28 Jan 2022 11:08 am
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 25
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 28-01-202
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் 18 களில் 10 நூல்கள் புறம் சார்ந்தும் 6 நூல்கள் அகம் சார்ந்தும், மீதியுள்ள இரண்டு நூல்கள் திருக்குறள், நாலடியார் என்பவை அகம், புறம் சார்ந்தும் உள்ள நூற்களென ஏற்கனவே பதினெண் கீழ்க்கணக்கு அறிமுகப் பதிவில் விளம்பியுள்ளேன்.
உலகின் தலை சிறந்த நூலாகப் போற்றப் படுவது திருக்குறள். அதை வேறு எந்த நூலுடனும் ஒப்பீடு செய்ய இயலாது. திருக்குறளுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப் பெறும் சிறப்பு வாய்ந்த அறநூல் நாலடியார்.
வெள்ளாண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள்
எல்லாருங்கூடி எடுத்துரைத்த – சொல்லாய்ந்த
நாலடிநானூறு நன்கு இனிதாமென் மனத்தே
சீலமுடன் கற்க தெளிந்து
- என்ற தனிப் பாடலும் இதன் பெருமை உணர்த்தும்
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.
திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர்கள் பலர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும் என்பது அறிஞர்கள் கருத்து. இவர்கள் பாண்டிய மன்னன் உக்கிரப்பெருவழுதி என்பவனால் ஆதரிக்கப் பெற்றவர்கள்.
இதன் காலம்: கடைச்சங்க காலம். பவுத்த, சமண சமயங்கள் தமிழ் நாட்டில் கோலோச்சிய நாள்களில் மணிமேகலைக் காப்பியம் எழுதப் பட்ட கி.பி. 2ஆம் நூற்றாண்டு காலத்திலேயே நாலடியாரும் எழுதப் பட்டிருக்கிறலாம் என்பது அதன் கருத்துகள் வழி புலப்படுகிறது.
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி',
“நாலடி இரண்டடி கற்றவனிடத்தில் வாயடி கையடி செல்லாது”
எனும் தனிப்பாடல் வரிகள் திருக்குறள், நாலடியார் நூல்களின் மேன்மையை உணர்த்தவல்லன.
நூல் அமைப்பில் இரண்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. திருக்குறள் சூத்திரம் போன்று இரண்டு அடிகளில் கருதிய பொருளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறது; நாலடியாரோ, பொருள்களைத் தக்க உதாரணம் காட்டி விளக்குவதோடு, நான்கு அடி வெண்பாக்களால் இந்நூலின் செய்யுட்கள் அமைந்திருத்தலால் ‘ஆர்’ என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, ‘நாலடியார்’ என்று வழங்கி வருகின்றனர். குறளைத் ‘திருக்குறள்’ என்று குறித்ததைப் போல, நாலடி வெண்பாக்களாலாகிய வேறு நூல்கள் பல தமிழில் இருக்கவும், இந்நூல் ஒன்றையே ‘நாலடி’ என்ற பெயரால்குறித்து வந்துள்ளனர்.
இந் நூலில் அமைந்துள்ள பாடல்தொகையை உட்கொண்டு, ‘நாலடி நானூறு’ என்றும் இதுகுறிக்கப் பெறுகின்றது. இதற்கு ‘வேளாண் வேதம்’ என்ற ஒரு பெயரும் உளதென்பது சில தனிப் பாடல்களால் தெரியவருகிறது.
இதன்கண் 40 அதிகாரங்களும் 400 பாடல்களும் உள்ளன. அறத்துப் பால் 13 அதிகாரங்கள்; பொருட்பால் 24 அதிகாரங்கள், இன்பத்துப் பால் 3 அதிகாரங்கள் என பகுக்கப் பட்டுள்ளது.
இந்த நூலை பண்டைய உரையாசிரியர்கள் அடியார்க்கு நல்லார், நச்சினார்கினியார், சேனாவரையார், இளம்பூரணார், பரிமேலழகர், பேராசிரியர் போன்றவர்கள் எடுத்தாண்டிருப்பதிலிருந்து இதன் பெருமை நன்கு புலனாகும்.
செல்வம், இளமை, யாக்கை என இவைகள் மூன்றின் நிலையாமை குறித்துத் தொடக்கப் பாடல்கள் அமைந்துள்ளன.
சரி இனி ஓரிரு செய்யுள்களைப் பார்ப்போம்:-
அதன் முதல் பாடலே செல்வத்தின் நிலையாமை குறித்துப் பேசுவதாகும்;
அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று.
அறுசுவை உணவை மனைவி ஊட்டிவிடும் போது ஒரு கவளத்தை உண்டு மறு கவளத்தை ஒதுக்கியச் செல்வந்தர்கள் கூட ஏழைகளாகி, வேறோரிடம் சென்று கூழுக்காகப் பிச்சை எடுப்பார்கள் செல்வம் என்ற ஒன்று உள்ளதாக எண்ணத்தக்கது அல்ல.
நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
வாழ்நாள்கள் கழிந்து போயின, சாவும் வெகுண்டு எழுந்து விரைவில் வரும், தொன்று தொட்டு நிலைத்திருந்த செல்வமும் நிலையாது என்பதறிந்து தங்களால் செய்ய முடிந்த அறங்களைச் செய்ய நினைத்தால் விரைந்து செய்து விடுக என்பதாகும்.
தெளிவிலார் நட்பின் பகைநன்று; சாதல்
விளியா அருநோயின் நன்றால் - அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்லா
புகழ்தலின் வைதலே நன்று.
தன்னைப் பற்றித் தெளிவில்லாதவன் நட்பை விடப் பகையே நல்லது; தீராமல் துன்பம் தரும் நோயை விட இறத்தல் நல்லது; மனம் நைந்து போகுமாறு இகழ்ந்து பேசுவதைக் காட்டிலும் கொன்று விடுதல் நல்லது; இல்லாத குணங்களைக் கூறிப் புகழ்வதை விட திட்டித் தீர்ப்பது நல்லது.
எதுகை மோனை அழகுபட வரும் மற்றொரு பாடல்;-
வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்.
“நாள் தோறும் காலம் (நாட்பொழுது) வந்து தோன்றி மறைவதைப் பார்த்தும், அதனை உணராமல், அறச் செயல்களை செய்யாமல் நம் நேரம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று நினைத்து இன்பச் செயல்கள் மட்டுமே செய்யும் மாந்தரும் இருக்கின்றனர். அம்மாந்தர்கள் நாள்தோறும் தம்முடைய வாழ்நாள் அதிகரித்து ஆயுள் பெருகிக் கொண்டு இருக்கும் என்று நினைத்து வாழ்நாளின் நிலையாமையை உணராதவர்கள் ஆவர்.” இங்கு நமக்குள்ள காலம் மிகச் சிறிது. அந்தக் காலத்தில் அறச் செயல்களும் செய்து இன்புறுவோமாக என்பதை விளக்கும் பாடல்.
இப்படி ஏராளமான பாடல்களின் உறைவிடம் தான் நாலடியார். திருக்குறள் போல இதுவும் வாழ்வியல் நெறிகள் உரைக்கும் ஒரு நூல்.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
28-1-2022.
We can not do it alone. Join with us.