16 Jan 2022 10:37 am
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளி போன்று பரந்து விரிந்த பார்வையில் அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 17
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 16-01-2022
தமிழர் தம் பெரும் இலக்கியச் சுரங்கமான சங்க இலக்கியங்களில் பெருந்தொகுப்பாக விளங்குபவை எட்டுத் தொகை மற்றும் பத்துப் பாட்டு நூல்களாகும்.
பத்துப் பாட்டு நூல்கள் 103 அடி முதல் 782 அடி வரியிலான அமைந்த பத்து இலக்கியங்களின் தொகுப்பாகும். அதில் 103 அடிகளில் சிறியதாய் அமைந்துள்ள ஓர் இலக்கியமே “முல்லைப் பாட்டு” ஆகும்.
திருமுருகாற்றுப் படை முதலாக மலைபடுகடாம் ஈராக உள்ள பத்துப் பாட்டு வரிசையில் ஆறாவது இடம் பெறுவது முல்லைப் பாட்டு.
முல்லைப் பாட்டு அகத்திணைச் செய்யுளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய முப்பொருளையும் குறைவறக் கொண்டுள்ள ஓர் அருமையான இலக்கியம்.
காடும் காடு சார்ந்த பகுதியும் முல்லைக்குரிய நிலம், கார்காலமும், அக்காலத்து
மாலையும் முறையே அந்நிலத்துக்குரிய பெரும் பொழுது, சிறுபொழுதுமாகும்.
“மாயோன் மேய காடுறை உலகம், காரும் மாலையும் முல்லை” என்பன தொல்காப்பியம் கூறும் கூற்று ஆகும்.
இத்துணை சிறப்பு அமைந்த முல்லைப் பாட்டை பாடி நமக்களித்தப் புலவர் காவிரி பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகன் நப்பூதனார் என்பவராவார்.
இதன் உள்ளடக்கமாக கார் பருவத்தின் வருகை, பெருமுது பெண்டிர் விரிச்சி, தலைவியைத் தேற்றுதல், பெருமுது பெண்டிர் தேற்றல் மொழி, பாசறை அமைப்பு, வீரர்கள் தங்கும் படைவீடுகள், நாழிகைக் கணக்கர், பாசறையில் வெற்றி முழக்கம், தலைவன் பிரிவு, தலைவி துன்பம், அரசனின் வெற்றி, மழையினால் செழித்த முல்லை நிலம், அரசன் தேரின் வருகை என பலப் பிரிவுகளில் பாடல்கள் உள்ளன.
தமிழ் இலக்கியங்களில் பெரும் பாலும் உலகை முன்னிறுத்தியே தம் பாடல் களைத் தொடங்குவது போன்றே முல்லைப் பாட்டும் தொடங்கிறது.
நனம் தலை உலகம் வலைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்
பாடிமிழ் பனிக்கடல் வலன் ஏர்பு
கோடுகொண்டு எழுந்த கொடுஞ்செலல் எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறுபுன்மாலை
அருங்கடி மூதூர் மருங்கிற். போகி
யாழிசை யினவண் டார்ப்பு நெல்லோடு
நாழி கொண்ட நறுவீ முல்லை
அரும் பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப….
நனந்தலை உலகம் வளைஇ – அகன்ற நிலப் பரப்பை உடைய உலகத்தை வளைத்துக் கொண்டு எனத் தொடங்குகின்றது. கார் காலத்தின் வருகையை அறிவிக்கும் விதமாக அமைந்த பாடல்.
அரிய காவலை உடைய பழைய பேரூரின் புறநகருக்குச் சென்று நாழி கொண்ட நெல்லோடு யாழ் இசை போல் இனிமையாக ரீங்காரம் செய்யும் நல்ல இனத்தைச் சேர்ந்த வண்டுகள் மொய்த்து ஒலிக்கும்படி அரும்புகள் மலரும்; நறுமணம் பரப்பும் முல்லை மலர்களைத் தூவி கை கூப்பி பெருமைக்குரிய மூத்த மகளிர் நற்சொல் கேட்டு நிற்க… என்ற பொருள் பட விரிகிறது.
தமிழர் இறைவழிபாடு என்பது உலகம், நெல்லும் மலரும் தூவி ஊர்ப்புறத்தே கோயில் கொண்டிருக்கும் மூத்த மகளிரை கை கூப்பி வணங்குவது என்பதை
“நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்” என்ற புற நானூற்று வரிகளை உறுதி செய்வது போல உள்ளது.
அரசனின் பாசறை அமைப்பு குறித்து எழுதப் பட்ட பாடல்-
வேறு பல் பெரும் படை நாப்பன், வேறு ஓர்
நெடுங் காழ்க் கண்டம் கோலி, அகம் நேர்பு
குறுந் தொடி முன்கை, கூந்தல் அம் சிறு புறத்து
இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந் திரிக் கொளிஇ
கையமை விளக்கம் நந்துதொறும் மாட்ட
வடைவீரர்களின் இருப்பிடத்திற்கு நடுவே தனியொரு பாசறை அரசனுக்கும் அமைந்திருப்பது, இரவைப் பகலாக்கும் விதத்தில் பெண்கள் பாவை விளக்கில் திரியிட்டு நெய்யிட்டு பாசறையில் விளக்கேற்றுவது போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன.
மெய்க் காப்பாளர் குறித்து வரும் மற்றொரு பாடலில்
“நெடுநா ஒண்மணி நிழத்திய நடுநாள்
அதிரல் பூத்த ஆடுகொடிப் படாஅர்
சிதர்வரல் அசைவளிக்கு அசைவதாங்கு
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடை
பெருமூதாளர் ஏமம் சூழ”.
நீண்ட நாக்கினை உடைய ஒள்ளிய மணியின் ஓசை அடங்கிய நள்ளிரவில் மோசி மல்லிகை மலர்ந்த அசைகின்ற கொடிகள் படர்ந்த சிறு தூறுகள் மெத்தென வீசும் காற்றுக்கு ஆடுவது போல வெண்துகிலால் தலைப்பாகை கட்டி மேனியைச் சட்டையால் போர்த்திக் கொண்டு தளர் நடையினையும் உயர்ந்த ஒழுக்கத்தையும் கொண்ட மிக முதிர்ந்த மெய்க்காப்பாளர் அரசனுக்கு காவலாக சூழ்ந்து நிற்பர் என விளக்குகிறார்.
முல்லைப் பாட்டு என்ற சிறிய நூலில் பொதிந்து கிடக்கும் ஓர் அருமையானச் செய்தி நாழிகைக் கணக்கர் என்பதாகும். மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் நேரம் எவ்வளவு முகாமையானது, அதை எவ்வாறு பண்டைத் தமிழினம் கணக்கிட்டது என்ற அருமையான செய்தி இந்த இலக்கியத்தின் சிறப்பாகும்.
நாடாளும் அரசர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் விலை மதிக்க ஒண்ணாச் சிறப்புடயவை. இன்ன பணி, இன்ன நாளில், இன்ன நாழிகையில் முடிக்கப் பட வேண்டும் என முறை வகுத்துப் பணியாற்றக் கடமைப் பட்டவன். ஆனால் காலம் காட்டும் கருவி இல்லாத காலம். என்றாலும் காலம் காணும் வழிமுறையைப் பின் பற்றியவர்கள் தமிழர்கள்.
ஒரு கலத்தில் நிறைத்து வைக்கும் நீரைச் சின்னஞ்சிறு துளை வழியாகச் சிறுகக் சிறுகக் கசியவிட்டு அவ்வாறு கசியும் நீரை, அவ்வபோது அளந்து காண்பதன் மூலம் நாழிகைக் காணும் முறையொன்றினை பழந்தமிழர் அறிந்திருந்தனர். அக்கருவிக்கு “குறுநீர்க் கன்னல்” என்பது அவர் இட்ட பெயர்.
கசியும் நீரை அவ்வப்போது அளந்து நாழிகை அறிவிப்பதற்கென்றே சிலர் அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்கள் அதில் செய்யும் சிறு தவறு அரசன் செயல் முறைகளையே அடியோடு தகர்த்து விடுமாதலால் அளந்து கணக்கிடுவதில் ஒரு சிறிதும் தவறு செய்யாத சிறந்த கணக்காயர்களையே தேர்ந்தெடுத்து அவர்பால் அப்பணியை ஒப்படைத்து வைப்பர்.
இவ்வாறு நாழிகை அறிவிக்க வேண்டுவது அமைதியான அரசியல் பணிகள் நடைபெறும் அரண்மனை வாழ்க்கையிலும், பகைப் படையையும் காலம் அறிந்து அக்காலத்தை தவறவிடாது விழிப்பாயிருந்து தாக்க வேண்டிய போர்க்கள வாழ்க்கைக்கு மிகமிகத் தேவை.
பகை நாட்டு எல்லையில் அமைக்கப் பட்டிருக்கும் பாசறையிலும் நாழிகைக் கணக்கர் குறுநீர்க் கன்னலோடு வந்திருந்து ஒவ்வொரு நாளினையும் நாழிகைகளயும் வரையறுத்துப் பணிபுரியும் அரசன் முன் கை கூப்பித் தொழுதவாறே கடந்து போன நாழிகை இவ்வளவு என்பதை ஒவ்வொரு பணி தொடக்கத்திலும் அறிவுறுத்திக் கொண்டேயிருப்பர்.
(1 நாளிகை = 24 நிமையம், 2 ½ நாளிகை = 1 மணி நேரம்; 4 மணி நேரம் -1 சிறு பொழுது)
இந்த அரிய நிகழ்வைப் படம் பிடித்துக் காட்டும் முல்லைப் பாட்டு
பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலிஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப ……
என்று செப்புகிறது. இது போலவே பாசறை அமைப்பு, யானைப் பாகரின் செயல்,
பாசறையில் அரசன் தனி இருக்கையின் மாண்பு, தலைவியின் தன்மை, தலைவன்
தேர் வருகை என பல செய்திகளைச் சுவைபடக் கூறும் ஓர் அகத்திணை, புறத்திணை கலந்த இலக்கியம் முல்லைப் பாட்டு ஆகும்.
கோடற் குவிமுகை யங்கை யவிழத்
தோடார் தோன்றி குருதி பூப்பக்
கான நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்குகதிர் வரகின்
திரிமருப் பிரலையொடு மடமா னுகள
எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின்
முதிர்காய் வள்ளியங் காட்பிறக் கொழியத்
துனைபரி துரக்குஞ் செலவினர்
வினைவிளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே…….
என முடியும்.
எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
16-1-2022.
We can not do it alone. Join with us.