10 Jan 2022 10:52 am
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளை நினைவூட்டும் வகையில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 11
நேரச் செலவு : 4 நிமையங்கள் / 10-01-2022
பத்துப்பாட்டு என்பது சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடப்படும் பழந்தமிழ் நூல்களின் தொகுப்புகளுள் ஒன்றாகும். எட்டுத்தொகை போலவே, பத்துப்பாட்டுள் அடங்கிய நூல்கள் இன்னவை எனக் கூறும் பழைய வெண்பா ஒன்றுண்டு. அது வருமாறு:-
முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருஇனிய
கோல நெடுநல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
இவ்வெண்பாவின் படி, அந்நூல்கள் திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் முடியப் பத்து நீண்ட பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு என்று சான்றோரால் வழங்கப்படுகின்றது. இதனைப் பாட்டு என்றே வழங்கலும் உண்டு
இவை அனைத்தும் இன்று ஒரே தொகுப்பாகக் குறிப்பிடப்படுகின்ற போதிலும், இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. வெவ்வேறு ஆசிரியர்களால் பல்வேறு கால கட்டங்களில் இயற்றப்பட்டவை. பத்துப்பாட்டு எனச் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கமும் பிற்காலத்தில் எழுந்ததென்பதே பலருடையக் கருத்து. இந்த அரிய தொகுப்புக்கு நச்சினிக்கினியார் உரை எழுதியுள்ளார்.
பத்துப்பாட்டு என்னும் பெயர் வழக்கு இடைக்காலத்தில் தோன்றியது. கி.பி. 11, 12 ஆம் நூற்றாண்டுக்குரிய பன்னிருபாட்டியல் எனும் இலக்கண நூல் பத்துப்பாட்டிற்கு இலக்கணம் கூறிற்று. கி.பி.15ஆம் நூற்றாண்டினரான மயிலை நாதர் (நன்னூல் எனும் இலக்கணத்துக்கு உரை எழுதியவர்) பத்துப்பாட்டு என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளார்.
பத்துப்பாட்டில் மிகச் சிறிய பாட்டு (முல்லைப் பாட்டு) 103 அடிகள் மட்டுமே கொண்டது. மிக நீண்ட பாடல் (மதுரைக் காஞ்சி) 782 அடிகளைக் கொண்டது.
பத்துப்பாட்டில் உள்ள செய்யுட்களும் எட்டுத்தொகையில் உள்ள நூல்களைப் போலவே அகம், புறம் என்ற இரு பிரிவுகளில் அடங்கும்.
முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப் பாலை, நெடுநல்வாடை என்ற நான்கும் அகப்பொருள் நூல்களாகும்.
திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை, மதுரைக் காஞ்சி ஆகிய ஆறும் புறப்பொருள் பற்றியன. இந்த ஆறு நூல்களில் முதல் ஐந்தும் ஆற்றுப்படை என்ற பிரிவில் அடங்கும். இறுதியானது நிலையாமை பற்றிக் கூறும் காஞ்சித்திணையின் பாற்படுவதாகும்.
இத்தொகுதியிலுள்ள நூல்கள் சங்க இலக்கியங்களுள் சிறப்பிடம் பெறுபவை.
இவற்றில் பழந்தமிழ் நாட்டின் வாழ்க்கை முறை, பண்பாடு பற்றிய பல அரிய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. வரலாற்று நிகழ்வுகள், அரசர்களினதும் வள்ளல்களினதும் இயல்புகள், பொது மக்களின் காதல் வாழ்க்கை, அக்காலக் கலைகள், நகரங்கள் பற்றிய தகவல்கள், இயற்கை பற்றிய வருணனைகள் போன்றவை தொடர்பான பல தகவல்களை இவற்றிலிருந்து பெற முடிகின்றது.
பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட்ட கற்பனைகளோ பொருந்தாத உவமைகளோ காணப்பெறவில்லை. பண்டைத் தமிழர் வாழ்வை உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இவை விளங்குகின்றன. இதனால் இயற்கை ஓவியம் என்றும் பத்துப்பாட்டு அழைக்கப்படுகிறது.
இத்தொகுப்பிலுள்ள பத்து நூல்களும் நீண்ட அகவலோசையால் ஆனவை. இவற்றுள் 103 அடிகளைக் கொண்டமைந்த முல்லைப் பாட்டுக்கும், 782 அடிகளையுடைய மதுரைக் காஞ்சிக்கும் இடைப்பட்ட நீளங்களைக் கொண்டவையாக ஏனைய நூல்கள் அமைந்துள்ளன.
"நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே
ஏறிய அடியின் ஈரைம் பாட்டு
தொடுப்பது பத்து பாட்டெனப் படுமே
அதுவே, அகவலின் வருமென அறைகுவர் புலவர்".
-(பன்னிருபாட்டியல் 266-267)
என்பது இதன் இலக்கணமாகும்.
திருமுருகாற்றுப்படை – 317 அடிகள் – (புலவர் நக்கீரர்)
பத்துப் பாட்டில் இது காலத்தால் பிந்திய நூல்.
பொருநராற்றுப்படை – 248 அடிகள் – (முடத்தாமக் கண்ணியார்)
கரிகால் சோழனைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் நூல்
சிறுபாணாற்றுப்படை – 269 அடிகள் – (நல்லூர் நத்தத்தனார்)
கடையேழு வள்ளல்கள் குறித்த செய்திகளை இங்கு காணலாம்.
பெரும்பாணாற்றுப்படை – 500 அடிகள் – (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
காஞ்சிமாநகரப் பெருமை, யாழின் வண்ணனை குறித்த செய்திகள் இவண் உள.
மலைபடுகடாம் – 583 அடிகள் – (பெருங்கெளசிகனார்)
ஆற்றுப்படை நூல்களில் இதுவே பெரியது. நன்னன் சேய் நன்னன் சிறப்பு – மலைகளில் இயற்கையாக எழும் ஒலிகள் குறித்த செய்திகள்.
குறிஞ்சிப்பாட்டு – 261 அடிகள் – (கபிலர்)
ஆரிய அரசன் பிகதத்தனுக்கு தமிழர் அகப்பொருள் குறித்த அறிவுரை
முல்லைப் பாட்டு – 103 அடிகள் – (நப்பூதனார்)
பாண்டியன் நெடுஞ்செழியன் குறித்தும் கார்காலத்தின் சிறப்பையும் இங்கு காணலாம்
பட்டினப்பாலை – 301 அடிகள் – (கடியலூர் உருத்திரங்கண்ணனார்)
காவிரிபூம்பட்டினத்தின் சிறப்புகள், கடல்வழி வாணிபம் குறித்த செய்திகள்
நெடுநெல் வாடை – 188 அடிகள் – (நக்கீரர்)
கொற்றவை வழிபாடு குறித்த செய்திகளை இவண் காண இயலும்.
மதுரைக் காஞ்சி – 782 அடிகள் – (மாங்குடி மருதனார்)
தூங்கா நகரம் மதுரை, அங்கு நடைபெறும் விழாக்கள் குறித்த பல வரலாற்றுச் செய்திகள் அடங்கிய நூல்.
எதிர்வரும் நாள்களில் மேற்கண்ட நூல்கள் ஒவ்வொன்றும் குறித்து அறிமுகம் காணலாம்.
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
தமிழா விழி! எழு!
தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
10-1-2022
We can not do it alone. Join with us.