03 Jan 2022 4:11 pm
(தொல் தமிழர் வகுத்த ஐந்திணை ஒழுக்கத்தின் நானிலப் பரப்பின் முன்பனிக் குளிரில் காலை இளம்பருதியின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்காக யாம் பதிவிடுகின்றோம்)
துளி: 2
வாசிப்பு நேரம் : 5 நிமையங்கள்
1-1-2022
புத்தாண்டு நாளில் உளங்கனிந்த இனிய வாழ்த்துகளுடன் யாம் எம் இலக்கிய உலாவைத் தொடங்குகின்றோம். இன்று நாம் முதலாவதாகக் காணவிருப்பது, தொல்காப்பியம்.
தமிழ் மொழி, தமிழர் இனம் ஆகியவற்றின் பெருமை மிகு அடையாளமாக நமக்குக் கிட்டியிருக்கும் ஓர் அரிய இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
காலத்தினால் தொன்மை, தமிழ் நாகரிகத்தின் செம்மை, செம்மாந்த மேன்மை, கருத்துக் கொழுமையில் செப்பம் என மொழி இயலுக்கு முற்காலத்தில் எழுந்த ஓர் வனப்பு மிக்க வரம்பு இலக்கியம்.
கால வெள்ளத்தையும், கடல்கோள்களையும் கடந்து எதிர் நீந்திக் கிடைத்தக் இலக்கணக் கருவூலம் தொல்காப்பியம்.
தோன்றிய காலம் முதல் இன்று வரை, இனி வரும் காலம் வரையிலும் எழில் மங்கா இலக்கியமாகத் திகழும் ஓர் ஒப்பற்றக் காப்பியப் பெருநூல். செழுந்தமிழின் செல்வக் கடல்
கடைச் சங்கத்திற்கும் முற்பட்ட இடைச்சங்க காலத்து ஏற்றமிகுப் புலமை மிகுச் சான்றோனால் படைக்கப் பட்ட ஒரு இலக்கியம். வடமொழி இலக்கண வரம்பைத் தெரிவிக்கும் பாணினீயத்திற்கும் முற்பட்ட காலத்தே எழுந்து, உலக மொழிகளின் இலக்கண வரம்பினைத் தெரிவிக்கும் அனைத்து நூல்களுக்கும் முற்பட்டதாக அமைந்த ஒன்று.
ஆனால் வட இந்திய மக்கள் அவர்களின் வடமொழி இலக்க்ண நூலான பாணினியத்தைப் போற்றுவது போல தமிழர்கள் ஏனோ தொல்காப்பியத்தைப் போற்றுவதில்லை. இது ஒரு வேதனையானச் செய்தி.
இடைச் சங்கத்தாருக்கும், கடைச் சங்கத்தாருக்கும் இலக்கியம் படிக்க இலக்கணமாக அமைந்த நூல். எனவே தான் இறையனாரையும் எதிர்த்து நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என உரைத்த நக்கீரன் என்ற புலவனையும் நாம் வரலாற்றில் உணர்கிறோம்.
நேற்று இன்று நாளை என அனைத்துக் கவிஞர்களுக்கும் அடித்தளமாக இருக்கும் ஒரு நூல்.
இதன் காலம் கிமு 7 – கிமு 5 க்கு இடைப்பட்டதாக கணிக்கப் படுகிறது.
இதனை இயற்றியவராக குறிக்கப் படுபவர் தொல்காப்பியர் ஆவார். இது அவருடைய இயற்பெயர் என அறிஞர்கள் கருதுகின்றனர்.
இந்த அரிய நூலுக்கு தொல்காப்பியரின் மாணவர்களில் ஒருவரான செந்நாப் புலவர் பனம்பாரனார் பாயிரம் ஒன்றினைச் செய்துள்ளார்.
இந்த நூலைத் தொகுத்து 1868 ல் அச்சேற்றிப் பெரும் பணி செய்தவர் ஈழத்தைச் சாரந்த அறிஞர் சி.வை. தாமோதரம் பிள்ளை ஆவார். தொடர்ந்து பதிப்பிட்டவரகளில் ஆறுமுக நாவலர், வ உ சிதம்பரனார் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர்.
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் தமிழ்ச் சான்றோன் அதங்கோட்டாசிரியர் முன்பாக தொல்காப்பியம் அரங்கேற்றப் பட்டதாக பனம்பாரனாரின் பாயிரத்தின் மூலம் நாம் அறிகின்றோம்.
இந்த நூலுக்கு பண்டை காலத்தில் பல உரையாசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பெரும் புலவர்கள் இளம் பூரணார், பேராசிரியர், சேனாவரையர், கல்லாடர், நச்சினிக்கினியார், தெய்வச் சிலையார் எனச் சிலரைக் குறிப்பிடலாம். இதன் முழுத் தொகுப்பும் கிடைப்பது இளம்பூரணார் உரையில் மட்டுமே.
இந்த நூற்றாண்டில் தொல்காப்பியப் பாக்களில் தேர்ந்தெடுக்கப் பட்ட சில நூற்பாக்களைச் சாமானிய மக்களும் புரியும் வகையில் “தொல்காப்பியப் பூங்கா” என்ற வடிவில் எளிய உரை தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களாவார்.
சரி இனி நூல் அமைப்பிற்குள் செல்ல முயல்வோம்.
இதன் உள்ளடக்கம் எழுத்து, சொல், பொருள் என அமைந்த மூன்று பெரும் அதிகாரப் பகிப்புடனை உடையதாகவும் அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களாக இயலும் நெறியினைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது..
எழுத்து சொல் என்பதைத் தாண்டி பொருளதிகாரம் என்பது உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. தமிழ் நாட்டின் தொன்மைக் கருவூலமாக விளங்கும, உலக மொழிகள் அனைத்திலும் எழுத்திற்கும் சொல்லுக்கும் தான் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மொழியில் மட்டும் தான் எழுத்து, சொல், பொருள் என இலக்கணம் வரையப் பட்டுள்ளது.
தொல்காப்பியத்தில் மட்டும் தான் சிறப்புத் தன்மை வாய்ந்த பொருளதிகாரம் உண்டு. வேறெந்த மொழிகளிலும் நாம் காண முடியாத ஒன்று. அந்தப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை, களவியல், கற்பியல், பொருளியல் என்னும் ஐந்தும் தமிழ் நாட்டின் பண்பாடு, நாகரிகம், வாழ்க்கை, வழிபாடு, ஆட்சிமுறை, நிலவளம், நீர்வளம், மலைவளம், காவல்(வீரம்) காதல், கற்பு, கடமை, அன்பு, அருள், ஒற்றுமை, ஊராண்மை, பேராண்மை, பிறவாப் பெருவாழ்வு என மனித குல ஒழுகலாறுகளை வரையரை செய்து உணர்த்தும் மெய் வரலாற்று நூலாகும்.
இதன் விளைவாகவே பிற்காலத்தில் வந்த அனைத்து இலக்கியங்களிலும் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கையும் சுட்டிக்காட்டுபவையாக உள்ளன. இது தமிழர்களின் மரபு வழிச் சிந்தனையின் அடித்தளமாக அமைந்துள்ளது. தமிழர்களிடையே மனித நேயச் சிந்தனையையும் பொதுமையையும் வளர்த்தெடுத்தது.
ஒன்று முதல் ஆறுவரை எண் எழுத்தெண்ணி பாடப்பட்ட ஓரறிவு முதல் ஆறறிவு கொண்ட உயிர்களைப் பாடிய தொல்காப்பியர் மரபியல் செய்யுள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு!
"ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே
ஆறறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே" - (தொல்: பொருள்: 571)
இது மூவாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முந்திய தமிழக உயிரியலாளர்களின் கண்டுபிடிப்பாகும்.
மூன்று அதிகாரப் பகுப்பின் முதல் அதிகாரம் எழுத்ததிகாரம் என்பதாகும். இதன் கீழ் வரும் ஒன்பது இயல்கள்: நூல் மரபு, மொழி மரபு, பிறப்பியல், புணரியல், தொகை மரபு, உருபியல், உயிர் மயங்கியல், புள்ளி மயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்பன.
அடுத்த அதிகாரமான சொல்லதிகாரத்தின் கீழ் ஒன்பது இயல்களாக கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், விளி மரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரி இயல், எச்சவியல் என்பனவாகும்.
இறுதியாக அமைந்துள்ள பொருளதிகாரத்தின் ஒன்பது இயல்களாக அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப் பாட்டியியல், உவமையியல், செய்யுளியல், மரபியியல் என்பனவாகும்.
இவ்வாறாக மொத்தம் சற்றொப்ப 1611 நூற்பாக்களைக் கொண்டது தொல்காப்பியம். சிலர் 1585, 1612 எனவும் குறித்துள்ளனர்.
சொன்னதைச் சொல்லுதல், முன் சொன்னதற்கு மாறுபாடாகக் கூறுதல், குறைவாகச் சொல்லுதல், மிகுதியாகச் சொல்லுதல், பொருளில்லாதவைகளைக் கூறுதல், மயக்க உணர்வு ஏற்படும் படியாகக் கூறுதல் , கேட்போருக்குத் துன்பம் தரும் படியான தன்மையில் அமைதல், பழிக்கப் பட்டச் சொற்களில் தாழ்வு உண்டாகுமாறு கூறுதல், தானே ஒரு பொருளை எண்ணிக் கூறுதல், எவ்வகைப் பொருளையும் உறுதியாகப் பற்றாது உணர்த்தல் ஆகிய இவையனைத்தும் நூலின் குற்றங்களாகும்.
தமிழ் மொழி இத்தனை ஆண்டு காலம் அழியாது என்றும் இளமையாகப் பாது காக்கின்ற ஓர் போர்க் கவசமாகத் திகழ்வது நமது தொல்காப்பியம் ஆகும். இதற்கு இணையான நூல்கள் உலகில் வேறு இல்லை. தொல்காப்பியம் தான் தமிழின், தமிழ் இனத்தின் வேலியாக நின்று நம்மை சூழ்ந்திருக்கும் பகைவருக்கெல்லாம் விடையளிக்கிறது. எந்த மொழியும் இதன் அருகில் வந்து அழித்தொழிக்க முடியவில்லை.
என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
1-1-2022.
We can not do it alone. Join with us.