துளி 23 – பதினென் கீழ்க்கணக்கு

25 Jan 2022 4:20 pm

பதினெண் கீழ்க்கணக்கு

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 23
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 25 -01-202

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

நாம் ஏற்கனவே பகர்ந்தபடி தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் இருப்பினும் தொன்மைக் காலத்தில் (அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்) தோன்றிய 41 நூல்களை செவ்வியல் இலக்கியங்களாக வரையறுத்துள்ளனர். இதில் சங்ககால நூற்கள் முப்பத்தாறு (36). இவைகள் தவிர தொல்காப்பியம், இறையனார் அகப் பொருள், முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய ஐந்து நூல்களும் அடங்கும்.

இதுகாறும், தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என பத்தொண்பது நூல்களின் அறிமுகம் சிறு சிறு துளிகளாகத் தந்துள்ளோம்.

இனி நாம் பேசவிருப்பது சங்க கால நூல் தொகுப்பிலுள்ள பதினெண் கீழ்க் கணக்கு என்று வரையறை செய்யப் பட்டுள்ள (18) பதினெட்டு நூல்கள் குறித்த செய்திகளாகும். அந்தப் பதினெட்டு நூல்கள் யாவை?

  1. திருக்குறள்
  2. நாலடியார்
  3. நான்மணிக்கடிகை
  4. இன்னா நாற்பது
  5. இனியவை நாற்பது
  6. கார் நாற்பது
  7. களவழி நாற்பது
  8. ஐந்திணை ஐம்பது
  9. ஐந்திணை எழுபது
  10. திணைமொழி ஐம்பது
  11. திணைமாலை நூற்றைம்பது
  12. திரிகடுகம்
  13. ஆசாரக் கோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. கைந்நிலை
  17. முதுமொழிக் காஞ்சி
  18. ஏலாதி
    இதனை கீழ்க்காணும் தனிப்பாடல் நமக்கு உணர்த்துகின்றது
"நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை
முப்பால் கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலை காஞ்சி யோடு ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம் கீழ்க் கணக்கு."

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் வெண்பா யாப்பில் அமைந்தவை.

அடிநிமிர்பு இல்லாச் செய்யுள் தொகுதியால் அறம், பொருள், இன்பத்தைப் பாடுவது கீழ்க்கணக்கு என்று பன்னிருபாட்டியல் இலக்கணம் பகர்கிறது.

இந்தப் பதினெட்டு நூல்களில், ஆறு (6) நூல்கள் அகம் பற்றியும் பத்து(10) நூல்கள் புறம் குறித்தும் மீதி உள்ள நாலடியார், திருக்குறள் ஆகிய இரண்டு நூலும் அகம், புறம் குறித்தும் பேசுபவையாகும். அகம், புறம் குறித்துப் பேசினாலும் அனைத்து நூல்களின் அடிப்படை நாதமாக விளங்குவது அறம், நயன்மை, நேர்மை வாழ்வியல் என்பனவைகளே.

இந்த நூல்கள் பொதுவாக சங்ககாலம் தொடங்கி கி.பி 500 நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் இயற்றப் பட்டவைகளாகும். இதை ஏன் பதினெண் கீழ்க் கணக்கு என்று அழைக்கின்றார்கள்? கீழ்க் கணக்கு என்பது அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆனது என்று பொருள் படும்.

காதல், வீரம் முதலிய உணர்ச்சிகளிலும் இயற்கை இன்பத்திலும் திளைத்திருந்த சங்க காலச் சூழலைச் சற்று திருத்தியமைக்கும் பொருட்டு அடுத்த தலைமுறைக்கு நயன்மைச் செய்திகளை (நீதி நூல்கள்) படைக்க வேண்டிய நிலையில் அக்காலப் புலமை மூத்த அறிஞர்கள் இருந்தனர்.

வாழ்க்கையே ஒரு சிக்கல் ஆகிவிட்டமையால் குமுகாயத்தில் என்ன நீதிகளைப் போற்ற வேண்டும், எப்படி வாழ வேண்டும்? என்று எடுத்துரைக்க வேண்டிய கடமை புலவர்களைச் சார்ந்ததாயிற்று. அவ்வாறு படைக்கப் பட்டவை தான் பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள். ஆனால் அவை அனைத்தும் நீதி நூல்கள் அல்ல.

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை: 1.கார் நாற்பது, 2. களவழி நாற்பது 3. இன்னாநாற்பது 4. இனியவை நாற்பது என்பனவாம். கார் நாற்பதும் களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன. கீழ்க்கணக்கு நூல்களுள் மற்றுமொரு நூல் ஐந்திணை ஐம்பது.

பழமொழி நானூறு. நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல் பழமொழி நானூறு.

ஆறு மூலிகைகள் கொண்ட நூல் ஏலாதி, அது போல இன்று ஐந்து மூலிகைகள் கொண்ட ஒரு நூல் சிறுபஞ்ச மூலம், மற்றொரு நூல் நான்கடி இலக்கியமாக தொடர்வது நான்மணிக்கடிகை. புற வாழ்க்கைப் பற்றிப் பேசும் ஒரு நீதி நூல் ஆகும்.

மற்றொன்று திரிகடுகம். திரி என்ற சொல்லுக்கு தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று என்று பொருள். எனவே இதன் வேர் எது என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக் கோவை. அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல நெறிகளை இலக்கியத்தில் பதிவு செய்திருப்பதை ஆசாரக்கோவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அவ்வையின் ஆத்திச் சூடி போன்ற வடிவில் நயமான 100 நல் அறிவுரைகள் அடங்கியக் கருவூலம் முதுமொழிக் காஞ்சியாகும்.

ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் அமைந்துள்ள நூலின் பெயர் ஐந்திணை எழுபது என்பதாகும்.

ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையின் ஒரு நூல் ‘திணைமாலை’ என்றும், பாடல் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும் இந் நூல்பெயர் பெற்றுள்ளது. கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பதினேழு உறுதியாய்ச் சொல்லப்படுகிறது. பதினெட்டாவது நூல் இன்னிலையா? கைந்நிலையா? என்ற ஐயம் உள்ளது. ‘இன்னிலை’ என்று பலர் கூறினர். ‘கைந்நிலை’ ஒன்று என மேலும் பலர் கூறினர். நாம் இரண்டு நூல்களையும் காண்போம்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18 ல் 10 நூல்கள் புறம் சார்ந்தும் 6 நூல்கள் அகம் சார்ந்தும், மீதியுள்ள இரண்டு நூல்கள் திருக்குறள், நாலடியார் என்பவை அகம், புறம் சார்ந்தும் உள்ள நூற்களென ஏற்கனவே விளம்பியுள்ளேன். அகப்பொருள் குறித்து பேசுவன ஆறு நூல்களாகும். அவை (1) கார்நாற்பது (2) ஐந்திணை ஐம்பது (3) திணைமொழி ஐம்பது (4) ஐந்திணை எழுபது (5) திணைமாலை நூற்றைம்பது (6) கைந்நிலை என்பன.

உலகின் தலை சிறந்த நூலாகப் போற்றப் படுவது திருக்குறள். அதை வேறு எந்த நூலுடனும் ஒப்பீடு செய்ய இயலாது. திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப் பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார்.

இனிவரும் நாள்களில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொறு துளியாக எடுத்தியம்புவேன். தமிழ் ஓர் அறிவுச் சுரங்கம்!

எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
25-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives