துளி 22 – கூத்தராற்றுப் படை

23 Jan 2022 10:40 pm

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 22
நேரச்செலவு : 6 நிமையங்கள் / 23-01-2022

மலைபடு கடாம் (அ) கூத்தராற்றுப் படை

சங்க நூல்கள் பாட்டும் தொகையும் என்று பாட்டை முதலில் நிறுத்தியே கூறப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து நெடும்பாடல்களான பத்துப் பாட்டு நூல்களுக்கு முதன்மை தரப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

பத்துப் பாட்டு நூல்களுள் திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்தும் ஆற்றுப்படை நூல்கள் ஆகும்.
ஆற்றுப்படையிலக்கியம் என்பது தமிழ் மொழியில் மட்டும் தான் உள்ளது. வேறு எம்மொழியிலுமில்லை என்பது தமிழுக்கே உரிய தனிச்சிறப்பாகும்.

பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் இறுதியாக வைக்கப் பட்டிருக்கும் மலைபடு கடாம் அல்லது கூத்தராற்றுப் படை என்ற இந்த நூல், மலை, காடு, விலங்குகள், பறவைகள் அவற்றின் குரல்கள், அதன் இசைகள், அந்த இசையைத் தோற்றுவிக்கும் இசைக் கருவிகள் என இயற்கைக் கூறுகளுக்காக மட்டுமே படைக்கப் பட்ட ஒரு இலக்கியமாகத் திகழ்கிறது. இது போன்று எந்த உலக இலக்கியங்களிலும் நாம் காண முடியாது. மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் என சிறப்பித்ததனால் இப்பாட்டு மலைபடுகடாம் என்று பெயர் பெற்றதாக நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.

மலைபடு கடாமை எழுதியவர் ‘இரணிய முட்டத்துப் பெருங்குன்றுர்ப் பெருங்கெளசிகனார் ‘ ஆவார். அவர் மதுரையை அடுத்த நத்தம் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் என்று மா. இராசமாணிக்கனார் கூறுகிறார்.

நூலின் அளவு: 583 அடிகளைக் கொண்ட ஒரு நெடும் பாடல் ஆகும்.

மற்றவற்றைக் காட்டிலும் மலைபடுகடாமின் தனிச்சிறப்பு யாதெனில், பாட்டுடைத் தலைவன் அல்லது பாடுபவன் பெயரால் மற்ற ஆற்றுப்படைகளின் பெயர்கள் அமைந்துள்ளன. ஆனால் மலைபடுகடாம் மட்டும் அந்நூலில் பயின்று வரும் தொடரின் பெயரால் வழங்கப்படுகிறது.

நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில் நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தள, கிணை, சிற்பறை கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன.

அருவி, இசைக்கருவிகளின் இயல்பு, பண்ணியல்பு, தமிழ் நாட்டின் ஐவகை நிலங்களின் இயல்பு, அந்த நிலங்களின் இயற்கைச் சூழலியல் மக்களின் வாழ்வியல் என பல செய்திகளை உவமை நயத்துடன் விளக்கும் ஓர் அருமையான படைப்பு மலைபடு கடாம் என்பதாகும்.

பல்குன்றக் கோட்டத்துச் செங்காண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் பரிசில் பெற வரும் கூத்தர்களுக்கு அவன்பால் பரிசு பெற்ற ஒருவன் மற்றொருவனை ஆற்றுப் படுத்துவதாக (வழிகாட்டுவதாக) அமைந்ததே இந்நூல்.

பாணர் சுமந்துசெல்லும் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள்

பேரியாழ் மீட்டும் பாணர் கூட்டம் இசைக்கருவிகளை கலப்பையில் போட்டுச் சுமந்துகொண்டு செல்கிறது.

  • (கலம் = இசைக்கருவி) (கலப்பை = இசைக் கருவி போடும் பை)
  • முழவு = மத்தளம்,̀
  • ஆகுளி = சிறுபறை,
  • பாண்டில் = தாளம்,
  • உயிர்தூம்பு = மயில் திரும்பிப் பார்ப்பது போல் வளைந்திருக்கும். யானை பிளிறுவது போல ஒலி எழுப்பும்,
  • குறுந்தூம்பு = மெல்லிய ஒலி எழுப்பும் ஊதுகொம்பு,
  • குழல் – புல்லாங்குழல் (புல் = மூங்கில்),
  • தட்டை = இரு பிளவுகளைத் தட்ட ஒலிக்கும் கருவி,
  • எல்லரி = மோத ஒலிக்கும் பெரிய தாளவகை,
  • பதலை = பானை (கடம்)

இவற்றுடன் செல்லும்போது கானவர் காவலாளிகளாக அவர்களுக்குத் துணை வருவர்.

பேரியாழ் அமைந்திருக்கும் அழகு பற்றிய குறிப்புகள்

  • திவவு – முறுக்கிய வளையல் போல் இருக்கும்.
  • கேள்வி-யாழ் – கடுயப்படும் பகை நரம்புகளில் விர் போகாது இசைத்துப் பழக்கப்பட்டது.
  • நரம்பு – நல்ல முறுக்குடன் இன்னொலி எழுப்ப வல்லது.
  • அரலை – அரற்றும் அழுகை ஒலி தராதது.
  • துளை – வரகு அரிசி போன்ற துளைகளில் நரம்பு போத்துக் கட்டப்பட்டிருக்கும்.
  • பத்தல் – யாழின் இசை எதிரொலிக்கும் இடம்.
  • ஆணி – புதிய வெண்ணரம்புகள் கட்டப்பட்டிருக்கும்.
  • பச்சை – பத்தலுக்குத் தீட்டப்பட்டிருக்கும் வண்ணம்.
  • உந்தி – மகளிர் கூந்தல் இரு பிளவாய் வயிற்றில் தொங்குவது போன்ற அமைப்பினைக் கொண்டது யாழின் வயிறு.
  • மாமை – பருவப் பெண்ணின் பொன்னிற மேனியழகு போல் வண்ணம் தீட்டப்பட்டிருக்கும்.
  • உரு – அழகியைப் போல ஆனால் களாப்பழம் போன்ற புள்ளிகளுடன் தோற்றமளிக்கும். வளைந்து நிமிர்ந்த கொம்பு போல் இருக்கும்.
  • உயிர்ப்பு – எழுப்பும் ஓசை இன்பத்தில் ஆழ்த்தும்.
  • மலைபடு கடாம் (கடம் போன்று மலையில் கேட்கும் ஓசைகள்)
  • பலாப்பழ மணம் கமழும் அருவி ஒலி
  • வான் அரமகளிர் அருவியாடும் ஒலி
  • கானவர் ஓட்டுவதைப் பொருட்படுத்தாமல் வயலில் மேயும் யானைகள் தன் இனத்தை அழைக்கும் ஒலி
  • குகையில் படுத்துறங்கும் கானவன் பாறைமேல் வைத்திருந்த தன் அம்பு நழுவி விழ, வலி பொறுக்கமுடியாமல் அழும் ஒலி
  • மலைமக்களாகிய கொடிச்சியர் அவனுக்குப் பட்ட காயத்தை ஆற்ற ஊசியால் தைக்கும்போது அவனுக்கு வலி தெரியாமல் இருக்கப் பாடும் பாடல் ஒலி
  • வேங்கை பூவை மாலையாகக் கட்டும்போது பாடும் பாடல் ஒலி
  • யானைக் கன்றைப் புலி பிடித்துவிட்டதால் யானைக் கூட்டமே ஒன்று சேர்ந்து முழங்கும் ஒலி
  • தாய் தாவும்போது நழுவி விழுந்த குட்டியின் துடிப்பதைக் கண்டு மந்தி செய்யும் பூசல்
  • கானவர் கயிற்றின் வழியாக இறங்கித் தேனை எடுக்கும் கொள்ளை-ஒலி
  • அரசன் ஆணைப்படி சிற்றூர்களை வென்று அதனைச் சூறையாடும் கானவர் உவகை-ஒலி
  • சூறையாடியப் பொருளை அரசனுக்குப் போதுமளவு தந்தபின் எஞ்சியதைக் குறப்பெண்களுக்குத் தந்து அவர்களோடு கானவர் ஆடும் குரவை-ஒலி
  • பாறையில் மோதி இறங்கும் ஆற்றின் இரங்கல்-ஒலி
  • யானையைக் குழியில் விழச்செய்து, கயிறால் கட்டி அதனைப் பழக்க எழுப்பும் தமிழொடு கலந்த மொழியொலி
  • மூங்கிலைப் பிளந்து செய்த தட்டையை முழக்கிக்கொண்டு தினைப்புனத்தில் கிளியோட்ட மகளிர் பாடும் பாட்டொலி
  • வரையாட்டுக் கடாய்கள் இனத்தலைமைக்காகப் போரிடும் மோதல்-ஒலி
  • உண்டது போக எஞ்சிய பலாச்சுளைகளில் உள்ள கொட்டைகளை எடுப்பதற்காகச் சிறுவர் கன்றுகளைப் பிணையல் கட்டி காந்தள் பூத்த கொடிகளால் மெல்லத் தட்டி ஓட்டும் ஆரவார ஒலி
  • கரும்பின் கண்ணை உடைக்கும் கரும்பாலை ஒலி
  • தினை குற்றும் பெண்களின் வளையல்-தாள வள்ளைப்பாட்டொலி
  • நிலத்தைக் கிண்டி மஞ்சளையும் சேம்பினையும் வீணாக்கும் காட்டுப்பன்றிகளை ஓட்ட அடிக்கும் பறையொலி
  • இந்த எல்லா ஒலிகளையும் எதிரொலிக்கும் குன்றகச் சிலம்பு

இப்படிப் பல ஒலிகளைக் கேட்டுக்கொண்டே (மலைபடு கடாம் கேட்டுக்கொண்டே) பாணர் கூட்டம் மலையேறலாம்

மலைபடுகாடாமின் உவமை நயங்கள்

“தயிர் சிதறிக் கிடந்தது போல மலர்கள் உதிர்ந்து கிடந்தன”
“ஆகுளி என்னும் பறை முழங்கினாற்போல பேராந்தை, சேவல் ஒலிகள்’
“பலாக் கனிகள் முழவுகள் தூங்குவது போல் தூங்குகின்றன”
“இருள் துண்டுபட்டுக் கிடந்தது போல பன்றிகள் கிடக்கும்”
“நெடிய மரம் விழுந்து கிடந்தாற்போல மலைப்பாம்புகள் ”
“கலப்பு நெல்லின் பன்னிற அரசி போல பன்னிற ஆடுகள்”
“நன்னன் நகரத் தெருக்கள் பேரியாறு போல் கிடந்தன”
“கடலும் முகிழும் சேர்ந்து முழங்கினாற்போல முழக்கம்”

இப்படி பல்வேறு காட்சிகள் காட்டினிடையே எழும் பல்வேறு ஒலிகள், ஓசைகள் எனத் தனித்தனியாகக் கூறி இறுதியாக அவ்வொலிகளைத் தொகுத்து அதன் அருமை வெளிப்படும் வகையில் “மலைபடு கடாம்” எனப் பெயரிட்டுள்ளனர்.

திருவண்ணாமலையின் மேற்கே “செங்கண்மா” எனவும், “செங்கமா” எனவும் இன்று செங்கம் எனவும் அழைக்கப் படுகின்ற பகுதி தான் நன்னன் சேய் நன்னன் என்ற வேள்குடி மன்னன் ஆட்சி செய்த நிலப்பரப்பு மலைப்பரப்பு ஆகும்.

ஈதல் இசை பட வாழ்தல் என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவன் நன்னன் சேய் நன்னன்.

நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர்
வாரி கொள்ளா வரை மருள் வேழம்
கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை
பொலம் படை பொலிந்த கொய் சுவல் புரவி
நிலம் தின கிடந்த நிதியமோடு அனைத்தும் . . . .[575]
இலம்படு புலவர் ஏற்ற கை நிறைய
கலம் பெய கவிழ்ந்த கழல் தொடி தட கையின்
வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி
கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென
மழை சுரந்து அன்ன ஈகை நல்கி . . . .[580]
தலை நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர்
வென்று எழு கொடியின் தோன்றும்
குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே . . . .[561 - 583]

இந்த அருமையான இலக்கியத்தின் இறுதி அடிகளே மேற்கண்டவை.

நன்னன் தேரின் ஓட்டத்திற்கு நீரின் ஓட்டம்; யானைக்கு மலை; நன்னனின் கொடைத் திறனுக்கு மேகம் மழை சொரிதல்; அருவிக்கு வென்று உயர்த்திய கொடி என நம் கற்பனைக்கெட்டா வகையில் இயற்கையின் எழிலும் நன்னனின் கொடையும் விரித்துச் சொல்லும் இலக்கியம் மலைபடுகடாம் என்ற இந்த நூல்.

அன்பு உள்ளத்தினரே!
இத்துடன் தொல்காப்பியம், சங்க இலக்கியத் தொகுப்பிலுள்ள எட்டுத் தொகை மற்றும் பத்துப் பட்டு நூல்கள் என மொத்தம் பத்தொண்பது செவ்விலக்கிய நூல்களின் அறிமுகம் முற்றுப் பெறுகிறது. அனைத்தையும் தொடர்ச்சியாகப் படிக்க வாய்ப்பிழந்த நபர்கள் www.lemuriyafoundation.org என்ற வலைத்தளத்தில் அனைத்துத் துளிகளின் சிலிர்ப்பையும் ஒருங்கே பெறலாம், இனிவரும் நாள்களில் பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொறு துளியாக எடுத்தியம்புவேன்.

எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
23-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives