துளி 18 – மதுரைக் காஞ்சி

17 Jan 2022 4:06 pm

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 18
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 17-01-2022

மதுரைக் காஞ்சி

பத்துப் பாடல் தொகுப்பில் மிக நீண்ட இலக்கியம் மதுரைக் காஞ்சியாகும். பாண்டிய நாட்டின் தலைநகர் பழந்தமிழ் மதுரை குறித்தச் சிறப்புகளை இந்நூலில் காணலாம்.

காஞ்சி என்பது உலகம் நிலையற்றது என்பதைக் கூறும் ஒரு தமிழ்த் திணை.
இத்திணைப் பொருளை மதுரையோடு இணைத்து பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு புலவர் கூறியதால் இது “மதுரைக் காஞ்சி” எனப் பெயர் பெற்றது.

மன்னனின் குறைகளைச் சுட்டிக் காட்டி அவனை அறச்செயல்களில் புகும்படி செய்விப்பது தம் கடமை என்று அக்காலப் புலவர்கள் கருதியுள்ளனர். அவற்றை ஏற்றுச் செயல்படும் மனப் பக்குவமும் அக்கால மன்னர்களுக்கு இருந்தது என்பதை இவ்விலக்கியம் நமக்கு உணர்த்துகின்றது.

இந்த நூல் 782 அடிகள் கொண்ட பாக்களால் ஆனதாகும். பத்துப் பாட்டு நூல்களில் இதுவே நீளமானது ஆகும்.

இந்த இன்சுவைப் பனுவலை இயற்றியவர் மாங்குடி மருதனார் என்பவராவார். மாங்குடி என்னும் ஊர் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் (தற்போது தென்காசி மாவட்டம்) பகுதியில் உள்ளது. சங்ககாலத்தில் இந்த மாங்குடியில் வாழ்ந்த புலவரை மாங்குடிக் கிழார், காஞ்சிப் புலவன் என்றும் அழைப்பர்.

“ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலை வனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர்”.
– என்ற புற நானூற்றுச் செய்யுள் மூலம் இவர் மேன்மை புலப்படுகிறது.

இவர் காலம் : கடைச் சங்க காலம்

தமிழின் மரபு வழிச் சிந்தனையாக மதுரைக் காஞ்சியின் தொடக்கமும் உலகை முன்னிறுத்தியே எழுதப் பட்டுள்ளது.

ஓங்குதிரை வியன்பரப்பில்
ஒலி முந்நீர் வரம்பாகத்
தேந்தூங்கும் உயர்சிமைய
மலைநாறிய இயன் ஞாலத்து
வல மாதிரத்தான் வளி கொட்ப
விய னாண்மீ னெறி யொழுகப்
பகற் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோ யிகந்து நோக்கு விளங்க . . . .

……. எனத் தொடங்கி

(அதன் பொருள்)
பொங்கி அலைவீசும் பரப்பினைக் கொண்டது கடல். அதனை எல்லையாகக் கொண்ட ஞாலத்தில் தேன்கூடுகள் தொங்கும் உயர்ந்த முகடுகளைக் கொண்ட மலைகள் தோன்றியுள்ளன. வானப் பெருவெளியில் காற்று வலிமையுடன் சுழன்று கொண்டுள்ளது. எல்லாவற்றையும் விடப் பெரிதாக அகன்றுள்ள விண்மீன்கள் தத்தம் வழியில் செல்கின்றன. பகலில் ஒளிதரும் ஞாயிறு இரவில் ஒளிதரும் திங்கள் ஆகிய இரண்டும் மயக்கமின்றித் தோன்றி ஒளிர்கின்றன. மழை பொழிந்தது. மாநிலம் கொழுத்துள்ளது. ஒன்று விதைத்தால் அது ஆயிரமாக விளைகிறது. விதைத்த நிலமும் விதைக்காத மரங்களும் நல்ல பலனைத் தருகின்றன. இப்படி இயற்கை உதவுவதால் மக்களின் நோக்கத்திலும் துன்பத்தைக் காண முடியவில்லை. யாரும் துன்பம் செய்யவில்லை.

பழந்தமிழ்நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்தமையும் சமயம் காரணமாக ஒருவரோடு ஒருவர் வேற்றுமையின்றி மக்கள் வாழ்ந்ததையும் கீழ்க்காணும் வரிகள் நமக்கு விளக்குகின்றன.

தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவனிய பேரிளம் பெண்டிர்
பூவினம் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும். (464-467)

பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வாழ்க்கையின் நிலையாமையை வலியுறுத்தி அவன் முன்னோரின் செங்கோன்மைச் சிறப்பினை பாராட்டிக் கூறுவதாக அமைந்த இலக்கியம் இதுவாகும்.

வெட்சித் திணை முதல் பாடாண்தினை இறுதியாக ஏழு திணைப் பொருள்கள் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருப்பினும் காஞ்சித் திணை என்பது பற்றுதலுக்குரிய பொருளாகிய உடல் பொருளின் நிலையாமையை எடுத்துரைத்து மெய்யுணர்வை ஊட்டும் நன்னெறியினைக் கொண்டதாகும்.

பாண்டிய மரபைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் நெடுஞ்செழியனுடைய முன்னோர் சிலரைப் பற்றியச் சிறப்புகளையும், அருஞ்செயல்களையும், உயர்ந்த பண்புகளையும் எடுத்துரைக்கும் ஒரு நூலெனினும், பெரும்பான்மையாகவும் முதன்மையாகவும் மதுரை மாநகர் குறித்த சிறப்புகளே அதிகம் சொல்லப் பட்டுள்ளன.

மதுரை மாநகரமானது ஒரு இந்திரபுரி போல் விளங்கியதாம். பாண்டிய நெடுஞ்செழியனின் வெற்றியின் விளைவாக பெருஞ் செல்வமெல்லாம திரண்டு குவியும் இடமாக இருந்துள்ளது.

மண்ணுற ஆழ்ந்த மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற ஓங்கிய பலபடைப் புரிசை
வைய யன்ன வழக்குடை வாயில்
யாறு கிடந்தன்ன அகநெடுந்த் தெருவின்
ஓவுக்கண் டன்ன இருபெரு நியமம்”

எனும் வரிகள் சுட்டுகின்றன.

மதுரை “அந்திக்கடைப் பொட்டல்” என்ற வணிக வீதி இன்றுள்ள படி சங்ககாலத்திலும் இருந்திருக்கிறது.

குறியவும் நெடியவும் மடிதரூஉ விரித்துச்
சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினும் காலுற நிற்றர

என்று கூறுவது இதை உறுதிப் படுத்துகிறது.

ஈராயிரம் ஆண்டுகள் கால எல்லையைக் கடந்து பின்னோக்கிச் சென்று பாடிய நாட்டில் புகுந்து வைகை ஆற்றைக் கடந்து அகழிகளையும் மதில்களையும் தாண்டி மதுரை மாநகர் வாயிலில் நுழைந்து தூங்கா நகர் மதுரையைக் காணுமாறு அழைத்துச் செல்லும் ஓர் இலக்கியம் மதுரைக் காஞ்சி ஆகும்.

மதுரை நகரின் சிறப்புகளைக் கூறுகையில்>>>>>

மை படு பெருந் தோள் மழவர் ஓட்டி,
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை,
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி,
வேல் கோல் ஆக, ஆள் செல நூறி,
காய் சின முன்பின் கடுங் கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின், தந்த ஆயமும்,
நாடுடை நல் எயில் அணங்குடைத் தோட்டி,
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாள் தர வந்த விழுக் கலம், அனைத்தும்,
கங்கை அம் பேர் யாறு கடல் படர்ந்தாஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு,
புத்தேள் உலகம் கவினிக் காண்வர,
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை

கடையெழு வள்ளல்களில் ஒருவன் தோட்டிமலை நள்ளி. இவன் தன் தோட்டிமலைக் கோட்டையை நெடுஞ்செழியன் அழிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு நாளும் விழுமிய வளங்களைக் கொண்டுவந்து தந்தான். கங்கை ஆறு கடலில் கலப்பது போல இந்த தார வளங்கள் துறையில் வந்து குவிந்தன. கற்பனை உலகமாகிய வானுலகத்தைப் ‘புத்தேள் உலகம்’ என்றும் வழங்கினர்.

இறுதிப் பாடலாக…

மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினி துறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே! – என முடியும்

பத்துப் பாட்டு நூல்களில் பெரிய நூலான மதுரைக் காஞ்சியில் இன்னும் ஏராளமான மதுரைச் செய்திகள், அறச் செய்திகள் புதைந்து கிடக்கின்றன. அகழ்ந்து, ஆய்ந்து தமிழின்பம் பெருவீர்!

எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
17-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives