துளி 19 – நெடுநல்வாடை

18 Jan 2022 4:31 pm

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 19
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 18-01-2022

நெடுநல்வாடை

நற்றமிழில் தோன்றிய இலக்கியச் செல்வங்கள் அளவிட முடியாதவை. அதில் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாக விளங்குவது “நெடுநல்வாடை” எனும் ஒப்பற்ற நூலாகும்.

முடிகெழு வேந்தர் மூவருள்ளும் படை விளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோருள் தலைசிறந்து விளங்கிய பாண்டிய மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல்.

இந்த நூல் 188 அடிகளால் ஆனது. இதன் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது அறிஞர் கருத்து.

நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற தலைவனுக்கு இது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

இது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் கூறுகளே பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளைப் பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்கள் தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை ஆகாது என்பது அவர்தம் கருத்தாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்ட (176-177)

என்ற அடிகள் மூலம் இப்பாட்டிற்
குரியத் தலைவன் பாண்டிய மன்னன் என்று தெரிகிறது. ஆகவே தான் இந்நூல் புறப் பொருள் நூலாயிற்று. இது நச்சினார்க்கினியர் முடிபு.

வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர்
ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல்
நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயல் மறப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை . . .

வையகம் பனிப்ப, பொய்யா வானம் எனும் மங்கலச் சொற்களுடன் தொடங்கி இதன்கண் கார்ப் பருவம் தொடங்கலும், மழை பொழிதலும், வெள்ளம் பெருகி விரைதலும் அப்பருவத்தே உலகின் நிகழும் நிகழ்ச்சிகளும் பின்னர் கூதிர்ப் பருவம் வருதலும் அதன் கண் நிகழும் நிகழ்ச்சிகளும் சுவையாக எடுத்துச் சொல்லும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது. கூதிர்ப் பருவத்தை குளிர்காலம் என்று சொல்லாமல் பனிப்ப என்று கூறுவது புலவனின் நுழைபுலம் ஆகும்.

விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு,
ஒரு திறம் சாரா அரைநாள்அமையத்து,
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு, தெய்வம் நோக்கி,
பெரும்பெயர் மன்னர்க்கு ஒப்ப மனைவகுத்து (72 - 78)
என்ற பாடல் கட்டடக் கலை குறித்த ஓர் செய்தியை விளம்புகிறது.

சூரியன், திசை எங்கும் விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடத்தினை யுடையது. அச்சூரியன் மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து ஒருபக்கம் நிழல் சாராத
வேளையில், இரு கோலினை நட்டு அதன் நிழல்மாறுபடாது நிற்கின்ற நண்பகல்
பொழுதில் (இது சித்திரை மாதம் பத்தாம்நாளுக்கு மேல் இருபதாம் நாளுக்குள் நிகழும் என்பர்) அரண்மனைக்கு அங்குரார்ப்பணம் (தொடங்குதல், முளையிடுதல்) செய்வர். கட்டடக்கலைபற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தோர், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்த திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்குரிய தெய்வங்களையும் கருத்தில்
கொண்டு, பெரிய புகழினையுடைய மன்னர் வாழ்வதற்கு ஏற்ற வகையில்அமைக்கப்
பட்ட அரண்மனை.

மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து 40
அவ்விதழ் அவிழ் பதம் கமழப் பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
மல்லல் ஆவணம் மாலை அயர (36-44)

மாலை நேரம் வந்துவிட்டது என்பதை அறியவே முடியாதவாறு மழைக்காலம்
விளங்கியது. விளக்கு ஏற்றி வழிபட மாலைக் காலத்தைப்பெண்கள் அறிவதற்குத்
தாம்பாளத்தில் (தட்டு) மலரும் பருவத்து பிச்சியின்அரும்புகளை
இட்டு வைத்திருந்தனர். மாலையும் வந்தது; மலரும்மலர்ந்தது; வந்தது மாலையென மகளிரும் அறிந்தனர் ; வழிபாடும்இயற்றினர்.இயற்கையினைக் காலக்கருவியாய்
பயன்படுத்திய தமிழரின்அறிவினை என்னவென்பது? இதனினும் மேலாய் பொழுதை அறிவித்த மலரும் பருவத்து மலரினைப் ‘போது’ என்று பெயரிட்டப புலமையும் வியந்து
போற்றுதற்குரியது.

தலைவனைப் பிரிந்த கோப்பெருந்தேவியின் காட்சிப் படைப்பை

……………….. துணை துறந்து. (137)
ஆரம் தாங்கிய அலர்முலை ஆகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழ
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
…………………………………………………….
புலம்பொடு வதியும் நலங்கிளர் அரிவைக்கு
இன்னா அரும்படர் தீர ---- (167)

என்ற நீண்ட அடிகள் முத்துமாலை, தாலிநாண், குழை, தொடி, வளை, மோதிரம், காப்பு, புடவை, தேமல், கச்சு, கூந்தல், நகைமொழி என பல் பொருள் விளக்கம் அளிக்கும்.

இறுதியாக

களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவர்
ஒளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி எறிதொறும் நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல
வேம்புதலை யாத்த நோன்காழ் எ·கமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் . .180
புடைவீழ் அந்துகில் இடவயின் தழீஇ
வாள்தோள் கோத்த வன்கட் காளை
சுவல்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே. . . .188

ஒளி வீசும் முகபடாத்தோடு போர்த் தொழில் பழகிய யானையின் நீண்டு திரண்ட கையானது நிலத்தில் புரளுமாறு வெட்டி வீழ்த்திய பெரும் மறச்செயல்களை செய்தவர் வீரர்கள். அவ்வீரர்கள் போரிலே பட்ட விழுப்புண்களைக் காண்பதற்காகப் பாசறையிருந்து வெளியே சென்றான் தலைவன். அங்கே அகல் விளக்குகளின் பருத்த தலைகள் வடதிசையிலிருந்து வந்த குளிர்ந்த காற்று வீசும் போதெல்லாம் அசைந்து தெற்கு நோக்கி எழுந்து சாய்ந்தன. அவ்வொளியில் வேப்பந்தழையைத் தலைப்பகுதியில் கட்டிய வலிய காம்பினையுடைய வேலினை ஏந்தியவாறு வீரனொருவன் முன்னே சென்று புண்பட்ட வீரர்களை மன்னனுக்குக் காட்டிச் சென்றான். இதுவே வீரர்களுக்கு மாமருந்தாகும்.

பாசறையின் கரிய சேறுடைய தெருவில், மணிகளை இட்டப் பெரிய கால்களையுடைய பெண் யானைகளோடு, சேணம் களையாத பாய்ந்து செல்லும் செருக்குடைய குதிரைகளும் தன்மேல் விழுந்த மழைத் துளிகளைச் சிதறின. தலைவனோ தன் இடப்பக்கத்து வீழ்ந்த அழகிய ஆடையினை இடக்கையால் எடுத்துத் தழுவி அணைத்துக் கொண்டான். வலக்கையினை வாளைத் தோளிலே கோர்த்துள்ள வீரனின் தோள் மேலே வைத்துக் கொண்டான். போரில் விழுப்புண்பட்ட வீரர்களின் மனம் விரும்பும் வகையில் முகம். மாலைகள் தொங்கும் வெண்கொற்றக் குடை மறைத்து நின்றது. இவ்வாறு நள்ளென்ற இரவுப் பொழுதிலும் மன்னன் துயில் கொள்ளாது சில வீரர்களோடு சென்று புண்பட்ட வீரர்களைப் பார்த்து வந்தான். ‘மன்னனின் பலரோடு முரண்பட்ட இப்பாசறைத் தொழில் இனிதே இப்பொழுதே முடிய வேண்டும்’ என்று முன்னதில் இருந்து முடிவினைப் பெற வைத்தப் பாட்டை முடிக்கின்றார் நக்கீரர்.

கூதிர் காலத்தில் நள்ளிரவிலும் தன் தலைவியின் தோளைத் தழுவும் வேட்கையினை நினையாது எரிபோல் பொங்கிப் பாசறையில் இருந்தான் என்பதே பாண்டியனுக்கு வெற்றி வாகை ஆயிற்று.

இவ்வாறு, அகம் புறம் என இருதிணைச் செய்திகள் நிறைந்த ஓர் இலக்கியம் நெடுநல்வாடை ஆகும்.

எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
18-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives