12 Jan 2022 10:47 am
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 13
நேரச் செலவு : 4 நிமையங்கள் / 12-01-2022
சங்க இலக்கியத் தொகுப்பில் ஒன்றான பத்துப் பாட்டுத் தொகுதியில் ஒளி முத்துகளாகத் திகழ்பவை ஆற்றுப்படை இலக்கியங்கள் ஆகும். அதில் இரண்டாவதாகத் திகழ்வது இன்று நாம் காணவிருக்கும் பொருநராற்றுப்படை.
ஆற்றுப்படைகளுள் பாணரால் ஆற்றுப்படுத்துவது பாணாற்றுப்படை; பொருநரால் ஆற்றுப்படுத்துவது பொருநராற்றுப்படை; கூத்தரால் ஆற்றுப்படுத்தப் படுவது கூத்தராற்றுப் படையாகும்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறார்க்க அறிவுறீஇச்
சென்று பயனெ திரச் சொன்ன பக்கமும் (தொல்:புறத்திணை)
என வரும் பகுதியே ஆற்றுப்படைக்கு இலக்கணமாம்.
கலைச் செல்வம் பெருகியிருந்த பழந்தமிழகத்தில் பாணரும் கூத்தரும் பொருநரும் பிற கலைஞர்களும் சிறந்திருந்தனர். முடியுடை வேந்தர் மூவர் ஆண்ட தமிழகத்தில் அவ்வரசர்கள் மீது நல்லிசைப் புலவர்கள் பலர் சொல்லிசையில் நன்மாலை புனைந்தனர். அவர்கள் பரிசில் பெற்று திரும்பும் வழியில் எதிரே வரும் புலவர்களுக்கு “இவ்வழியாகச் சென்று மன்னனைப் பார்த்துப் பரிசில் பெறுக” என்று வழிகாட்டுவது ஆற்றுப் படுத்தல் ஆகும். அவற்றுள் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் மீது பாடிய பாடல்கள் தான் பொருநராற்றுப்படை என்ற இந்த நூலாகும்.
பொருநர் என்போர் ஏர்க்களம் பாடுவோர்; போர்க்களம் பாடுவோர்; பரணிபாடுவோர் என்று பல வகையாக உள்ளனர். இந்தப் பாடலில் வரும் பொருநர் தடார் என்னும் பறையைக் கொட்டுபவர்.
இப்பாட்டு 248 அடிகளால் ஆனதாகும். பாடல்கள் பெரிதும் அகவல் அடிகளால் அமைக்கப் பட்டதெனினும் இடையிடையே வஞ்சி அடிகளாலும் விரவி வருவதால் ஓசை நயம் மிகுந்து காணப் படுகின்றது.
பொருநன் வாயிலாக கரிகால் பெருவளத்தான் புகழனைத்தும் இப்பாட்டின்கண் பாடப்பெற்றுள்ளது. இப்பாட்டு சோழனை “கரிகாலன்” என்றே வழங்குகிறது. இவன் வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சேரனையும், பாண்டியணையும் இறக்கச் செய்தான். இவன் பொருநராற்றுப்படைக்கும், பட்டினப் பாலைக்கும் பாட்டுடைத் தலைவன் ஆவான். எனினும் ஆய்வாளர் சிலர் இதனை மறுக்கின்றனர். கரிகால் வளவனும், திருமாவளவனும் வேறானவர்கள் என்ற கருத்தும் உண்டென்பர்.
இப்பாடலை பாடிய புலவர்: முடத்தாமக் கண்ணியார். இவர் ஓர் இசை வல்லுனராக இருக்கக் கூடும் என்பதை பாடலின் உவமைகள் பல விளம்புகின்றன.
இந்நெடும் பாட்டில் கரிகால் பெருவளத்தானிடம் பரிசு பெற்று மீண்டுவரும் பொருநன், விறலி முதலியவருடன் வள்ளலை நாடிச் செல்லும் வறிய பொருநன் ஒருவனை வழியிடையில் சந்தித்து அவனை விளித்தல், யாழின் வருணனை, விறலி வருணனை, பொருநன் வறுமை, தான் சொல்லும் வள்ளலிடத்துச் செல்லுமாறு வற்புறுத்தல், தான் கரிகாலனைக் கண்டமை, கரிகாலன் தன்னை வரவேற்று விருந்து படைத்தமை, பின்பு பரிசில் நல்கியமை, கரிகாலன் பிறப்பும், போர்ச்செயல்களும் அவனைக் காணின் அவன் புதிய பொருநனை உடையாலும் உணவாலும் மகிழ்வளித்து வேண்டும் அணிகலன்களையும், பிறவற்றையும் நல்குபவன்; எழடி நடந்து வழியனுப்புவான் என்பதும், கரிகாலன் சோழ நாட்டு வளம், ஐந்திணை வருணனைகள், காவிரியாற்றின் சிறப்பு ஆகிய அனைத்தும் காணப்படுகின்றன.
இம்மன்னன் வெண்ணிப் போரை
“நளியிரு மந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னற்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பரந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறபுண் ணாணி வடக்கிருந்தோனே”
என்ற வண்ணிக் குயத்தியாரின் புறநானூற்றுப் பாடல் மூலம் அறியலாம்.
பாடினியின் தோற்றப் பொலிவு குறித்துப் பாடுகையில்
அறல்போல் கூந்தல் பிறைபோல் திருநுதல்
கொலைவில் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலவுறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்க்குறை கருவி மாண்கடை அன்ன
பூங்குலை ஊசல் பொறைசால் காதின்
நாண் அடச் சாய்ந்த நலங்கிளார் எருத்தின்
ஆடமைப் பணைத்தோள் அரிமயிர் முன்கை
நெடுவரை மிசைய காந்தள் மெல்விரல்
கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி ஆகத்(து)
ஈர்க்கிடை போகா ஏர்இள வனமுலை
நீர்ப்பெயர்ச் சுழியின் நிறைந்த கொப்பூழ்
உண்டென உணரா உயவு நடுவின்
வண்(டு) இருப்ப்(பு) அன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கிற்
பொருந்துமயிர் ஒழுகிய திருந்துதாட்(கு) ஒப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
பெடைமயில் உருவில் பெருந்தகு பாடினி. ( 25-42)
தொகை நூல்களில் புலவர் பெருமக்கள் மகளிரின் அணிநலன்களை, ஏதோ ஓருறுப்பு அல்லது இரண்டு உறுப்புகளை விவரித்துத் தங்கள் புலமை ஆற்றலை காட்டிய நிலையில் இங்கு ஒரு பெண்ணின் அழகினை தலைமுதல் கால்வரை அனைத்து அழகினையும் விவரிக்கும் விதம் எவ்வளவு அழகானப் பகுதி. ஒவ்வொரு உறுப்பை காட்சிப் படுத்தும் போதும் இயற்கை உவமைகள் கையாளப் பட்டுள்ளன.
கரிகாலன் நாட்டில் பாயும் காவிரியின் மேன்மை குறித்துப் பாடப்பட்டுள்ள செய்யுளில்
மன்னர் நடுங்கத் தோன்றிப் பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவும் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழழ்த்தவும் மற்றக்
கருவி வானம் கடற்கோள் மறப்பவும்
பெருவறன் ஆகிய பண்பில் காலையும்
நறையும் நரந்துமும் அகிலும் ஆரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த்தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளொர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குலைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கும் நாடுகிழ வோனே ( 232- 248)
இதில் நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் குறைதோறும் பொறை உயிர்த்து… புனலாடும் மகளிர் கதுமெனக் குடைய என்ற வரிகள் நறை, நரந்தம், அகில், சந்தனம் ஆகியவற்றை மணப்பொஎருளாகக் காவிரி நீர்
கொண்டுவந்து, புனலாடும் மகளிர்க்குப் பரிசிலாக வழங்க என்ற பொருள் பட இயற்றப் பட்ட வரிகளாகும்.
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
12-1-2022
We can not do it alone. Join with us.