துளி 30 – ஐந்திணை ஐம்பது

07 Feb 2022 4:17 pm

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 30
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 07-02-2022

ஐந்திணை ஐம்பது

பதினென் கீழ்க் கணக்கு நூல்களில் அகப்பொருள் குறித்து பேசுவன ஆறு நூல்களாகும். அவை

  1. கார்நாற்பது
  2. ஐந்திணை ஐம்பது
  3. திணைமொழி ஐம்பது
  4. ஐந்திணை எழுபது
  5. திணைமாலை நூற்றைம்பது
  6. கைந்நிலை

என்பன.

இந்த நூல்களுள் ஒன்று ஐந்திணை ஐம்பது.

இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் கடைச் சங்க காலப் புலவர். இவர் பெயரில் பாண்டியன் பெயர் மற்றும் சேரன் பெயரும் இணைந்திருப்பதால் இவர் இரண்டு மன்னர்களுக்கும் நண்பராக இருக்கக் கூடும் என்பது அறிஞர்கள் கருத்து.

இது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது.
முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என நிலங்களை ஐந்து திணைகளாகப் பிரிப்பது பண்டைத் தமிழர் வழக்கு. அக்காலத் தமிழ் இலக்கியங்களில் அவ்விலக்கியங்களில் எடுத்தாளப்படும் விடயங்களுக்குப் பின்னணியாக இத்திணைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

சொல்ல விழைந்த கருப்பொருளின் தன்மைகளுக்கேற்ப உருவாக்க வேண்டிய மனநிலைகளுக்குப் பொருத்தமான பின்னணிச் சூழ்நிலைகளை இத் திணைகளில் ஒன்றோ பலவோ வழங்கின.

ஐந்திணை ஐம்பதில், மேற்காட்டிய ஒவ்வொரு திணையின் பின்னணியிலும் பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்கள் உள்ளன.

சிறப்புப் பாயிரம்

பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய,
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த
ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்,
செந்தமிழ் சேராதவர்.

மாறன் பொறையன் என்ற பேரறிஞர் ஆராய்ந்து இயற்றிய ‘ஐந்திணை ஐம்பது’ என்ற அகப்பொருள் நுட்பங்களை உணர்த்துகின்ற இந்நூலினை ஆர்வத்துடன் படித்து அறியாதவர் செந்தமிழ் மொழியின் பயனை அடையப் பெறாதவர்கள் ஆவார்கள்.

குறிஞ்சித் திணை

மால் வரை வெற்ப! வணங்கு குரல் ஏனல்
காவல் இயற்கை ஒழிந்தேம், யாம்; தூ அருவி
பூக் கண் கழூஉம் புறவிற்றாய், பொன் விளையும்
பாக்கம் இது, எம் இடம். 12

வெற்பு – மலை
ஏனல் – தினை

“பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்” என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள்.

மருதத் திணை பாடல்

குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாத பொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் மற்ந்து அவனுடைய மணம் மிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது” என்று தன் தோழியிடம் தலைமகள் கூறுவதாக அமைந்த ஒரு பாடல்:-

குளிரும் பருவத்தேஆயினும், தென்றல்
வளி எறியின், மெய்யிற்கு இனிதாம்; - ஒளியிழாய்! -
ஊடி இருப்பினும், ஊரன் நறு மேனி
கூடல் இனிது ஆம், எனக்கு. 30

வளி – காற்று
இழை – அணிகலன்

பாலைத் திணை பாடல்

காதலில் வயப் பட்ட ஒரு ஆண் மானும் பெண் மானும் பாலை நிலத்தில் பயணிக்கின்றன. அங்குள்ள ஒரு சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இது இருவரும் பருகப் போதாது என எண்ணி, தன்னுடைய பெண்மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, ஆண் மான் பொய்யாகக் குடிப்பது போல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றி தோழி தன் தலைவியிடம் கூறுவதாக அமைந்த ஒரு பாடல்:-

சுனை வாய்ச் சிறு நீரை, 'எய்தாது' என்று எண்ணி,
பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி. 38

கலைமான் – ஆண்மான்
பிணை – பெண்

மற்றொரு நெய்தல் திணைப் பாடல்

“வளைந்த கால்களையுடைய நண்டே! ஒரு வேண்டுகோளை நாம் உன்னிடத்தில் கேட்டுக் கொள்கிறோம். குறையாத ஒலியையுடைய கடலைச் சார்ந்த எம் நெய்தல் நிலத் தலைவனது பெரிய தேரானது என்னைப் பிரிந்து சென்ற காலத்து ஊர்ந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் பதிந்த சுவடுகளை, எம்முடைய கண்கள் நன்றாகப் பார்க்கும்படி அதன் மேல் சென்று நீ அழிக்காமல் இருப்பாயாக” என்று தலைவி கடற்கரையில் கண்ட நண்டிடத்து மிகுந்த துன்பத்துடன் கூறினாள்.

கொடுந் தாள் அலவ! குறை யாம் இரப்பேம்;
ஒடுங்கா ஒலி கடற் சேர்ப்பன் நெடுந் தேர்
கடந்த வழியை எம் கண் ஆரக் காண,
நடந்து சிதையாதி, நீ! 42

அலவன் – நண்டு
சிதையாதி – அழிக்காதே

பாவையும், பந்தும், பவளவாய்ப் பைங் கிளியும்,
ஆயமும், ஒன்றும், இவை நினையாள்; பால் போலும்
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல், காதலன்பின்,
காய்ந்து கதிர் தெறூஉம் காடு? 33

ஆயம் – தோழியர் கூட்டம்

“பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?” என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

தமிழ் நாட்டின் பழம் பெருமைக்கு இந்நூல் ஒரு நற்சான்றாக விளங்குகிறது.

எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!


அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்புக்கு : + 91 9820281623, Email: tamil.lemuriya@gmail.com

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives