09 Jan 2022 10:38 am
(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)
துளி: 10
வாசிப்பு நேரம் : 5 நிமையங்கள் / 9-01-2022
உலகில் பெரும்பாலான மக்கள் தமிழின் தொன்மை மற்றும் அதன் சிறப்புக் குறித்துப் பேசும் போது முகாமையாகப் பயன் படுத்தும் ஓர் இலக்கியம் புறநானூறு ஆகும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற செய்யுள் வரிகள் பலராலும் அறியப் பட்ட ஒன்றே!
சங்ககாலத் தமிழ் நூற்களின் தொகுப்பான எட்டுத் தொகை நூல்களுள் புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும். புறம், புறப்பாட்டு என்றும் இது வழங்கப்படும்
இந் நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை. அகவற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள்,
150-க்கும்மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை.
இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல. அரசன் முதல் எளிய குடிமகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் இதைப் பாடியுள்ளனர்.
இதன் காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு எனக் கொள்கின்றனர். ஆனால் பாடப்பட்ட மன்னர்கள் கி.மு. 1000 முதல் கி.மு. 300 வரை எனவும் நம்புகின்றனர்.
இந்நூலைத் தொகுத்தவர் பெயரும், தொகுப்பித்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன.
புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் அக்கால மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன. இதனை வெளிநாட்டு அறிஞர் ஜி.யூ. போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
சங்ககால தமிழ் மக்களின் அரசியல், சமூகம், பொருளாதரம், கல்வி, நாகரிகம், கலை வளர்ச்சி, வீரம், கொடை, ஆடை, அணிகலன் பழக்க வழக்கங்கள், வாணிபம் போன்ற பல செய்திகளை புறநானூறு வழி அறியலாம்.
இந்த நூலில் 267, 268 எண் கொண்ட இரு பாடல்கள் கிடைக்கவில்லை.
புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் நமக்குப் புலனாகிறது.
நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஒம்புமின் - (நரிவெருவுத் தலையார்)
உண்பது நாழி உடுப்பது இரண்டே
பிறவும் எல்லாம் ஓர் ஒக்குமே
செல்வத்தின் பயனே ஈதல் - (மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார்)
நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் - (மோசி கீரனார்)
ஈன்று புறம் தருதல் என்தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
இப்படி பல பாடல்கள் அடங்கிய ஓர் பண்டைத் தமிழ் இலக்கியம் இந்த நூல்.
ஆற்றுமணலும் வாழ்நாளும்
பாடியவர் : நெட்டிமையார்
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!
வேந்தர்க்குக் கடனே!
பாடியவர்: மோசிகீரனார்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
(வேந்தர்க்குரிய கடன் இதுவென்னும் சிறந்த செய்யுள் இது.
ஆட்சியாளர் நெஞ்சங்களில் ஆழப் பதியவேண்டிய ஒரு செய்யுளும் ஆகும்.)
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.
(வேந்தனின் முறையான ஆட்சியே மக்களைக் காப்பாற்றும். அதற்கேப்ப ஆட்சி புரிவதே ஆட்சியாளரின் கடமை என உணர்த்தும் பாடல் இது)
பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்
திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி
உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே!
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்,
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்;
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்,
‘மூத்தோன் வருக’ என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்;
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே,
(ஒரு தாய் வயிற்றுப் பிறப்பாக இருந்தாலும் எவனொருவன் கலவி கேள்விகளில் சிறந்து விளங்குகின்றானோ உலகத்தாரால் மதிக்கப் படுவான் என்ற பொருளை உணர்த்தும் வரிகளாகும்)
நீரும் நிலனும் – வேளாண்மைப் பெருக்கமே மன்னர்க்கு வலுவும் புகழும்
பாடியவர்: குடபுலவியனார்]
பாடப்பட்டோன்:- பாண்டியன் நெடுஞ்செழியன்.
தகுதி கேள், இனி, மிகுதியாள! நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே; உண்டி முதற்றே உணவின் பிண்டம்; உணவெனப் படுவது நிலத்தோடு நீரே; நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசி னோரே; வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும் இறைவன் தாட்குஉத வாதே; அதனால், அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம, இவண்தட் டோரே; தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
(வேளாண்மையின் பெருக்கமும், விவசாயிகளின் காப்புமே ஒர் மன்னருக்கு வலிமையையும் புகழையும் தரத்தக்கன என 2500 ஆண்டுகளுக்கு முன்பே உணர்த்திய பாடல் இது)
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு – 192)
எல்லா ஊரும் எம் ஊர், எல்லா மக்களும் என் உறவினர்கள்,
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை!
சாதல் புதுமையில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்ததும் இல்லை!
வாழ்வு துன்பமானது எனவெறுத்து ஒதுங்கியதுமில்ல!
பேராற்று நீர்வழிப் ஓடும் ஒரு தெப்பம் போல
இயற்கை வழி நடக்கும் உயிர் வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்!
ஆதலினால் பிறந்து வாழ்வோரில்
பெரியோர் என வியந்து போற்றியதும் இல்லை
சிறியோர் என இகழ்ந்து தூற்றுவதுமில்லை!
மேற்கண்ட பாடலில் அமைந்த இந்தச் செய்தியை எமக்கு முன்னால் வாழ்ந்த பெரியவர்கள் அறிவுறுத்திச் சென்றுள்ளதாகப் ஒருவன் பாடுவதெனில் தமிழின் அறிவுத் தொன்மை எத்தகையது என்பதை உணர முடிகிறது.
தமிழர்களின் விழுமிய நுண்ணறிவினையும், பரந்த உள்ளத்தையும், வீர வரலாற்றையும் உலகிற்கு எடுத்துக் காட்டும் ஓர் உன்னதமான நூல் புற நானூறு ஆகும்.
இந்தப் பதிவுடன் செவ்வியல் இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்கள் பற்றிய குறிப்பு முற்றுப் பெறுகிறது. இனி வரும் நாள்களில் மற்றொரு நூல்தொகுதியான பத்துப் பாட்டு குறித்துப் பேசுவோம்.
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
9-1-2022
We can not do it alone. Join with us.