துளி 24 – திருக்குறள்

27 Jan 2022 11:06 am

திருக்குறள்

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 24
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 27-01-202

திருக்குறள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் முதலாவதாக இன்று நாம் பார்க்க இருக்கும் இலக்கியம் முதன்மையான ஒன்றாகவும், உலக இலக்கியங்களில் ஒப்பற்ற நூலாகவும் திகழும் திருக்குறள்.

திருக்குறளைத் தமிழ் மக்களிடம் அறிமுகப் படுத்தத் தேவையில்லை யெனினும் இதுகாறும் அதன் சிறப்பை அறியாது எடுப்பார் கைப் பிள்ளையாக எதை எதையோ தம் மக்களுக்குப் புகட்டி வரும் மக்களுக்காக அதன் சிறப்பு, சீர்மை குறித்து சில செய்திகளைச் சொல்ல வேண்டியத் தேவை உள்ளது.

சற்றொப்ப 2100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவரால் இயற்றப் பட்ட இந்நூல் 133 அதிகாரங்களில் 1330 பாக்களைக் கொண்ட ஓர் அறிய நூல். அறத்துப்பால் 38 அதிகாரங்கள், பொருட்பால் 70 அதிகாரங்கள், இன்பத்துப் பால் 25 அதிகாரங்கள் என மொத்தம் 133 அதிகாரங்கள். அறம் பொருள் காமம் என மூன்று பகுப்புகளில் மனித வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் எடுத்தாண்டுள்ள ஓர் இலக்கியம் ஆகும்.

அறத்துப் பாலில் பாயிரம், இல்லறம், துறவறம், ஊழ் என நான்கு பிரிவுகள், பொருட்பாலில் அரசியல், அமைச்சியல், அரணியல், பொருளியல், படையியல், நட்பியல், குடியியல் என ஏழு பிரிவுகள், காமத்துப்பாலில் ஆண்பாற் கூற்றியல், பெண்பாற் கூற்றியல், இருபால் கூற்றியல் என முப்பிரிவுகள் உள்ளன.

திருக்குறளுக்கு கி.பி. 8 லிருந்து கி.பி 14 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் சற்றொப்ப பதின்மர் உரையெழுதியுள்ளனர்.

  1. தருமர்,
  2. மணக்குடவர்,
  3. தாமத்தர்,
  4. நச்சினார்க்கினியர்,
  5. பரிதி,
  6. பரிமேலழகர்,
  7. திருமலையார்,
  8. மல்லர்,
  9. பரிபெருமாள்,
  10. காளிங்கர்.
    இந்த பத்துபேரில் மணக்குடவர் தான் முதல் உரையாசிரியர் என்பது அறிஞர்கள் கூற்று. இதில் ஐந்து பேரின் உரைகள் கிட்டவில்லை.

மணக்குடவர் உரையைத் தழுவியே வ.உ. சிதம்பரனார் பிற்காலத்தில் உரை எழுதினார். தொடர்ந்து எண்ணற்ற அறிஞர் பெருமக்கள் திரு.வி.க, மு.வரதராசனார், புலவர் குழந்தை, முனுசாமி, கு.ச. ஆனந்தன், கலைஞர் மு.கருணாநிதி உட்பட பலர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனர்.

திருவள்ளுவரின் திருக்குறள் ஓலைச் சுவடியில் இருந்து முதன் முதலில் அச்சிட்டவர் எல்லிஸ் எனும் ஆங்கிலேயர். அதுவரையில் ஓலைச் சுவடியிலே திருக்குறள் இருந்தது.

1823 இல் சென்னைக்குப் பணியாற்ற இங்கிலாந்தில் இருந்து எல்லிஸ் வந்தார். வந்தவர் தமிழ் படிக்க விரும்பினார். சென்னையில் தமிழ்ச் சங்கம் 1825_இல் ஏற்படுத்தினார்.

திருக்குறள் ஏட்டுச் சுவடி ஒன்றைக் கந்தப்பன் என்பவர் தாம் வேலை பார்த்த ஆரிங்டன் துரை வழி எல்லிஸ் துரையிடம் சேர்த்தார். இவர் அயோத்தி தாச பண்டிதரின் பாட்டனார் என்று கூறுகின்றார்.

இதை தமிழ் மறை, பொது நூல், பொதுமறை, வாழ்வியல் நூல், நீதி நூல், பண்பாட்டு நூல், ஒழுக்க நூல், அரசியல் நெறி நூல், பொருளியல் நெறி நூல், இன்பவியல் நெறி நூல், பேரிலக்கிய நூல் என்றும் அழைப்பர். திருக்குறள் உலகம் உய்யும் பொருட்டு உயர் நெறிகாட்ட வந்த ஒரு அரும் பெரும் பொது அறநூலாகும்

திருக்குறள் சங்க கால இலக்கிய நூல்களைப் போன்று ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, நேரிசை-இன்னிசை என விரிந்தும் பரந்தும் நெடியனவாக இல்லாமல் மிகச் சுருங்கிய அளவில் ஏழு சீர்களைக் கொண்டு ஒன்றே முக்கால் அடிகள் கொண்ட குறட்பாக்களாக அமைந்த ஒன்று.

அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்தக் குறள்
– என்று ஒளவை பாடியாதாக “திருவள்ளுவ மாலை” என்ற குறள் வெண்பாக்களில் காணப்படுகிறது.

உலக மொழிகள் பலவற்றில் மிகுதியாக மொழி பெயர்க்கப் பட்ட இலக்கியம் திருக்குறள் ஆகும்.

திருக்குறளில் சற்றொப்ப 12,000 சொற்கள் பயிலப் பெற்றுள்ளது. இதில் ஏறத்தாழ 50 வடசொற்கள் உள்ளன என்பது தமிழறிஞர்கள் சிலரின் கூற்று. ஆனால் பாவாணர் அவர்களோ 17 சொற்கள் மட்டுமே வட மொழிச் சொற்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

1730 ல் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் சில பகுதிகளை மொழி பெயர்த்தார், தொடர்ந்து இலத்தீன் மொழியில் சார்லஸ் கிராஸ், அந்தோனியா சொரன்றினோ எனத் தொடங்கி இதுகாறும் 90க்கும் மேற்பட்ட மொழிகளிலும், ஒரே மொழியில் பலரும் மொழி பெயர்த்தும் சற்றொப்ப 140 மொழி பெயர்ப்புகள் வந்துள்ள ஒரே இலக்கியம் திருக்குறள் ஆகும்.

திருக்குறள் ஆரியக் கருத்துகளிலிருந்து முற்றாக வேறுபட்ட ஒரு நூலாகும்.

பிறப்பால் சிறப்புண்டு என்பதை ஏற்காமல் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறியது திருக்குறள். கல்வி அனைவருக்கும் பொது, குற்றத் தண்டனை நடு நிலை பற்றியது, உழவு உயிர்களை ஓம்பும் உயர் தொழில், விருந்தோம்பல் குலமுறைப் பற்றாதது, தாய்ப் பசிப்பினும் பழிக்கத் தக்கது செய்யலாகாது, இல்லறம் துறவறம் என வாழ்க்கை நிலை இரண்டு, அறம் என்பது எல்லார்க்கும் ஆன நல்வினை, தென் புலத்தார் என்போர் இறந்த முன்னோர் என பலவகையிலும் ஆரியக் கோட்பாடுகளுக்கு எதிராக அல்லது மனித நேயக் கோட்பாடுகளை வலியுறுத்திக் கூறுவதே திருக்குறள் ஆகும். செல்வத்துப் பயனே ஈதல் என்பதை வலியுறுத்திக் கூறும் திருக்குறள், செல்வம் அறவழியில் ஈட்டப் படவேண்டும் எனவும் வழிகாட்டுகிறது.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு
என்று பாரதியும்,
“வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர் உள்ளுவரோ – மனுவாதி ஒரு குலத்துகு ஒரு நீதி” 
என்று மனோன்மணியம் சுந்தரனாரும்,
எல்லா நாட்டினருக்கும், எல்லா மதத்தினருக்கும், எல்லாக் கொள்கையினருக்கும் இன்றியமையாத வாழ்க்கை ஒழுக்கத்தை தெளிவாகக் கூறும் பெருமை வாய்ந்த நூல் திருக்குறள் 
என உ.வே. சாமிநாதரும்,
உயர்ந்த அனுபவ ஞானம் நிறைந்த அறவுரைத் தொகுப்பு திருக்குறளில் உள்ளது போன்று வேறு எந்த உலக இலக்கியங்கிலும் இல்லை
- என ஜெர்மானிய அறிஞர் அல்பர்ட் சுவைச்சரும் கூறியுள்ளனர்.

நமக்கு இலக்கியம் என்று சொல்லுகின்ற முறையில் ஏதாவது வேண்டுமானால் அதற்கு திருக்குறளை வைத்துக் கொள்ளலாம் – என்று தந்தை பெரியார் சொல்லியதோடு 1949 ஆம் ஆண்டு திருக்குறளுக்காக தனி மாநாடு ஒன்றையும் பெரியார் தலைமையிலான இயக்கம் கூட்டியது.

இத்தனை சிறப்புகள் வாய்ந்த திருக்குறளை அண்மைக் காலமாக சில விலைபோன தமிழர்கள் ஆரியம், வேதம் சார்ந்ததென்றும், வட மொழியின் மொழிபெயர்ப்பு என்றும் பிதற்றித் திரிகின்றனர். இதில் உறைந்துள்ள பொய்மையயும், சூழ்ச்சியையும் தமிழர்கள் அறிந்து கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.

ஆனால் திருக்குறள் போன்ற ஒரு பொதுமை நூல் உலகில் இல்லை எனவே அது இந்திய ஒன்றியத்தின் தேசிய நூலாக அறிவிக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கை பல்லாண்டு காலமாக அறிஞர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் ஒன்றிய அரசு பெரும்பாலும் வட இந்திய மக்களால் அமைவுறுவதால் இந்தக் கோரிக்கை நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (628)
இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

மேற்கண்ட குறளடிகளுக்கு விரிவான விளக்கம் தேவையில்லை என்று கருதுகிறேன்.

எனவே திருக்குறள் என்பது தமிழர் வாழ்வியல் அற இலக்கியம் மட்டுமல்ல, வாழ்வியல் முறைமைகளைக் கண்டறியும் ஓர் அகராதி; தமிழ்க் குமுகாயத்தின் ஒர் ஆவணம் என்றுணர்ந்து தமிழர்கள் படித்து உய்வுற வேண்டும்.

எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
27-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives