03 Jan 2022 4:19 pm
(தொல் தமிழர் வகுத்த ஐந்திணை ஒழுக்கத்தின் நானிலப் பரப்பின் முன்பனிக் குளிரில் காலை இளம்பருதியின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்காக யாம் பதிவிடுகின்றோம்)
துளி: 3 வாசிப்பு
நேரம் : 3 நிமையங்கள் / 2-1-2022
சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் முதன்மையாக வைத்துப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.
சங்க இலக்கியத் தொகுப்பில் எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாம். இவ் வரிசை,
நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம், என்று
இத் திறத்த எட்டுத் தொகை
என்ற பாடலில் காணும் அடைவு முறையாகும்.
எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி.
குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது ‘நற்றிணை’ என வழங்கப்பட்டது போலும்.
‘நற்றிணை நானூறு’ என்றும் இது வழங்கப்பெறும். ‘இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி’ என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை.
நற்றிணைப் பாடல்களில் 234ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் சங்க காலப் புலவர்களின் தொகை 192 ஆகும்.
நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன் தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும் காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.
மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய “தூது” என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம்.
மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன.
இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும் 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை. இந்நூலினைத் திணை அடிப்படையில் ஆராயும்போது,
அமைந்துள்ளன.
எடுத்துக் காட்டாக அதன் முதல் பாடல்:-
புலவர் கபிலர் பாடியது. குறிஞ்சித் திணை – (தலைவி தோழியிடம் சொன்னது)
நின்ற சொல்லர், நீடு தோறு இனியர், என்றும் என் தோள் பிரிபு அறியலரே, தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச் சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப் புரைய மன்ற, புரையோர் கேண்மை, நீர் இன்று அமையா உலகம் போலத் தம் இன்று அமையா நம் நயந்து அருளி, நறுநுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே
நீரின்றி அமையாது உலகு என்ற சொல்லை இந்தப் பகுதியில் நாம் காண்கிறோம்.
பாடல் பின்னணி: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது.
பாடல் விளக்கம்:- அவர் சொல்லிய சொல்லிலிருந்து மாறுபடாதவர். பெரிதும் இனிமையாகப் பழகும் தன்மையுடையர். என் தோள்களை என்றும் பிரிதல் அறியாதவர். (வண்டு) தாமரைப்பூவின் குளிர்ச்சியான மகரந்தத் தாதினைத் துளைத்து எடுத்து, உயர்ந்து நிற்கும் சந்தன மரத்தின் உச்சியில் கொண்டு போய் சேர்த்து வைத்த இனிய தேனைப் போல (தாமரைத்தாது – தலைவனின் உள்ளம், சந்தன மரம்-தலைவியின் உள்ளம், தேன் – இருவரின் அன்பு) உறுதியாக உயர்வினை உடையது உயர்ந்தோராகிய தலைவரின் நட்பு. நீர் இன்றி இவ்வுலகமானது சிறக்கவியலாது. அதுபோல, அவர் இன்றி நாம் சிறத்தலில்லை. அவரும் நம்மீது கொண்ட விருப்பத்தின் காரணமாக கருணையோடு நடப்பவர். பிரிவதால் நம் மணம் வீசும் நெற்றியில் ஏற்படும் பசலை படர்வதற்கு அஞ்சுதலையுடைய அவர், பிரிதல் என்ற சிறுமையான செயலைச் செய்ய நினைப்பாரோ? அவ்வாறு செய்தற்குக்கூட அறியாதவர் அவர்!
ஆடவர்களின் காதலெண்ணங்கள் எப்பொழுதம் அழகு பற்றிய நிலையான ஆழ்ந்த சிந்தனையாக உள்ளன. அவர்கள் பெண்களின் முகம் அல்லது உருவத்தால் கவரப் பெறுகின்றனர். பெரும் பாலும் உடல் வனப்பையே அடிப்படையாகக் கொண்டதாக புலவர் பெருமக்கள் காட்டுகின்றனர். காதலியின் உருவச் சிறப்பும், குரல் இனிமையும் தொடக்கமாக அமைகின்றன.
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்
மழலையங் குறுமகள் மிழலையந் தீங்குரல்
கிளியும் தாமறிபவ்வே எனக்கே
படுங்கால் பையுள் தீரும் படாது
தவிருங் காலையாயினள்
உயிரோ டெல்லாம் உடன் வாங்கும்மே! ( நற்றிணை 209 4-9)
காதலியின் இனிய சொல் தன் செவிக்கு இன்பமூட்டுவதாகவும் அது செவிப்படாத போது தன் உயிரோடு பிற பண்புகளையும் வாங்குகிறது என்று ஒரு தலைவன் கூறுவதாக அமைந்த பாடல்.
கிளியோபாத்திராவின் குரல் இனிமை தான் அந்தோணியைக் கவர்ந்தது. அவள் குரல் இனிமையே எண்ணற்ற ஆடவர்களைப் பிணியில் தள்ளியது என்பது வரலாறு.
நற்றிணையில் பல சிறப்புக் குறிப்புகளும் உண்டு. எடுத்துக்காட்டாக எரிநட்சத்திரம், பல்லி சத்தத்தின் பலன், விடிவெள்ளி போன்ற குறிப்புகள்:-
எட்டுத் தொகை நூல்களில் முதலாதவதாக வைத்துப் போற்றப் படும் நற்றிணை சங்க கால மக்கள் வாழ்வியல், புலவர்கள், வள்ளல்கள், மன்னர்கள், இயற்கைச் சூழல் என்பனவற்றின் ஒரு பிம்பம் எனலாம்
படிக்கப் படிக்க இன்பம் தரும் ஓர் அரிய இலக்கியம் நற்றிணையாகும். படித்துப் பயன் பெறுக!
என் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
2-1-2022.
We can not do it alone. Join with us.