15 Jan 2022 12:50 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 16
நேரச்செலவு : 6 நிமையங்கள் / 15-01-2022
இன்று சுறவம் (தை) திங்கள் இரண்டாம் நாள் – உழைக்கும் தமிழர் அனைவரும் பொலிவுடன் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் நன்னாள்; இது உழவர் திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது. தமிழ் நாடு அரசு இந்நன்னாளை திருவள்ளுவர் நாள் எனவும் அறிவித்துள்ளது.
நற்றமிழ் உறவுகளுக்கு எம் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்
இயற்கைக்கும் தன்னுடன் உழைக்கும் விலங்குகளுக்கும் நன்றி செலுத்தும் விதமாக திருநாளாகக் கொண்டாடுவது தமிழினம் மட்டுமே!
எனவே தான் நம் பொதுமுறைப் புலவர் திருவள்ளுவர்
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை ( குறள் 1031)
என்று உயர்வாகப் பகர்ந்து வைத்தார்.
சங்க இலக்கியங்களிலும் பின்னர் செயப்பட்டச் சில காப்பியங்களிலும் பொங்கல், உழவு குறித்துப் பேசப்பட்டிருப்பினும் நாம் இன்று அறிமுகம் செய்யவிருக்கும் பெரும் பாணாற்றுப்படை முகாமையான ஒரு நூலாகும்.
பத்துப் பாட்டுத் தொகுப்பில் பெரும்பாணாற்றுப் படை என்னும் இந்நூல் ஆற்றுப்படை நூல்களில் பெரியதாகும். தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த இளந்திரையன் என்ற மன்னனின் மாட்சி குறித்தும், அவனுடைய ஆட்சித் திறன், நாட்டின் இயல்பு, கடற்கரை எழில், கலங்கரை விளக்கம், மலை வளம் குறித்தும் பாடப்பட்ட நூல் ஆகும்.
இதைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் சங்க காலப் புலவராவார். பத்துப் பாட்டில் வகைப் படுத்தப் பட்டுள்ள பட்டினப் பாலை என்னும் இலக்கியத்தைப் படைத்தவரும் இவரே ஆவர்.
அகவல் ஓசையதாகிய ஆசிரியப் பாவால் இயற்றப் பட்டுள்ளது.
பெரும்பாண், பெரிய பாண் எனப் பொருள் படும். அதாவது பெரிய பாட்டு என்பதாகும். அக்காலத்தில் பாடுவதற்கென ஒரு வகுப்பினர் இருந்தாலும் அவருள் பெரிய யாழைத் தாங்கி அதன் நரம்புகளை வலித்து இசையோடு ஒன்ற இனிது பாடுவோர் பெரும்பாணர் என அழைக்கப் பட்டனர். பாணரை அவர் பண்பால் பாண் என்று கொண்டு அவரை ஆற்றுப் படுத்தியமையால் பெரும்பாணாற்றுப் படை என பெயர் கொண்டதாகும்.
தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் பெரும்பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட மற்றொரு பெரும்பாணனிடம் தொண்டைமான் இளந்திரையனைச் சென்று பார்த்து தன் வறுமையைப் போக்கிக் கொள்ளுமாறு வழிப்படுத்துவதாக இவ்விலக்கியம் படைக்கப் பெற்றுள்ளது.
இந்த இலக்கியம் 500 அடிகளைக் கொண்ட பாடல்களால் ஆனதாகும்.
அரிதாகிய இந்நூலில் சீரிய கருத்து நயம், உவமை அழகு, அரிய தொடர்கள் என அனைத்தும் கற்போரை கவர்ந்திழுக்கக் கூடிய ஒன்றாகும். பழங்காலத்து நாடு, நகரம், புள், விலங்கு, பழக்க வழக்கம் என பல்பொருள் பற்றிப் பேசுவதால் இதை ஒரு வரலாற்று நூலாகவும் கொள்ளலாம். இதில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்கள், அவற்றின் ஒழுக்கம் காட்சிப் படுத்தப் பெற்றுள்ளது.
உமணர், எயினர், கானவர், கோவலர், ஆயர், வலைஞர் என பல வகையான மக்கள், அவர் தம் குடியிருப்புகள், வாழ்க்கை நிலை, உணவு, விருந்தோம்பல் பற்றியச் செய்திகள் வியப்பூட்டும் வகையில் உவமை நயத்துடன் சொல்லப் பட்டுள்ளது.
அகலிரு விசும்பில் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரு பல் கதிர்ப் பருதி…..
பகற்பொழுதை உலகத்தே தோற்றுவிக்கும் ஞாயிறு எனத் தொடங்கி
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே….
என இறுதியாக 500 அடிகளுடன் முற்றுப் பெறுகிறது.
பாணன் தன் யாழின் பெருமை வருணனையுடன் தொடங்கி அவன் வறுமையைக் கூறுவதாக அமைந்த பாடல்
வெந்தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும்
தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது,
பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போலக்,
கல்லென் சுற்றமொடு கால் கிளர்ந்து திரிதரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண!
மார்பின் இடப்பக்கம் அணைத்துக் கொண்டு கொடிய வெப்பம் வீசும் கதிரவனுடன் நிலவும் வலமாகத் திரிகிற குளிர்ந்த கடல் சூழ்ந்த இவ்வுலகில் உங்களைப் பாது காப்பவரைப் பெறாமல் – மழையின்றி அனலாய் இருக்கிற மலைப் பகுதியில் பழுத்த மரத்தைத் தேடி அலையும் பறவைகள் போல் – அழுகை ஒலியுடைய சுற்றத்தாருடன் உடல் பொலிவற்று கற்ற கலையை வெறுக்கும் உள்ளத்துடன் வருகின்ற பாணனே!
குறிஞ்சி நில மக்கள் : மகளிர் ஆடவர் நிலை
யானை தாக்கினும், அரவு மேல் செலினும்
நீல் நிர விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூழ்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக் கூட்டு உணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத்து அன்ன, புல் அணல் காளை
செல் நாய் அன்ன கருவில் சுற்றமொடு
கேளா மன்னர் கடி புலம் புக்கு
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி
ஒல் அடு கள் இன் தோப்பி பருகி
மல்லல் மறத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச்
சிலை நவில் எறுழ்த்தோ ஓச்சி வல்ன் வளையூஉப்
பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை
முரண்தலை கழிந்த பின்றை…..
குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் வீரமும் துணிவும் மிக்கவர்கள். கருவுற்றிருக்கும் பெண்கூட யானை தாக்கினாலும் பாம்பு தங்கள் மேல் ஊர்ந்து சென்றாலும் வானத்தில் பேரிடி இடித்தாலும் அச்சம் அடைய மாட்டாள். ஆண் புலி போன்ற ஆண் மகன் பகைவரின் பசுக் கூட்டத்தைக் கவர்ந்து வந்து கள்ளுக்கு விலையாகக் கொடுத்து அந்தக் கள் மட்டுமன்றி வீட்டில் அரிசியால் ஆக்கியத் தோப்பிக் கள்ளையும் பருகி ஆட்டிறைச்சியைத் தின்பான். பகல் வேளையில் மாட்டுத் தோலால் செய்த தண்ணுமை என்ற மத்தளம் கொட்டத் தன் வலிமையான தோள்களை வில் ஏந்திய இடத்தோளை வலப் பக்கமும் வலப் பக்கத் தோளை இடப் பக்கமும் சாய்த்து வளைத்து ஆடி மகிழ்வார்கள்.
மேலும், முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகளுக்கும் மக்கள் வாழ்வியல் சூழலைப் படம் பிடித்துக் காட்டும் எண்ணற்றப் பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுவது என்று தடுமாற்றம் கொள்ளும் அளவு ஓர் அழகுத் தொகுப்பாக அமைந்துள்ளது பெரும் பாணாற்றுப்படை.
………………. செஞ்சால் உழவர்
நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டிப்
பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்
உடுப்பு முகமுழுக் கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பு எறிந்து உழுத துளர்படு துடவை
அரிபுகு பொழுதின் இரியல் போகி,
புன்செய் நிலத்தில் உழவர்கள் காளைகளை ஏரில் பூட்டி, கொழு நன்கு மூழ்கும் படி பலமுறை நிலத்தை உழுதனர்; விதைத்தனர், களை எடுத்தனர் என்ற செய்தி தமிழர் தொன்மைப் பயிர்த்தொழிலை பறை சாற்றுவதாகும்.
அதைப் போன்று நன்செய் நில வேளாண்மையைக் கீழ்க் கண்ட வரிகள் புலப்படுத்தியுள்ளன.
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின்
உழாஅ நுண்தொளி நிரவிய வினைஞர்
முடிநாறு அழுத்திய நெடுநீர்ச் செறுவில்
களைஞர் தந்த கணைக்கால் நெய்தல்
என்ற வரிகளில் தென்படும் வினைஞர் என்ற சொல் உழவரையும், களைஞர் என்ற சொல் களை எடுக்கும் தொழிலாளர்களயும் சுட்டுகிறது. எவ்வளவு அருமையானத் தொழில் பெயர்கள்! அதுபோலவே பிறிதொரு இடத்தில் மீன்பிடித் தொழிலைச் செய்யும் மக்களை “வலைஞர்” என்ற சொல்லாலும் பெரும்பாணாற்றுப் படைச் சிறப்பித்துள்ளது.
நெற்குவியல் குறித்தும் மருத நில உழவர் பெருங்குடியினர் வளம் செப்பும் அடிகள்
செம்பொன் மலையின் சிறப்பத் தோன்றுந்
தண் பணை தழீஇய தளரா இருக்கை…
என்பனவாகும்.
ஏணி எய்தா நீள்நெடு மார்பின்
முகடு துமித்து அடுக்கிய பழம்பல் உணவின்
குமரி மூத்த கூடு ஓங்கு நல்இல்
உழவர்களின் நல் இல்லங்களில் ஏணீயும் எட்ட முடியாத அளவு உயரமான நெற் குதிர்கள் இருந்தன என்ற செய்தியை மேற்கண்ட வரிகள் விளம்புகின்றன!
உழவர்களின் விருந்தோம்பல் குறித்த செய்தினை
தொல்பசி அறியாத் துளங்க இருக்கை
மல்லல் பேர் ஊர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணல் வல்சி
மனைவாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர்!
இதில் சொல்லப் பட்டுள்ள “தொல்பசி அறியா” – பசி என்பதை அறியாத வளமான ஊர் எனவும், வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி – உழவர் தரும் வெண்ணெல் உணவு என்றும் பொருள் படும்! தமிழர் வேளாண்மையின் சிறப்பை இதைவிட எங்கனம் எடுத்துக் காட்ட இயலும்?
செவ்வியல் இலக்கியம் குறித்த அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக யான் எழுதும் இத்தொடரில் இன்று இயல்பாகவே உழவர் திருநாளில் உழவு, உழவர், நெற்போர்க் களம், நன்செய், புன்செய் நிலம் குறித்து விவரிக்கும் பெரும்பாணாற்றுப் படை என்ற இந்த இலக்கியம் மிகவும் பொருத்தமாக இன்று அமைந்துள்ளது உழவர் நாள் விழாவின் சிறப்பாகும்.
இன்னும் எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள்! மலைத்தேன் இனிமை கண்டு நானும் மலைத்தேன்! யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
15-1-2022.
We can not do it alone. Join with us.