02 Feb 2022 6:47 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 28
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 02-02-2022
பதினென்கீழ்க் கணக்கு நூல்களில் நாற்பது
என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை:
1.கார் நாற்பது,
2. களவழி நாற்பது
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
என்பனவாம். கார் நாற்பதும் களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகிய இரண்டும் அறம் சார்ந்தவையெனக் கடந்த பதிவுகளில் கண்டோம்.
இன்று நாம் எடுத்துக் கொள்வது கார் நாற்பது என்னும் நூல். கார்காலத்தின் சிறப்பும் காதலின் சிறப்பும் உணர்த்தும் ஓர் நூல்.
அன்பு வயப்பட்ட காதலர்களின் அகத்திணை ஒழுக்கத்தை நம் தமிழ் இலக்கியங்கள் ஐந்திணை ஒழுக்கமாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகைப் படுத்துகிறது. மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி, காடும் காடு சார்ந்த இடம் முல்லை, வயல் சார்ந்த இடம் மருதம், கடல் சார்ந்த இடம் நெய்தல் இந்நிலப்பரப்புக்குள் அடங்காத பகுதி பாலை எனவும் பிரித்து அதற்கான பெரும் பொழுது, சிறுபொழுதுகளையும் வகைப் படுத்துவது நமது அகத்திணை இலக்கியங்கள் ஆகும். அந்த வகையில் முல்லைத் திணை என்பது முல்லை நிலத்தில் கார்காலத்தில், மாலைப் பொழுதில் தலைவனின் வரவுக்காக காத்திருப்பதை “இருத்தல், இருத்தல் நிமித்தம்’ என வகைப் படுத்தும்.
பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத் தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் காத்திருக்கும் தலைவியின் ஏக்கத்தின் ஊடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது என்பதாகும். கார்காலத்தின் இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில் நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு சேர்த்து இந் நூலில் ஒருங்கே எடுத்துக் கூறப்படுகின்றது.
மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது இந்நூல்..
காலம் : கி.பி. 2 ஆம் நூற்றாண்டு.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒரே ஒரு திணையைக் (அதாவது முல்லைத் திணை மட்டும்) குறித்துப் பாடும் நூல் “கார் நாற்பது”. அதாவது இருத்தல் இருத்தல் நிமித்தம் பாடப்பட்டது.
இதன் சிறப்புப் பாயிரம்
முல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ,
மெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல்
வல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே,
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து.
முல்லைக் கொடிகள் மகிழ்ந்து மணம் வீச, கரிய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் மகிழ, மழை பொழியும் மின்னலை உடைய கார் மேகத்தினைக் கொண்டு, கற்றறிந்தார் தீம் தமிழை வளர்க்கும் என்று மகிழ “கார் நாற்பது” என்ற இந்நூல் இருக்கிறது.
இதில் காணப் படும் ஒரு சில செய்யுள் துளிகள்:-
செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்; - வயங்கிழாய்!-
முல்லை இலங்கு எயிறு ஈன, நறுந் தண் கார்
மெல்ல இனிய நகும். (14)
மகளிரின் பற்கள் போன்று முல்லை மலர, நல்ல குளிர்ந்த மேகம், செல்வம் பெற வேண்டிப் பிரிந்து சென்ற நமது தலைவர் விரைந்து வருதல் உண்மை என்று மின்னியது எனத் தோழி தலைவியிடம் கூறினாள்.
நச்சியார்க்கு ஈதலும், நண்ணார்த் தெறுதலும்
தற்செய்வான் சென்றார்த் தரூம் – தளரியலாய்!
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வித் தீப் போல
எச்சாரும் மின்னும் மழை. (07)
தம்மை விரும்பியடைந்தார்க்கு ஈதலும், அடையாத பகைவரை அழித்தல் பொருட்டுப் பொருள் தேடச் சென்ற தலைவரை, மறப்பில்லாத புகழையுடைய வேள்வித்தீயைப் போல மின்னும் மழையை வானமானது கொண்டு வரும்.
நலம் மிகு கார்த்திகை, நட்டவர் இட்ட
தலை நாள் விளக்கின் தகை உடையவாகி
புலம் எலாம் பூத்தன தோன்றி; - சிலமொழி!
தூதொடு வந்த மழை. (26)
தோன்றிப்பூக்கள் நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகி இடமெல்லாம் பூத்தன. மழையும் தூதுடனே வந்தது என கார்காலத்தின் வருகையையும் காதலனின் வருகையுடன் இணைத்துக் காண்பதாக அமைந்த பாடல்.
வந்தன செய் குறி; வாரார் அவர் என்று
நொந்த ஒருத்திக்கு நோய்தீர மருந்தாகி
இந்தின் கருவண்ணம் கொண்டன்று, எழில் வானம்
ஈந்துமென் பேதை நுதல் (40)
மெல்லிய பேதையே! தலைவர் செய்த குறிகள் வந்து விட்டன. அவர் வரமாட்டார் என வருத்தப்பட்ட ஒருத்தியாகிய உனக்கு நோயைத் தீர்க்கும் மருந்தாகி, அழகிய முகில் ஈந்தின் கனியின் நிறம் போல கொண்டது உன் நுதல் இனி ஒளி வரப் பெறும்என தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறுவதாக இந்த நூல் முற்றுப் பெறுகிறது.
எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
2-2-2022.
We can not do it alone. Join with us.