துளி 29 – களவழி நாற்பது

06 Feb 2022 10:11 am

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 29
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 06-02-2022

களவழி நாற்பது

பதினென் கீழ்க் கணக்கு நூற்தொகுப்பில் உள்ள நூல்களுள் புறப்பொருள் பற்றிக் கூறுகின்ற ஒரே நூல் களவழி நாற்பது.

நாற்பது என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு எனக் கண்டோம் அவை:

  1. கார் நாற்பது,
  2. களவழி நாற்பது
  3. இன்னாநாற்பது
  4. இனியவை நாற்பது

என்பனவாம். கார் நாற்பதும் களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை. இதில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது ஆகிய நூல்களைக் கடந்த பதிவுகளில் கண்டோம்.

களவழி நாற்பது என்ற இந்த நூலின் ஆசிரியர் : கடைச் சங்க காலப் புலவர் பொய்கையார் என்பவராவார்.

காலம் : கி.பி. 250 ஆம் ஆண்டு எனக் கொள்ளலாம்.

ஒரு நாட்டின் வளமையும் பாதுகாப்பும் உறுதி செய்ய்பட்டால் அந்நாடு நன்நாடு ஆகும்.
அதாவது, ஒன்று உணவு உற்பத்தியை வழங்குகின்ற ஏர்க் களம், மற்றொன்று பகைவரை வென்றெடுக்கின்றப் போர்க்களம் ஆகும். இந்த களங்கள் குறித்து தான் பெரும்பாலான இலக்கியங்கள் விரித்துரைக்கின்றன.

களவழி என்பது இருவகைப்படும். ஒன்று ‘ஏரோர் களவழி’. மற்றொன்று ‘தேரோர் களவழி’. உழவர்களின் ஏர்க் களத்தின் சிறப்பைப் புலவர்கள் பாடுவது ஏரோர் களவழி, போர்க்களத்தின் சிறப்பைப் புலவர்கள் பாடுவது தேரோர் களவழி. களவழி என்ற சொல்லிற்கு ‘களத்தின் இடம்’ என்றுபொருள்; இந்த நூல் போர்க்களமாகிய இடத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைச் சுட்டிப் பாடுவதாகும்.

இதிலுள்ள நாற்பத்தொரு பாடல்கள் அக்காலத்துப் போர்க்களக் காட்சிகளையும், சோழனும் அவனது படைகளும் புரிந்த வீரப் போர் பற்றியும் கவி நயத்துடன் எடுத்துக்காட்டுகின்றன.

சோழ மன்னனான கோச்செங்கணானுக்கும், சேரமான் கணக்கால் இரும்பொறைக்கும் இடையே இடம் பெற்ற போரின் பின்னணியில் எழுதப்பட்டது இந்த நூல்.

யானை, குதிரை, தேர், தானை, என்ற நால்வகைப் படைப் போரும் குறிக்கப்படினும், இந்நூலிலே யானைப் போரைப் பற்றிய பாடல்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. சேரமானிடம் யானைப் படைகளே அதிகம். சேரநாட்டில்தான் யானைகள் மிகுதி. ஆதலால்,சேரனுக்கும், சோழனுக்கும் நடந்த போரிலே யானைப் படைகளின் சிதைவைப் பற்றிக் கூறுவது வியப்பல்ல.

முற்காலத் தமிழ் மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதையும் நாம் இந்த நூல்வழி அறிய முடிகிறது.

இப்பாடலைப் பாடியே, சிறைப்பட்ட சேரமான் கணைக்கால் இரும்பொறையைச் சோழனிடம் இருந்து சிறைமீட்டார் பொய்கையார்.

சோழன் செங்கணான் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழிநாற்பது என்றும் சொல்லுவர்.

கலிங்கத்துப்பரணியிலும், விக்கிரமசோழன் உலாவிலும் இந்த நூல்பற்றிய குறிப்புக்களுண்டு.

இதில் நாற்பது வெண்பாக்கள் தாம் இருக்க வேண்டும். ஆனால் இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன.
யானைமேல் யானை நெரிதர, ஆனாது
கண் நேர் கடுங் கணை மெய்ம் மாய்ப்ப, எவ்வாயும்
எண்ண அருங் குன்றில் குரீஇஇனம் போன்றவே-
பண் ஆர் இடி முரசின், பாய் புனல், நீர் நாடன்
நண்ணாரை அட்ட களத்து. (8)

நண்ணாரை – பகைவரை, நீர்நாடன் – சோழன்

முரசு ஒலிப்பதுபோல் பாயும் அருவிகளை உடைய சோழன் பகைவர்களை வென்ற போர்க்களத்தில், அவன் பகைவரை வீழ்த்திய காட்சி, நெருக்கமாக சாய்ந்துள்ள யானைகள் மீது பெண்களின் கண்களைப் போன்ற அம்புகள் ஆழமாகப் பாய்ந்தது. உடல்களை மறைக்கும் அளவிற்கு அம்புகள் தைத்த காட்சி குன்றின் மீது குருவிகளின் கூட்டம் இருப்பதைப் போல இருந்தது என்ற உவமையுடன் காட்சிப் படுத்தியுள்ளார்.

அரசர் பிணம் கான்ற நெய்த்தோர், முரசொடு
முத்துடைக் கோட்ட களிறு ஈர்ப்ப, எத் திசையும்
பெளவம் புணர் அம்பி போன்ற - புனல் நாடன்
தெவ்வரை அட்ட களத்து. (37)

தெவ்வரை – பகைவரை

சோழன் பகைவரை அழித்த போர்க்களத்தில் வீழ்த்தப்பட்ட அரசர்களின் பிணங்கள் வடித்த இரத்தமானது முரசுகளையும் முத்துகளைக் கொண்ட தந்தங்களை உடைய யானைகளையும் இழுத்துச் செல்கிறது. அது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப் பெறும் சிறியதும், பெரிதுமான தோணிகளைப் போல இருந்தது என போர்க்களக் காட்சிகளை உவமைப் படுத்துகிறார்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
6-2-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives