துளி 26 – இன்னா நாற்பது

30 Jan 2022 11:54 am

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 26
நேரச்செலவு : 6 நிமையங்கள் / 30-01-202

இன்னா நாற்பது

இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது.

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை:

  1. கார் நாற்பது,
  2. களவழி நாற்பது
  3. இன்னாநாற்பது
  4. இனியவை நாற்பது

என்பனவாம். கார் நாற்பதும் களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன.

இன்னா நாற்பது என்னும் நூல் கடவுள் வாழ்த்துடன் (41) நாற்பத்தொரு பாடல்களைக் கொண்டது.

இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.

இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றி நூற்று அறுபத்து நான்கு கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன.
நூலாசிரியர் பெயர் : கபிலர். இவர் பாரியின் நண்பர் கபிலராக இருக்க வாய்ப்பில்லை. பிற்காலத்தவர் எனத் தோன்றுவதாக அறிஞர்கள் பதிவு செய்துள்ளனர்.

எடுத்துக் காட்டாகச் சில பாடல்கள்;-

உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;
நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
எண் இலான் செய்யும் கணக்கு. 16
(புணர்ச்சி - சேர்க்கை வனப்பு – அழகு)

உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம் பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன் இயற்றும் கணக்கு துன்பமாம்.

ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;
மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,
ஈன்றாளை ஓம்பா விடல். 17
(பேதை - அறிவு இல்லாதவன் அவிந்த – அடங்கிய)

கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.

நறிய மலர் பெரிது நாறாமை இன்னா;
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;
அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,
சிறியார் மேல் செற்றம் கொளல். 37
(நாற்றம் - மணம் செற்றம் கொளல் - சீற்றம் கொள்ளுதல்)
  • வித்தை கல்லாதவர் / தொழிற் பயிற்சி இல்லாதவர் ஒரு செயலை செய்ய முற்படுதல் (திறன் இலான் செய்யும் வினை இன்னா – பாடல்: 38);
  • திட்டமிடாமல் செயலில் இறங்குதல், (தறி அறியான் கீழ் நீர் பாய்ந்தாடுதல் இன்னா – பாடல்: 29)
  • வெற்று வாக்குறுதிகள் வழங்குதல், (வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா – பாடல்: 28)
  • தேவையான நேரத்தில் கிடைக்காத உதவிகள், (எருது இல் உழவர்க்கு போகு ஈரம் இன்னா – பாடல்: 4)

போன்ற கருத்துகளை பல்வேறு கோணங்களில், பல்வேறு தொழில் செய்வோர் வழியாகவும், பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துக்காட்டுகளுடன் காட்டுகின்றது .

எனினும் இது பெண்கள் குறித்து ஓர் ஆண்வழிச் சிந்தனையாகச் சில பண்புகளையும் உடற்கூறுகளையும் வலியுறுத்துவது பெண்ணடிமைக் கோட்பாட்டை நினைவு கூர்வதாகவே உள்ளது.

  • பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா [பாடல்: 1]
  • ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா [பாடல்: 2]
  • உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா [பாடல்: 11]
  • முலை இல்லாள் பெண்மை விழைவு இன்னா [பாடல்: 12]
  • பிணி அன்னார் வாழும் மனை இன்னா [பாடல்: 13]
  • வணரொளி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா [பாடல்: 14]

இக்குறிப்பிட்ட வரிகள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டுகின்றன. ஒழுக்க நெறிகள் என்பவற்றை இருபாலாருக்கும் பொதுவில் வைப்பதே சிறப்பாகும். அதனால் இந்த நூலின் சில பகுதிகள் தற்காலச் சூழலுக்குப் பொருத்தமாக அமையவில்லை என்பது எம் கருத்தாகும்.

எனவே எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்டு தெளிக

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
30-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives