19 Jan 2022 5:30 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 20
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 19-01-2022
பத்துப் பாட்டு இலக்கிய வரிசையில் உள்ள ஒரு நூல் குறிஞ்சிப்பாட்டு.
இது ஒரு காதல் பாட்டு. ஆரிய அரசன் பிரகத்தன் என்பவனுக்குத் தமிழின் பெருமை உணர்த்த வேண்டி ஆசிரியப்பாவினால் இந்நூல் பாடப்பெற்றது. இதற்குப் பெருங்குறிஞ்சி என்றொரு பெயரும் உண்டு. அவ்வரசன் தமிழர்தம் காதல் ஒழுக்கத்தை அறிந்துகொள்ள, குறிஞ்சித் திணை ஒழுக்கமாகிய புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறித்து இந்நூல் விளக்கியுரைக்கிறது.
பத்துப் பாட்டு நூல்களுள் முழுமையாக அகம் சார்ந்து எழுதப் பட்ட பாடல் இது ஒன்றே!
இது கபிலரால் பாடப்பெற்ற ஒன்று. கபிலர் சங்க காலத்துத் தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர். பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என மூன்று தொகுதிகளிலும இவருடையப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது சிறப்பாகும்.
இவர் வேள்பாரியின் உயிர் நண்பர். அவனுடைய அவைக் களப் புலவருமானவர்.
காலம்: கி.பி, 2 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கணிக்கப் பட்டுள்ளது.
குறிஞ்சிப் பாட்டு 261 அடிகள் கொண்ட ஒரு சிற்றிலக்கியம் ஆகும்.
பெற்றோர் அறியாமல் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் காதல் வளர்கிறது. காதலன் காதலியைக் காண்பதற்காக வருவதில் எவ்வளவோ இடையூறுகள் உள்ளன. அவன் வர முடியாமல் போகும் நாட்களில் வாடி மெலிகிறாள். அவளுடைய மெலிவை ஏதோ நோய் என்றெண்ணி குடும்பத்தார் வேறு நீக்குகை (பரிகாரம்) தேட முயல்கின்றனர்.
காதல் நோயால் தலைவியின் உடலில் மாறுபாடு. செயலில் தடுமாற்றம். இதனை அவளது தாயர் முருகன் அணங்கியதாக எண்ணி முருகாற்றுப்படுத்த முனைகின்றனர். உண்மையைச் சொல்லிவிடு என்று தலைவி தோழியைத் தூண்ட, தோழி நிகழ்ந்ததைக் கூறுவதாகப் பாடல் அமைந்துள்ளது. அந்நிலையில் காதலியின் தோழி குறுக்கிட்டு மெலிவுக்குக் கரணியம் இன்னது என்று உண்மையை எடுத்துரைக்கின்றாள்.
மறைந்த நிலையில் வளர்ந்த காதலைப் பற்றித் தாயின் உள்ளம் ஏற்கும் வகையில் எடுத்துச் சொல்கிறாள். பாடலின் முடிவில் காதலியின் கண்ணீர் காட்டப் படுகிறது. பாடலின் பல அடிகளில் குறிஞ்சி என்னும் மலைநிலம் பற்றிய வண்ணனை உள்ளது. தலைவன் தலைவி இணைப்பு, புணர்ச்சி, மலை வளம் என பல காட்சிகள்.
மலை பெய்ததனால் தலைவனுடைய நெடிய மலை உச்சியினின்றும் குதிக்கின்ற தெளிந்த நீரை உடைய வெள்ளிய துகிலை ஒக்கும் அழகிய அருவியிலே நீங்காவிருப்பம் உடையோராய் ஒழியாமல் விளையாடி நீலமணிப்போலச் சிறிய முதுகிடத்தே தாழ்ந்து கிடந்த எம்முடைய பின்னிவிடப் பட்ட கூந்தலின் நீரைப் பிழிந்து ஈரத்தை உலர்த்தி உள்ளிடம் எல்லாம் சிவந்த கண்களை உடையோமாய் … என தலைவன் மலை அருவியின் எழில், குளியல், கண்சிவந்தமைக் காட்டும் பாடல் ஒன்று:-
அண்ணல் நெடுங்கோட்டு இழிதரு தெள் நீர்
அவிந்துகில் புரையும் அவ்வெள் அருவி
தவிர்(வு) இல் வேட்கையேம் தண்டாது ஆடி
நளிபடு சிலம்பில் ….
பொன்எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்தஎம்
பின்இருங் கூந்தல் பிழிவனம் துவரி
உள்ளகம் சிவந்த கண்ணேம் ( 54-61 )
இதைத் தொடர்ந்து வரும் அடிகள் 99 வகையான பூக்களைப் பற்றியப் பாடலாகும்:
ஓண்செங் காந்த ளாம்ப லனிச்சந்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள 65
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா 70
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருத்தி யதிரல் பெருந்தண் சண்பகங் 75
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை 80
ஞாழன் மெளவ னறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க 85
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்திரி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி 90
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவு 95
மரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்
பூக்களைப் பறித்துவந்து குவித்து விளையாடுவது சங்ககால விளையாட்டுகளில் ஒன்று. குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை செய்து கொள்ளுதல், மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல், தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக் கொள்ளுதல் முதலானவையும் பூ விளையாட்டில் அடங்கும். தழையாடை என்பது உடுத்திக் கொண்டிருக்கும் நூலாடையின் மேல் ஒப்பனைக்காக அணிந்து கொள்ளும் அணியாடை. மழை பெய்து கழுவிய பாறையின்மேல் அவர்கள் குவித்த பூக்கள் இங்கு அடுக்கித் தரப்படுகின்றன. பூக்களின் எண்ணிக்கை இங்கு 99 என்று எண்ணிட்டுக் காட்டப்பட்டுள்ளது. நுண்ணறிவாளர்களின் எண்ணிக்கை கூடலாம் அல்லது குறையலாம். பாடலில் காணப்படும் அடுக்கு-முறை பின்வருமாறு உள்ளது.
ஒண் செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை – தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி, வேரி, செங்கோடு வேரி, தேமா, மணிச்சிகை, உந்தூழ், உரிதுநாறு அவிழ் தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், வான்பூங்குடசம், எருவை, செருவிளை, கருவிளை, மணிப் பூங் கருவிளை, பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, ஆவிரை – விரி மலர் ஆவிரை, வேரல், சூரல், பூளை – குரீஇப் பூளை, கண்ணி – குறுநறுங் கண்ணி, குருகிலை, மருதம், கோங்கம் – விரி பூங்கோங்கம், போங்கம், திலகம், பாதிரி – தேங்கமழ் பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம் – பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, மா, கடி கமழ் கலி மா, தில்லை, பாலை, முல்லை – கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நெய்தல் – நீள் நறு நெய்தல், தாழை, தளவம், தாமரை – முள்தாள் தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி – நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், குரலி- சிறுசெங்குரலி, கோடல், கைதை, வழை – கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, நெய்தல்- மணிக் குலைக்கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், தணக்கம் – பல் பூந் தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை – தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, ஆத்தி – அமர் ஆத்தி, அவரை – நெடுங் கொடி அவரை, பகன்றை, பலாசம், பிண்டி- பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாஅய், தோன்றி – சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நாகம் – நறும் புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி – பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை- கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், இருள்நாறி, நள்ளிருள் நாறி, குருந்தம் – மா இருங்குருந்தம், வேங்கைப்பூ (சில பூக்கள் இவண் விரித்துரைக்கப் பட்டுள்ளன)
என மேற் கூறப்பட்ட (99) வகைவகையான பூக்களைப் பாறையில் குவித்தோம். மழைநீர் பெய்து கழுவிய பாறைமேல் குவித்தோம். அந்தப் பூக்களின் மேல் எங்களுகுக் கொள்ளை ஆசை தினைப்புனத்தில் பறவைகளின் ஒலி. நாங்களும் அவ்வப்போது பெரிய உயிர்ப்புக்குரல் கொடுத்துப் பறவைகளை ஓட்டினோம். எங்கள் குரலொலி மலையில் சிலம்பி எதிரொலித்தது.
குறிஞ்சிப் பாட்டின் சிறப்புகளில் இந்த பூக்கள் வரிசை ஒன்றாகும்.
தலைவன் தலைவி கூடுமிடத்து தலைவியிடம் நாணமும் அச்சமும் ஏற்பட்ட நிலையிலும், பிரியும் எண்ணம் கொண்ட நிலையிலும் வலிமை மிக்க வேட்கை இவர்களைத் தடுத்து தலைவியை மெய்யுறு புணர்ச்சிக்கு உடன்படுவிக்கும். நாணத்தாலும் அச்சத்தாலும் தலைவன் முயக்கத்தை தவிர்க்க முயல்வாள், முகம் பார்க்க மறுப்பாள். ஆயினும் அம்முயற்சியில் வெற்றி பெறாது தலைவனுக்கு இயைந்து ஒழுகுவாள். காதலன் காதலியரின் இந்த காட்சி நிலையை விளக்கும் சில வரிகள் :
நண்ணுவழி நாணும் உட்கும் அடைதர (184)
ஒய்யெனப் பிரியவும் விடான் சுவைஇ
ஆகம் அடைய முயங்கலின் அவ்வழிப்
………
உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு
பலருண மலரத் திறந்த வாயில் …. நெஞ்சமர்ந்து
அருவிடர் அமைந்த களிதரு புணர்ச்சி
வானுரி உறையுள் வயங்கியோர் அவாவும்
பூமலி சோலை அப்பகல் கழிப்பி…. (214)
இவ்வாறு பல்வேறு பகுதிகளில் அகத்திணக் காட்சிகளும், இயற்கை வளத்தின் எழில்காண் காட்சிகளும் நிறைந்த ஓர் இலக்கியம் குறிஞ்சிப் பாட்டு ஆகும்.
எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
19-1-2022.
We can not do it alone. Join with us.