஒல்காப் புகழ் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலைப் போன்ற வளம் சார் இலக்கண, இலக்கிய நூல்களை, காப்பியங்களைக் கொண்டாடுவதில்லை; அவைகளை முன்னேடுத்துச் செல்வதில்லை. அவற்றைப் படித்துப் பயனுற வேண்டும் என்ற மனநிலையைப் பெறுவதில்லை.

யானைத் தன் பலம் அறியாது பாகனிடம் பணிந்து நடந்து கொள்வது போல தமிழர்கள் வட இந்திய வல்லாண்மைச் சிந்தனைகளில், செயல் பாடுகளில் தான் ஓர் அடிமை என்ற நிலையிலேயே தங்கள் செயல் பாடுகளைக் கொண்டுள்ளனர் என்பது தான் இன்று யாம் வேதனையுடன் வெளிப்படுத்த வேண்டிய செய்தியாக உள்ளது.

தமிழ்த் தாயின் கருவறையில் உருவான அனைத்து நூல்களயும் பட்டியலிடுவது கூட எளிதான ஒன்று அல்ல. அந்த அளவு தமிழில் இலக்கண இலக்கியங்களின் பெருக்கம் உள்ளன.

பழமையான மொழிகள் என தமிழோடு இணைத்துச் சொல்லப் படுகின்ற மொழிகள் கிரேக்கம், இலத்தீன், சமசுகிருதம் ஆகிய மூன்றும் இன்று பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள். நம் நாட்டிலிலுள்ள சமசுகிருதம் ஒரு சிறுபான்மையினரால் சடங்குகளுக்குப் பயன் படுத்தப் படும் ஓர் ஊடகமாகத் திகழ்கிறது. வேதங்களுக்குரிய பரம்பரை என்னும் அளவில் பயன் பாடில்லாத அந்த வடமொழி காலப் போக்கில் காலமாகிப் போனது.

ஆனால் அம்மொழியை மீண்டும் தூக்கி நிறுத்துவதற்காக வட இந்திய ஆரிய வழிச் சமுகம் இன்று எந்த அளவு முயன்று வருகிறார்கள் என்பதை இந்திய நிதி நிலை அறிக்கை மொழி வளர்ச்சி ஒதுக்கீடுகளைப் பார்த்தால் புரிந்து கொள்ள இயலும். அவர்களை யாரும் சமசுகிருத மொழி வெறியர்கள் என்று அழைப்பதில்லை.

ஆனால் தகுதி வாய்ந்ததும் தளராமலும் இருந்து வருகின்ற தமிழ் மொழியின் ஆக்கம், ஊக்கம் குறித்தும் அதன் வளர்ச்சி, தேவைகள் குறித்தும் வட மொழி ஆதிக்கத்தின் வல்லாண்மை குறித்தும் பேசினால் அவர்களைத் தமிழ் வெறியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என இக்குமுகாயம் தனிமைப் படுத்துகிறது. இதை நம் தமிழர்கள் உணர்ந்து கொள்வது எப்போது?

கிரேக்கர்களுக்கு அரிசுடாட்டில் கவிதைகளில் கிடைத்திருப்பது போலவும் உரோமானியர்களுக்கு ஒரேசின் கவிதைக் கலைகளில் கிடைத்திருப்பது போலவும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு முழுமையாகக் கிடைத்திருக்கும் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். அழிந்து போன நூல்களில் எஞ்சியிருக்கும் நூல்களில் நமக்குக் கிடைத்திருக்கும் முதல் நூலே ஒரு இலக்கண நூல் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.

வாழ்க்கைக்கு வகையாவது இலக்கியங்கள்
வாழ்விற்கு வனப்பூட்டுவது இலக்கியங்கள்

மொழியின் முகம் காட்டும் பண்பு இலக்கியத்திற்கு உண்டு
இனத்தின் அகம் காட்டும் பண்பு இலக்கியத்திற்கு உண்டு

ஏற்றமுறு இலக்கியங்கள் மொழிக்கு மட்டுமன்றி மொழி சார்ந்த இனத்திற்கும் பெருமை கூட்டும். நாட்டிற்கு புகழை ஈட்டும்.

அந்த வகையில் தொல்காப்பியமும் திருக்குறளும் தமிழ் இனத்தின் இரு கண்கள் எனலாம்.

தொல்காப்பியம் தான் தமிழின், தமிழ் இனத்தின் வேலியாக நின்று நம்மை சூழ்ந்திருக்கும் பகைவருக்கெல்லாம் விடையளிக்கிறது. எந்த மொழியும் இதன் அருகில் வந்து அதனை அழித்தொழிக்க முடியவில்லை.

உலகில் தமிழன் மட்டும்

  • “யாது ஊரே யாவரும் கேளிர்” என்று பாடினான்.
  • உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதினான்.
  • ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனப் பகிர்ந்தான்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலில்

கல்பொருதுமிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படு உம் பினை போல ஆருயிர்
முறைவழிப் படு உம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின
மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! - (புறம் 192)

இந்தப் புலவனுக்கு முந்தியவன் சொல்லிச் சென்றதாகப் பாடுகிறான்.
இதிலிருந்து தமிழ் மொழியின் தொன்மை எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஒசை, மொழி, நாட்டுப்புறப் பாடல், உரைநடை, கவிதை, இலக்கியம், இலக்கணம் என பின்னோக்கிப் பார்த்தால் இதன் தொடக்கம் சற்றொப்ப 30,000 ஆண்டுகளைத் தொடும்.

செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும் இலக்கியப் பெருமையில் இலத்தீன் மொழியையும் வெல்லவல்லது தமிழ். அதன் ஒவ்வொரு சொற்களின் இனிமையும் அதனிடத்தில் கேட்டாரைத் தன்வயமாக்கும் இனிமை பொருந்தியது தமிழ் என வின்சுலோ என்ற மேனாட்டறிஞர் பதிவு செய்துள்ளார்.

மொழி என்பது வெறும் கருத்தை சுமந்து செல்லும் ஊர்தி என்றும் பிறரோடு தொடர்பு கொள்வதற்கான ஓர் கருவி என்றும் பிற மொழியாளர்கள் கருத்தியலாளர்கள் சொல்லக் கேட்டிருக்கின்றோம். அந்தச் சொற்கள் பிற மொழிகளுக்குப் பொருந்தலாம். ஆனால் தமிழ் மொழி என்பது இவற்றைத் தாண்டி மனித இனத்தின் மனம், அறிவு இரண்டிற்கும் உணவாக இயல், இசை, கூத்து என்ற முத்தமிழ் மூலம் அறம், பொருள், இன்பம் என்ற வாழ்வியல் கோட்பாடுகளை முதன்மை நோக்கமாகக் கொண்டு நம்மை வழி நடத்தும் ஓர் பண்பாட்டின் அடையாளம் ஆகும்.

உலகின் முதல் மொழியாகவும் வாழ்வியல் மொழியாகவும் விளங்கும் தமிழ் மொழி நமக்குத் தாய்மொழியாக வாய்த்திருப்பது நாம் பெற்ற பேறு எனலாம். அம்மொழியில் நமக்குக் கிடைத்திருக்கும் நூல்கள் மிகச் சிலவே. அந்த சிலவற்றிலும் அதன் தொன்மை கருதி செவ்வியல் இலக்கியங்கள் என பட்டியலிடப் பட்ட நூல்கள் நாற்பத்து ஒன்றாகும்.

இலக்கியக் கருவூலத்திலிருந்து வகைப் படுத்தப் பட்டிருக்கும் இந்த நாற்பத்தொன்று நூல்களின் பெயர்கள், அவைகளைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம் என்ற அளவிலாவது தமிழர்கள் தம் உடைமைகளத் பற்றி தெரிந்து கொள்வது நம் கடமையாகும். அவ்வகையில் முதல் இலக்கண நூலாகிய ஒல்காப் புகழ் தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப் பாட்டு மற்றும் பதினென் கீழ்க்கணக்கு நூல்கள் உள்பட பல நூல்கள் குறித்து அடைப்படைத் தகவல்களை நாள்தோறும் சற்றொப்ப நான்கு நிமையப் படிப்புக்காகத் தர விழைகிறேன். எதிர் வரும் புத்தாண்டில் நம் தாய்த் தமிழுக்காக ஒரு நான்கு நிமையங்களை ஒதுக்கி படித்துப் பயன் பெறுக. இது என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு ஒளி, தமிழே நமக்கு விழி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
30-12-2021.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives