துளி 27 – இனியவை நாற்பது

01 Feb 2022 3:05 pm

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 27
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 01-02-202

இனியவை நாற்பது

இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர் கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவது நூலாகும்..

இன்னா நாற்பதை அடுத்துத் தோன்றிய நூல் இனியவை நாற்பது. கடவுள் வாழ்த்து நீங்கலாக இது 40 பாடல்களைக் கொண்டது.

வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து ‘இனிது’ என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இது ‘இனியவை நாற்பது’ என அழைக்கப்பட்டது.
இனியவை நாற்பது என்னும் நூலில் உள்ள நாற்பது பாடல்களில் வாழ்வில் இனிமை தரும் செய்திகள் அனைத்தும் தொகுத்துத் தரப்படுகின்றன.

ஆனால் கண்மூன்றுடையான், துழாய்மாலையான், முகநான்குடையான் என சிவன், திருமால், பிரம்மா என போற்றும் பாடல்கள் இதன் கடவுள் வாழ்த்துப்பாடலாக உள்ளதால் கடவுள் வாழ்த்து பிற்காலத்தது ஆகும். அது பிற்காலத்தில் இணைக்கப் பட்டதாகும். அது போல நூலின் உள்ளேயும் ஆங்காங்கு பெண்களைச் சிறுமைப் படுத்தும் சில செய்திகளும் இதில் தெரியவருகிறது.

இனியவை நாற்பதில் 1,3,4,5 ஆகிய பாடல்களில் மட்டுமே நான்கு இனிய கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. ஏனைய பாடல்களில் மூன்று இனிய கருத்துகள் என்ற அளவிலேயே பொருள்கள் கூறப்பட்டுள்ளன.

இதன் ஆசிரியர் மதுரையைச் சார்ந்த பூதஞ் சேந்தனார் என்பவராவார்.

இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு. பல இடங்களில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு எனவும் பதிவு செய்துள்ளனர். இது செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றாதலால் இதன் காலம் 2 ஆம் நூற்றாண்டு எனக் கொள்வதே பொருந்தும்.

பூதஞ்சேந்தனார் திருக்குறளை நன்கு கற்றவர் என்பது இந்நூலால் அறியக் கிடைக்கிறது. இவர் பல இடங்களில் குறட்பா அடிகளையும், கருத்துகளையும் அப்படியே எடுத்துக் கையாண்டுள்ளார்.

குழல் இனிது யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர் (குறள் 66)

என்ற குறட்கருத்தை அடியொற்றி

குழவி தளிர்நடை காண்டல் இனிதே
அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே

எனும் அடிகளையும் இதில் நாம் காணமுடிகிறது.

மேலும் சில பாடல்களைக் காணலாம்.

பிறன்கைப் பொருள் வெளவான் வாழ்தல் இனிதே;
அறம்புரிந்து, அல்லவை நீக்கல் இனிதே;
மறந்தேயும் மாணா மயரிகள் சேராத்
திறம் தெரிந்து வாழ்தல் இனிது. (21)

பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. அறம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.

பத்துக் கொடுத்தும் பதி இருந்து வாழ்வு இனிதே;
வித்துக் குற்று உண்ணா விழுப்பம் மிக இனிதே;
பற்பல நாளும் பழுது இன்றிப் பாங்கு உடைய
கற்றலின் காழ் இனியது இல். (40)

பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

நன்றிப் பயன் தூக்கி வாழ்தல் நனி இனிதே;
மன்றக் கொடும்பாடு உரையாத மாண்பு இனிதே;
'அன்று அறிவார் யார்?' என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின், நன்கு இனியது இல். (30)

ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி மன்றத்தில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.

இனியவை நாற்பது என்று பெயரிட்டிருந்தாலும் இதில் எம் பார்வையில் சில கசப்பான சொற்களும் காணக் கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்தே வடமொழி சிந்தனை மரபுகள் தென் மொழியிலும் புகுத்தப் பட்டதன் விளைவாக பெண்கள் குறித்து இழிவாகவும் எழுதப் பட்டுள்ளதாக அறிகிறோம்.

எடுத்துக் காட்டாக ….

இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே;
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே;
தடமென் பணைத் தோள் தளிர் இயலாரை
விடம் என்று உணர்தல் இனிது. (37)

மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை நஞ்சு (விடம்) என்று உணர்தல் இனிது என்ற ஒப்பீடு மூலம் பெண்கள் குறித்த சனாதனச் சிந்தனைகளும் இங்கு விதைக்கப் பட்டிருப்பதாகவே நினைக்கிறோம்.
மேலும் இந்நூலில் சொல்லப் பட்டிருக்கும் யானைப் போர், குதிரைப் போர் இனிமை போன்றவை தற்காலச் சூழலில் பொருத்தமற்றவையாகும்.

எனவே எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அவற்றில் நல்லவை கொண்டு அல்லவைகளைத் தள்ளிச் சுவைப்பதே அறிவை வளர்க்கும். இன்பம் தரும். பிற்கால நூல்களைப் படிக்கும் போது ஆழ்ந்து ஆய்ந்து படிப்பதன் மூலமே நம் சங்க மரபுகளை அறிந்து கொள்ள இயலும்.

எனவே எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்டு தெளிக

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
1-2-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives