துளி 21 – பட்டினப்பாலை

21 Jan 2022 4:05 pm

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 21
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 21-01-2022

பட்டினப் பாலை

பத்துப் பாட்டில் உள்ள மற்றுமொரு அகம் புறம் சார்ந்த இலக்கியம் பட்டினப் பாலை என்ற நூலாகும். இது காதல் துறைப் பற்றி அமைந்த ஓர் கற்பனைப் பாட்டு. இந்த நூலில் காதலர் பிரிவாகிய பாலைத் திணை என்னும் பொருள் பட பல பாடல்கள் அமைந்துள்ளன. இதில் காவிரி பூம்பட்டினம் என்னும் கடற்கரை நகரின் புகழும், அழகும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. அது மட்டுமின்றி அந்த பட்டினத்தில் ஆட்சி புரிந்த சோழ மன்னன் திருமாவளவன் (கரிகால் பெருவளத்தான்) பெருமையும் இந்த நூலில் பாடப் பட்டுள்ளது.

நூலின் அளவு: மொத்த அடிகள் 301 ஆகும்.

பெரும்பாணாற்றுப் படை நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இந்த இலக்கியத்தையும் படைத்துள்ளார்.

இதன் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு ஆகும்.

இந்த நூலின் உயிர்ப் பொருள் காதல் குறித்த கற்பனையெனினும் பாடலில் பெரும்பாலும் காவிரி பூம்பட்டினத்தின் சிறப்புகள் குறித்தும் அங்கு ஆட்சி புரிந்த அரசன் குறித்தும் பெரிதும் பாடப்பட்டுள்ளது. இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத் திணை நூலாதலால் பட்டினப் பாலை என பெயர் பெற்றதாக நச்சினார்க்கினியார் உரை செப்புகிறது.

தலைவன் பொருள் தேட வேண்டி வேற்று நாட்டுக்குச் செல்லும் முயற்சியில் ஈடு பட்டான். பிறகு தன் பிரிவால் காதலி மிகவும் துயருற்று வருந்துவாளே என்ற கவலை ஏற்படுகிறது. அதனால் மிகவும் தயங்கினான். தலைவிக்கு அந்த துன்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எண்ணித் துணிந்தான். அந்நிலையில் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்த பாடல்களின் தொகுப்பே பட்டினப் பாலை என்னும் இலக்கியமாகும்.

காவிரியாற்றின் பெருமையுடன் தொடங்கும் இவ்விலக்கியம் பூம்பட்டினத்தின் பெருமைகளைப் பின்னர் பேசுகிறது.

காவிரியின் சிறப்புக் குறித்து இங்கு காணப் படும் பாடல் வரிகள் சோழர் காலத்து காவிரி ஆறு எவ்வாறு வளமிக்கதாகத் திகழ்ந்தது என்பதை எடுத்துக் காட்டும் பாடலாகும்.

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசை திரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான் பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
புனல்பரந்து பொன்கொழிக்கும்…..

மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வந்து வயலில் பொன்போல் விளைச்சல் பெருகும். எனவே அது பொய்யாக் காவிரி. ஒளி விளங்கும் சூரியன் ஒரு வெண்மீன். திங்களைப் போல் காலம் மாறாமல், காலக் கணியாய் விளங்குவதால் அது வசையில்லாத புகழினை ஊடையது. வானம்பாடி ‘வ்வான் வ்வான் ‘ என்று குரல் தந்து தன்னையே பாடிக்கொள்ளும். ‘தளி’ என்பது மேகத்திலுள்ள நீர். வானம்பாடி நீராக உண்ணுவது இந்தத் தளிநீரை மட்டுமே. சூரியன் திசைமாறித் தென்முகமாகச் சென்றாலும், வானம்பாடி நீரின்றித் தேம்பினாலும், காவிரியில் புனல் பாய்ந்து பொன் கொழிப்பது தவறுவதில்லையாம். காவிரித் தாய்க்குத் தலை, தலைக்காவிரி தோன்றும் குடகுமலை.

அந்தக் கருத்து ஆறே ஆறு அடிகளில் அமைந்துள்ளது. ஆனால் அந்த ஆறு அடிகளில் குறிப்பிடப் பட்ட காவிரி பூம்பட்டினம் என்ற அந்தத் தலைநகரம், நாடு குறித்த வருணனை பாடலின் முற்பகுதியில் சற்றொப்ப 217 அடிகளில் அமைந்துள்ளது. பாடலின் பின் பகுதியில் சோழனின் போர் வீரமும், சிறப்பும் விளக்கப் பெறுகின்றன.

அரிமா அன்ன அணங்குடைத் துப்பின்
திருமா வளவன் தெவ்வர்க் கோக்கிய
வேலினும் வெய்ய கானமவன்
கோலினுந் தண்ணிய தடமென் தோள்.

“நெஞ்சமே செல்வச் சிறப்பு மிக்க காவிரிபூம்பட்டினத்தையே யான் பெறுவதாக இருந்தாலும் என் காதலியைப் பிரிந்து வேற்று நாட்டிற்குச் செல்ல மாட்டேன். பொருள் தேடுவதற்காக கடந்து செல்ல வேண்டிய காட்டு வழிகள் கொடுமையானவை; சோழன் (கரிகாலன்) திருமாவளவன் வேலை விடக் கொடுமையானவை. பிரிய வேண்டிய என் காதலியின் தோள்களோ சோழன் கரிகாலனின் செங்கோலை விட தண்மையானவை. நல்லவை; அழகு மிக்கவை. ஆகவே இவளைப் பிரிந்து நான் செல்ல மாட்டேன்” – என்பது தான் பாட்டின் கருத்தாகும். இந்த வரிகளே இலக்கியத்தின் இறுதி வரிகளாகும்.

தமிழ் நாட்டில் அக்காலத்தில் ஓங்கியிருந்த கடல் வாணிபம், பெரிய துறைமுகத்தின் மாட்சி, வெளிநாட்டார் பலர் வந்து தங்கியப் பெருமை, அங்கிருந்து ஏற்றுமதியாகும் பொருள்கள் பற்றிய விளக்கங்கள், பண்டங்களுக்கு சோழ நாட்டின் முத்திரைப் பதித்து சுங்க வரி விதித்த முறைமை, கடற்கரையில் பல வெளிநாட்டுப் பொருட்கள் குவிந்து கிடக்கும் மாட்சி, காட்சி, சோழநாட்டில் வளம் பெற்றிருந்த தொழில்கள், கடைத் தெருக்கள், வணிகர்களின் நடுவு நிலைமையான வாணிக முறை என பலவற்றையும் விரிவாகப் பேசும் ஓர் அற்புதமான இலக்கியம் பட்டினப் பாலை ஆகும்.

காவிரி பூம்பட்டினத்தின் துறைமுகக் காட்சி….

வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைச்கூம்பி னசைச்கொடியும்

கடலில் கப்பலின் கொடி பறக்கும் – முளையில் கட்டப்பட்டிருக்கும் களிறு போலப் புகார்த் துறைமுகத்தில் அசைந்தாடிக் கொண்டிருக்கும் நாவாயின் உச்சியில் கொடி கட்டப்பட்டிருந்தது.

தாங்கள் கொடுக்கும் பொருளும் குறைவாகக் கொடுக்காமல், தாங்கள் கொள்ளும் பொருளும் மிகுதியாகக் கொள்ளாமல் பல பண்டங்களிலும் வணிகம் எத்துணை நேர்மையாக நடத்தினார்கள் என்ற பெருமையும் பேசப் படுகிறது.

கொன்வதூஉம் மிகைகொளாது
கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகிர்ந்துவீசும் ….

என்ற வரிகள் இதை உணர்த்துகின்றன. வெவ்வேறு பண்டங்களுக்கு அடையளமாக கடைகளில் வெவ்வேறு கொடிகள் பறக்கப் விடப் பட்டிருந்தன என்ற செய்திகளும் இவ்விலக்கியத்தில் காணக் கிடைக்கின்றன.

வான்முகந்தநீர் மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவும்
மாரிபெய்யும் பருவம்போல
நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தின்று நீர்ப்பரப்பவும
அளந்தறியாப் பலபண்டம்
வரம்பறியாமை வந்தீண்டி

காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி – கடலிலிருந்து மேகம் முகந்து சென்ற நீர் மலையில் பொழிவது போல நீரிலிருந்து பொருள்கள் நிலத்தில் ஏற்றப்பட்டன. மலையில் பொழிந்த நீர் கடலுக்கு வந்து பரவுவது போல நிலத்திலிருந்து பொருள்கள் நீரிலுள்ள நாவாயில் பரப்பப் பட்டன. அந்தப் பண்டங்கள் அளந்தறிய முடியாதபடி பற்பலவாகக் குவிந்து கொண்டிருந்தன.

அருங்கடிப் பெருங்காப்பின்
வலியுடை வல்லணங்கினோன்
புலிபொறித்துப் புறம்போக்கி
மதிநிறைந்த மலிபண்டம்
பொதிமூடைப் போரேறி

புலி முத்திரை – ஏற்றுமதிக்காகவும், இறக்குமதியிலிருந்தும் வந்த மதிப்பு மிக்க பொருள்களின் மீது புலிச் சின்னம் பொறிக்கப்பட்டது. பின்னர் அவை பொதி மூட்டைகளாகக் கட்டிக் காப்பகத்தில் அடுக்கப்பட்டன. உடல் வலிமையைக் கண்ட மாத்திரத்திலேயே அச்சம் தரும் காவலாளிகள் அவற்றைப் பாதுகாத்தனர்.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும்.
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்

கடல்-வழி வந்த குதிரை, வண்டியில் வந்த மிளகு-மூட்டை, வடமலையில் பிறந்த மணி, குடமலையில் பிறந்த சந்தனம், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை-காவிரிப் படுகை விளைச்சல்கள், ஈழத்து உணவு, காழகத்து (கடாரம்-பர்மா)ச் செல்வம் இப்படிப் பல சிறியனவும், பெரியனவுமாக மண்டிக்கிடப்பது தான் காவிரிப்பூம்பட்டினம். அந்த துறைமுகத்தில் தான் பொருட்கள் குவிந்து கிடக்கின்ற. போர்க்குதிரை – கடல் வழியே இறக்குமதி செய்யப்பட்டவை, மிளகு மூட்டை – தரைவழியே வண்டிகளில் வந்தவை, மணி, பொன் – வடமலைப் பகுதியிலிருந்து வந்தவை, சந்தனம் – மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை, அகில் – மேற்கிலுள்ள சேரரின் குடமலையில் பிறந்தவை, முத்து – பாண்டியரின் தென்கடலில் பிறந்தது, பவளம் – சோழ நாட்டுக் குணகடலில் பிறந்தது, வாரி (விளைச்சல் வருவாய்) – கங்கைச் சமவெளியிலிருந்து வந்தவை, பயன் (விளைச்சலை விற்று வந்த பயன்) – காவிரிப் படுகை விளைச்சலை விற்றுப் பெற்றவை, உணவு (பதப்படுத்தப் பட்டவை) – ஈழத்திலிருந்து வந்தவை, கலையாக்கச் செல்வம் – காழகம் = கடாரம் = பர்மாவிலிருந்து வந்தவை, தலைமயங்கல் = ஒழுங்குபடுத்தப் படாமல் இடம்மாறிக் கிடத்தல். இப்படிப்பட்ட கிடைத்தற்கரிய பொருள்களும் விலைமதிப்பு மிக்க பெரும் பொருள்களும் புகார் நகரின் வளமாக, அங்குமிங்குமாக எங்கும் ஒன்றோடொன்று மயங்கி முறைப்படுத்தப் படாமல் கிடந்தன.

சோழனின் வளம் கொழிக்கும் இந்த வரலாற்றுப் பெருமைகளை வேறெந்த நூலிலும் காணமுடியாது. ஒரு துறைமுகத்தின் பணிகளையும் பொருள்கள் மண்டிக் கிடப்பதயும் நம் கண் முன் காட்டும் ஓர் இலக்கியம் பட்டினப் பாலை.

தமிழ் நாட்டின் பழம் பெருமைக்கு இந்நூல் ஒரு நற்சான்றாக விளங்குகிறது.

எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
21-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives