13 Jan 2022 2:33 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 14
நேரச் செலவு : 5 நிமையங்கள் / 13-01-2022
சங்க இலக்கியத் தொகுப்பாக விளங்கும் பத்துப் பாட்டு வரிசையில் மூன்றாவதாக இடம் பெரும் நூல் சிறு பாணாற்றுப்படை ஆகும். ஆற்றுப் படை இலக்கியத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்நூலாகும். மன்னனிடம் பரிசு பெற்று வந்த சிறுபாணன் ஒருவன் வழியில் மற்றொரு சிறுபாணன் ஒருவனைக் கண்டு அவனை அவ்வள்ளல் பால் ஆற்றுப் படுத்துவதாகப் பாடப்பெற்ற ஒன்று இதுவாகும். பாணர் என்போர் பாடுபவர். இவர் யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் எனப் பலராவர். இதில் கூறப் படுபவர் யாழ்ப்பாணர். அதனுள்ளிலும் சிறுபாணர், பெரும்பாணர் என்று வகையுண்டு.
இந்த நூலில் வருகின்ற பாணன் சிறுபாணன் ஆவான்.
இதனைப் பாடியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இவர் ஓர் நல்லிசைப் புலவர்.
சிறந்த செந்தமிழ் நூலான சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் வள்ளல் தன்மை கொண்ட ஓய்மா நாட்டு நல்லியக் கோடன் என்பவன் ஆவான். இவன் மாவிலங்கை என்னும் தலைநகரிலிருந்து ஓய்மா நாட்டை ஆண்டு வந்தான்.
தமிழ்நாட்டில் சிறப்பாகப் பேசப்படுகின்ற கடையேழு வள்ளல்கள் பேகன், பாரி, காரி, ஓரி, அதியமான், ஆய் அண்டிரன், நள்ளி ஆகியோரின் வள்ளல் தன்மையினைச் சிறப்பாகப் பேசி அவர்களை விடச் சிறந்தவன் நல்லியக் கோடன் என்னும் பொருள் பட அமைந்த பாடல்கள் அவன் கொடையின் மாண்பை உணர்த்துவன. மேலும் குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைகளின் வண்ணனை, பாணனின் வறுமை நிலை, எயிற்பட்டினம், வேளூர், ஆமூர் ஆகிய ஊர்களின் விவரங்கள், வஞ்சி, உறந்தை, மதுரை ஆகிய நகரங்களின் காட்சி அமைப்புகள் என பலவும் படிக்கப் படிக்க உள்ளத்திற்கு உவகை அளிப்பனவாகும்.
காட்டிடத்தே திரிகின்ற மயிலானது குளிரால் வருந்துகிறது போலும் என எண்ணி அம்மயிலுக்கு தன் போர்வையை அளித்த வள்ளல் தன்மை மிகுந்த பேகனை
வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான் மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் –
என்ற வரிகள் மூலமும்
முல்லைச் செடியானது தன் தேரைத் தடுத்திடவே, அது பற்றிப் படர்வதற்கு தன் தேரினை வேண்டுகின்றது போலும் என்று கருதி தன் பெரிய தேரினை அளித்திட்ட பறம்பு மலை வேந்தன் பாரி என்னும் வள்ளல் குறித்து
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள் ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்
என்ற வரிகள் மூலமும்
நள்ளி என்ற பெயர் கொண்ட மலைநாட்டு மன்னன் குறித்து
நட்டோர் உவப்ப நடைப்பரி காரம்
முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத்
துளிமழை பொழியும் வழிதுஞ்சு நெடுங்காட்டு
நளிமலை நாடன் நள்ளி –
எனப் பாராட்டும் வரிகள் நயம் பயப்பவை.
இவற்றைத் தாண்டி நல்லியக் கோடனின் நற்பண்புகள் குறித்து
செய்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும்
இன்முகம் உடைமையும் இனியன் ஆதலும்
செறிந்து விளங்கும் சிறப்பின் அறிந்தோர் ஏத்த ( 207-209)
பாடப்பெற்ற இவ்வடிகள் திருக்குறளை நினைவூட்டுவது போன்று அமையப் பெற்றுள்ளது இந்நூலின் சிறப்புகளில் ஒன்றாகும்.
“மடமான் நோக்கில் வாள்நுதல் விறலியர்
நடை மெலிந் தசைஇ நல் மென் சீறடி
கல்லா இளையர் மெல்லத் தைவர
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ”
என்ற செய்யுள் வரிகளின் மூலம் பாணனின் கூட வரும் கற்பில் சிறந்த விறலியர் மான் போலும் மருளும் கண்களை உடையவர்கள், ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடையவர்கள் இவர்கள் காட்டு வழியே நடந்து வந்ததால் வருந்தி மெலிந்த பாதங்களைப் பிடித்துவிடும் இளைஞர்கள,. முறுக்கேறிய இன்னிசை எழுப்பும் சிறிய யாழைத்தம் இடப்பக்கம் அணைத்துக் கொண்டு நட்ட பாடை என்னும் பண் இசைத்துக் கொண்டு செல்கிறான்.
நிலையில்லாத இவ்வுலகத்தில் பாடிப் பரிசில் பெற வருவோர்க்கு உதவி செய்து, நிலைத்தப் புகழைப் பெற்று வாழ விரும்பும் வள்ளண்மை உடையவர்களைத் தேடி நடந்து செல்கின்றனர். வருத்தும் பசித்துன்பமாகிய பகையைப் போக்கிக் கொள்ள, வறுமைத் துயர் துரத்த, வழி நடத்தும் துன்பம் தீர வந்து இங்கு இளைப்பாறும் அறிவில் சிறந்த இரவலனே! என்று புலவர் கூறுகிறார். நடந்து வரும் பாதை இவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் தன் வாழ்வாதாரத்திற்காக ஒரு இனக்குழு வாழ்ந்துள்ளது. புலமையும் வறுமையும் பிரியாதது என்பதைப் போல் பாணர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது
சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது என்றாலும் தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்வது வாழ்வியல் நிலையாக உள்ளது. இத்தகைய பாணனின் வறுமை என்பது,
“……………….இந்நாள்
திறவாக் கண்ண சாய் செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ்சேர் முதுசுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைந்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
அழிபசி வருத்தும் வீடப் பொழில்கவுள்…..
என்ற பாடல் வரிகள், பாணனின் சமையல் கூடம் எவ்வாறு உள்ளது என்பதை விவரிக்கிறது. கண்விழிக்காத வளைந்த நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் வலி பொறுத்துகொள்ள முடியாத அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாய். இத்தகையான ஏழ்மையான வீடு பாணன் வீடு. பாணன் வீட்டு அடுப்படியில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது. இதுபாணனின் வறுமை நிலை. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பு மேல்கூரை இடிந்து விழுவது போல் உள்ளது. கரையான் பிடித்த சுவர். வீடெல்லாம் புழுதி. புழுதியிலே பூத்த காளான்.
இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறு, வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற வேளைக் கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் இல்லாமல் சமைத்த உணவு. இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர் என்று விளம்புவதாக உள்ளது.
இப்படிப்பட்ட பாணனின் வறுமை ஒரு சமூக நோயாக இருந்துள்ளது. இதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற நல்லியல்பு வள்ளல்களும் இருந்துள்ளனர் என்பது நமக்குக் கிடைக்கும் செய்தியாகும்.
இவ்வாறாக ஏழு வள்ளல்களின் அரிய வரலாறு நல்லியக் கோடனின் கொடைச் சிறப்பு, ஊர்களின் சிறப்பு, குறிப்பறிந்து கொடுக்கும் தன்மை என பல செய்திகளின் கதம்பம் சிறுபாணாற்றுப்படை ஆகும். படித்துக் களிப்புறுவீர் தமிழ் மக்களே!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
13-1-2022
We can not do it alone. Join with us.