துளி 12 – திருமுருகாற்றுப்படை

11 Jan 2022 10:56 am

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் முடிவை எட்டும் தருவாயில் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 4 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 12
வாசிப்பு நேரம் : 4 நிமையங்கள் / 11-01-2022

திருமுருகாற்றுப்படை

தமிழர்களின் பண்பாட்டையும் நாகரிக மேம்பாட்டையும் வாழ்வியல் ஒழுகலாறுகளையும் அறிந்து கொள்வதற்குரிய ஒரே அடையாளம் நமது சங்க இலக்கியங்கள் என ஏற்கனவே பகன்றுள்ளோம்.

அவற்றுள் தொல்காப்பியம், திருக்குறள் நீங்கலாக காலத்தால் மூத்தவைகளில் பத்துப் பாட்டும் அடங்கும். “மூத்தோர் பாடியருள் பத்துப் பாட்டு” என்று தமிழ் விடுதூது முழங்குகின்றது.

பத்துப் பாட்டில் செம்பாதி பாட்டுகள், ஆற்றுப்படை பாட்டுகளாகவே அமைந்துள்ளன. அக்காலப் புலவர்கள் பெரிதும் விரும்பிப் பாடியத் துறை இதுவென்று உணரலாம்.

பத்துப் பாட்டில் முதல் இலக்கியமாகத் திகழ்வது திரு முருகாற்றுப்படையாகும். இந்த நூலை யாத்தவர் புலவர் நக்கீரர் ஆவார். இவரை நக்கீர தேவ நாயனார், மதுரை நக்கீரர் என்றும் அழைப்பதுண்டு.

இது 317 அடிகளைக் கொண்டதொரு இலக்கியம் ஆகும்.

முருகு என்ற சொல்லுக்கு முருகனாகிய தெய்வம் என்ற பொருளோடு அழகு என்னும் பொருளும் உண்டு. அந்தப் பொருத்தம் திருமுருகாற்றுப் படையினை படிப்பவர் நெஞ்சை விட்டு அகலாது.

இப்பாட்டு முருகன் அருளைப் பெற்ற ஒரு புலவன் முருகன் அருளைப் பெறவிரும்பும் ஒருவனை அப்பெருமான் பால் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த ஒன்று. இதை புலவராற்றுப் படை என்றும் குறிப்பிடுவர்.

இதன் காலம் கி.பி மூன்றாம் நூற்றாண்டையொட்டியது என கணித்துள்ளனர்.

சங்க இலங்கியத் தொகுப்பில் பக்தியுணர்ச்சி நிரம்பிய ஒரு முழு நூல் இதுவாகும். சங்க இலக்கியங்களில் பிற எந்த நூலும் பக்தி பற்றிப் பேசுவதில்லை. பரிபாடலில் மட்டும் சில பாடல்கள் திருமால், முருகன் குறித்து உள்ளன. இதில் அமைந்துள்ள இயற்கை வண்ணணை மிகச் சிறப்பானவை.

ஆறு பகுதிகள் கொண்ட இந்நூலில் முதல் பகுதியில் திருப்பரங்குன்றம் மலைக் கோயில் பற்றியும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் என்னும் தலத்தின் பெருமை பற்றியும் கூறி இறுதியில் ஆறாம் பகுதியில் முருகன் எழுந்தருளும் இடங்களும் அவனிடம் சென்று அருள் பெரும் முறையும் பழமுதிர்ச் சோலை அருவியின் சிறப்புகளும் விளக்கப் பட்டுள்ளன.

இப்பாட்டின் தொடக்கத்தில் முருகப் பெருமானின் இறைத்தன்மை காட்டப் படுகின்றது. அதனையடுத்து அவன் திருவுருவச் சிறப்பினையும், அவனைப் போற்றி வானவ மகளிர் ஆடும் சிறப்பினையும் விரிவாகக் காட்டுகின்றார். அதைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம், திருச்சீலை வாயில்கண் வீற்றிருக்கும் முருகனின் ஆறு முகங்களும் பன்னிரண்டு கைகளும் அவன் இருக்கும் தன்மையினையும் விரித்துக் காட்டுகின்றார்.

பெரும்பாலான தமிழ் இலக்கியங்கள் உலகை முன்னுறுத்தியே தொடங்குவது போன்று, இந்நூலின் தொடக்கமும் “உலகம் உவப்ப” என்ற அடியுடன் உலகை முன்னிருத்தியே செயப் பட்டுள்ளது. முருகனின் பெருமை குறித்துப் பேசவந்த புலவர் உலகைக் காட்டிவிட்டுத்தான் தொடர்கிறார்.

உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல்கண் டாஅங்கு
ஓவற இமைக்கும் சேண்விளங்(கு) அவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோந்தாள்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன் (வரிகள் 1-6)

உலகம் என்பது பூமி. பூமியின் கூறுபாடுகள் சான்றோர், உயிர், ஒழுக்கம் ஆகியவை என்று தொடங்குகிறது. உவப்ப என்ற சொல் உயிர் என்ற பொருளைக் குறிக்கும்.

உரிவை தைஇய ஊன்கெடு மார்பின்
என்(பு) எழுந்(து)இயங்கும் யாக்கையர் நன்பகல்
பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு
செற்ற நீக்கிய மனத்தினர் யாவதும்
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை
யாவதும் அறியா இயல்பினர்

என்னும் அடிகள் முருகனை வழிபடும் முனிவர்களைப் பற்றி விளக்குவன.

“மார்பின் எழும்புகள் எழுந்து தோன்றும் உடம்பை உடையவர்கள்; பல பகல் உண்ணாமலே நோன்பால் கழித்தவர்கள்; பகையையும் சினத்தையும் நீக்கிய மனம் உடையவர்கள்; எல்லாம் கற்றவர்களும் அறிய முடியாத மெய்யறிவு பெற்றவர்கள்” என்று முனிவர்களைப் பற்றிய பல செய்திகளைக் கூறும் வரிகள் இவையாகும்.

வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந்து
ஆர முழுமுதல் உருட்டி வேரற்
பூவுடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல.
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல்
இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறம் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுதல் துமியத் தாழை
இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் . . . .
கோழி வயப்பெடை இரியக் கேழலொடு
இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன
குரூஉமயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருந்கோட்டு
ஆமா நல்லேறு சிலைப்பச் சேணின்று.
இழுமென இழிதரும் அருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே. .

பழமுதிர்ச் சோலையின் எழிலழகு

பழமையால் முதிர்ச்சி பெற்ற சோலை அருவி பழம் முதிர்ந்த சோலை அருவி அடித்துக்கொண்டு வரும் பல்வேறு பழப் பொருள்களாவன. அருவி துணிக்கொடியைப் போல் அசைந்தாடிக் கொண்டு வருகிறது. சந்தன மரத்தை வேரோடு உருட்டிக் கொண்டு வருகிறது. சிறுமூங்கிலைப் பூவோடும் புதரோடும் சாய்த்துக் கொண்டு வருகிறது. உயர்ந்த மலை முகடுகளில் பாறைப்பொந்துகளில் சூரியனைப்போல் தேன் கூடுகள் இருக்கும்.அவை சிதையப் பாய்ந்து வருகிறது.

ஆசினிப் பலாவின் பழுத்த சுளைகள் கலந்துவரப் பாய்ந்து வருகிறது. மணம் மிக்க நாகமரப் பூக்கள் (புன்னை மலர்கள்) உதிரும்படி மோதித் தாக்கிக் கொண்டு வருகிறது. பருத்த முகமுடைய முசுக் குரங்குகள் நடுங்கும்படி பாய்கிறது. பெண்யானை மகிழும்படி அலை வீசுகிறது. ஆண்யானைகளின் தந்தங்களின் மீது அலை தத்துகிறது. மழைவெள்ளம் பொன்னிறத்திலும் ஊற்றுநீர் மணிநிறத்திலும் அமைந்து பொன்போன்ற விலைமதிப்புள்ள போருளகளை ஈர்த்துக் கொண்டு பாய்கிறது.

வாழைமரத்தை அடியோடு சாய்த்து உருட்டிக் கொண்டு வருகிறது. தென்னை மரத்தைத் தாக்கும்போது உதிர்ந்த இளநீர்க்குலைகளைப் புரட்டிக்கொண்டு வருகிறது. மிளகுக்கொடி மிளகுகுகுலையோடு சாய மோதுகிறது. புள்ளிமயில் மருண்டு தன் கூட்டத்தோடு ஓடப் பாய்கிறது. காட்டுக்கோழிகளும் அவ்வாறே ஓடும்படி பாயந்து வருகிறது. காட்டுப்பன்றியும் அதனை அடித்துத் தின்னும் புலியும் வெள்ளத்தைக் கண்டு அஞ்சி ஒரே கல்லுக் குகையில் அடைந்து கொள்ளும்படி பாய்கிறது. ஆமா என்னும் காட்டாட்டுக் கடாக்கள் வெள்ளத்தைக் கண்டு அஞ்சித்தம் பெண் ஆமாக்களை அழைக்கும் வகையில் அழைப்பொலியை எழுப்பும்படி வெள்ளம் சாய்கிறது. இழும் என்னும் ஓசையுடன் இறங்கிப் பாயும் இத்தகைய அருவிகளைக் கொண்டதுதான் பழமுதிர் சோலைமலை. இத்தகைய சோலைமலைக்கெல்லாம் உரிமை பூண்ட கடவுள் முருகன்.

̀என திருமுருகாற்றுப்படை இலக்கியம் முற்றுப் பெருகிறது.

நக்கீரர் இயற்கையின் அழகில் மிகவும் ஈடுபாடுடையவர் என்பதை திருமுருகாற்றுப்படை காட்டுகிறது. இதைப் போன்ற நக்கீரர் எழுதிய மற்றொரு நீண்ட பாடலாகிய நெடுநெல் வாடையிலும் இயற்கைக் காட்சிகளைக் காணலம்.

தொல்காப்பியரின் சேயோன் என்ற முருகனுக்கும், முருகன் அல்லது அழகு என்ற தமிழ்த்தென்றல் திரு.வி.க கருத்துக்கும் மாறாக முருகனுக்கு ஆறு தலையும், பன்னிரு கையும் படைத்த முதல் இலக்கியம் திருமுருகாற்றுப்படையே .இது காலத்தால் மிகவும் பின்தங்கிய இலக்கியம் என்ற கருத்தும் உளது. கொங்கு தேர் வாழ்க்கைப் பாடிய நக்கீரரும், இதைப் பாடிய நக்கீரரும் காலத்தால் வேறுபட்ட வர்கள், ஒளவையாரில் பல ஒளவையார் இருப்பது போல எனவும் ஆய்வு கூறுகின்றது.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
11-1-2022

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives