14 Jan 2022 11:18 am
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 3 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 15
நேரச்செலவு : 2 நிமையங்கள் / 14-01-2022
இன்று சுறவம் (தை) திங்கள் முதல் நாள் – தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம்! உழைப்பாளர் அனைவரும் பொலிவுடன் கொண்டாடும் பொங்கல் நன்னாள்; தமிழர் திருநாள்!
நற்றமிழ் உறவுகளுக்கு எம் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்
இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக கழனி விளைந்து கதிரைப் பறித்து, கரும்பை நட்டுக் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் நன்னாள். தமிழர்களின் உயிர்ப்பாய், உணர்வின் உறுதியாய், உழைப்பின் தொடர்ச்சியாய்த் திகழ்வது தைப்பொங்கல் மட்டுமே! குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என நிலம் திரிந்தாலும் மருத நிலத்தின் மாட்சியே உலக மக்களுக்கெல்லாம் உணவை வழங்கிய உழவுத் தொழிலாகும்.
எனவே தான் நம் முப்பாட்டன் வள்ளுவன்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை ( குறள் 1031)
எனப் பகர்ந்து உழவுத் தொழிலின் உயர்வை உலகறியச் செய்தான்.
வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்
கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்
போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா
உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்
என்ற புறநானூற்றுப் பாடல் தைத் திருநாளில் செந்நெல்லினை அறுத்துக் கரும்பினைக் கட்டி, கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் விழாக் கொண்டாடப் பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவன் பாடுகின்றான்.
அதைப் போல சிலப்பதிகாரத்தில்
புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து
என்ற வரிகள் பொங்கல் வைத்து வழிபடும் முறையைச் செப்புகிறது.
மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல் – (சீவ.சிந்த)
என சீவக சிந்தாமணியில் புதுப்பானை பொங்கல் குறித்து நேரடியாகப் புலப்படுத்தப் படுகிறது. இது உலகெங்கும் அறுவடைத் திருவிழாவாக வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப் படுகிறது.
சங்க காலம், சங்கம் மருவிய கால இலக்கியங்களில் உயிர்த் தொழில் உழவும் பொங்கலும் பேசப் பட்டாலும் பெரும்பாணாற்றுப் படை என்ற இலக்கியத்தில் தான்
குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடை நவில் பெரும்பகடு புதவில் பூட்டிப்
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பு எறிந்து உழுத துளர் படு ……. (பெரும்பாணாற்றுப் படை)
ஏர்க் கலப்பை, கொழு, உழவர், காளைகள், நாற்று நடுதல், களையெடுத்தல், முல்லை நில புன்செய் உழவு, மருத நில நன்செய் உழவு, போரடித்தல், களத்து மேடு, நெல்மலை, வைக்கோல், நெற்குதிர், உழவர் விருந்தோம்பல் என அனைத்தையும் பேசும் ஓர் அற்புதமான இலக்கியமாகத் திகழ்வது பெரும் பாணாற்றுப்படை யாகும்.
இன்று தொடங்கி நாளை வரை அவைகள் குறித்துப் பேசவும் எழுதவும் முடியுமெனினும் நாளை உழவர் திருநாள், மாட்டுப்பொங்கல் கொண்டாட்டத்தையும் சேர்த்து அவ்விலக்கியத் துளிகளைச் சுவைப்போம்.
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்புக்கு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
14-1-2022
We can not do it alone. Join with us.