09 Feb 2022 1:44 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 31
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 9-02-2022
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஐந்திணை ஐம்பது என ஐம்பது பாடல்கள் கொண்ட நூலை நாம் ஏற்கனவே கடந்த பதிவில் பேசினோம். இன்று ஐந்திணைகளில் ஒவ்வொன்றிற்கும் பதினான்கு பாடல்களைக் கொண்டு, எழுபது பாடல்களில் அமைந்துள்ள நூலின் பெயர் ஐந்திணை எழுபது என்பதாகும்.
குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற அடைவில் திணைகள் அமைந்துள்ளன. நிலப் பகுப்பு என்பது தமிழ் நாட்டில் நான்கு தான். (நானிலம்) ஆனால் வறட்சியின் காரணமாக முல்லையும் குறிஞ்சியும் தம் இயல்புகெட்டுத் தோன்றுவதற்குப் பெயர் பாலை நிலம் எனக் கொண்டுள்ளனர். பிற பகுதிகளில் உள்ளது போல பாலைவனம் இல்லாத நாடு தமிழ் நாடு ஆகும்.
நான்கு திணைகளுக்கும் பொதுவாய் ‘நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பிக்கப் பெறுவதனாலும் பாலைத் திணையை நடுநாயகமாய் அமைத்துள்ளது போலும்!
இந் நூலை ஆக்கியவர் மூவாதியார். இவரைச் சிலர் சமணர் என்று கூறுவர். அதற்குத் தக்கசான்று யாதும் இல்லை. இவரைப் பற்றி வேறு ஒன்றும் அறியக் கிடைக்கவில்லை.
இவருடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கக் கூடும்.
நூற்பெயர் ஒற்றுமையாலும், வேறுசில குறிப்புகளாலும் இவர் ஐந்திணை ஐம்பதை அடியொற்றியே உள்ளதாக எண்ணத் தோன்றுகிறது.
இந் நூலின் முதலில் விநாயகரைக்குறித்த கடவுள் வணக்கப் பாடல் ஒன்று சில பிரதிகளில் காண்கிறது. இது பொருத்தமாகத் தெரியவில்லை. ஐந்திணை நூல்களில் வேறு எந்த ஒன்றிற்கும் கடவுள் வாழ்த்துப்பாடல் கிடையாது. ஆனால் அனந்தராம அய்யர் பதிப்பில் (1931) இது தென்படுகிறது. அதற்கு முந்திய பதிப்புகளில் கடவுள் வாழ்த்து இல்லை. நூல்களில் இடைச்செறுகல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கு இந்நூலே ஒரு சான்று ஆகும்.
இதன் முதல் பதிப்பு 1926 ஆம் ஆண்டு இலக்கண விளக்க ஆசிரியர் திரு. சோமசுந்தர தேசிகர் என்பவரால் பதிப்பிக்கப் பட்டதாக அறிகிறோம்.
இச் செய்யுளின் நடைப் போக்கும் ஏனைய பாடல்களினும் வேறுபட்டுள்ளது. எனவே இச் செய்யுள்கள் அனைத்தும் நூலாசிரியரே இயற்றியது என்று துணிந்து கூறவும் இயலாது.
கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி
என்ற ஐந்திணை ஐம்பதும் (38),
கள்ளர் வழங்கும் சுரம் என்பர், காதலர்
உள்ளம் படர்ந்த நெறி (36)
என வரும் ஐந்திணை எழுபதும் (36), ஒரே அச்சில் வார்த்தது போன்று உள்ளது.
இந் நூலில் உள்ள எழுபது பாடல்களில் முல்லைத் திணையில் இரண்டு பாடல்களும் (25, 26) நெய்தல் திணையில் இரண்டு பாடல்களும் (69, 70) இறந்து பட்டதாகத் தெரிகிறது. அவை கிடைக்கவில்லை.
தன் தலைவனின் நட்பானது குறைவின்றி இன்பம் பயக்கும் என்பதை
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,
வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும், என் நெஞ்சு. (5)
கயம் – குளம்
“தோழியே! சான்றோரின் நட்பானது சிதைவு இல்லாததாய் நிலைத்து நின்று வலிமையுடையதாகிப் பலவகை நன்மைகளை உண்டாக்கும். அதுபோல நீர் நிலைகளால் வளமாகக் காணப்படும் சோலைகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நட்பானது குறைவின்றி இன்பம் பயக்கும் என என் நெஞ்சம் நினைக்கின்றது” என்று தலைவி கூறுகிறாள் என எளிமையான உவமை மூலம் எடுத்தியம்புகிறது.
சூரியன் தன் கோபமாகிய வெப்பத்தை மறைத்துக் கொண்டதால் பைங்கொடி முல்லைகள் மலர்ந்து மணங்கமழ வண்டுகள் மதுவுண்டு மகிழ்கின்றன. கரும் மேகங்கள் வானில் தெரியும் போதெல்லாம் என் கண்கள் கண்ணீரைச் சிந்துகின்றன” என்று கார்காலத்தில் தலைவன் வராததை நினைத்து தோழியிடம் வருந்திக் கூறுவதாக ஒரு பாடல்:-
செங் கதிர்ச் செல்வன் சினம் கரந்த போழ்தினால்,
பைங் கொடி முல்லை மணம் கமழ, வண்டு இமிர,
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும்
நீரோடு அலமரும், கண். (15)
கரத்தல் - மறைத்தல்
இமிர்தல் - ஒலித்தல்
தெண் நீர் இருங் கழி, வேண்டும் இரை மாந்தி,
பெண்ணைமேல் சேக்கும் வணர் வாய்ப் புணர் அன்றில்!
தண்ணம் துறைவற்கு உரையாய், 'மடமொழி
வண்ணம் தா' என்று தொடுத்து. (64)
வணர் - வளைந்த
வண்ணம் - அழகு
தோழி அன்றில் பறவையிடம், “உப்பங்கழியில் தான் வேண்டிய மீனினை உண்டு அருகில் உள்ள பனைமரத்தின் மீது தங்கும் இணைபிரியா அன்றில் பறவையே! தலைவியின் களவுப் புணர்ச்சியில் கொண்ட அழகைத் திருப்பித் தந்து விடுவாய் என்று வேண்டிய சொற்களை அடக்கத்தோடு தொகுத்துத் தலைவனிடம் கூறுவாயாக” என்று கூறினாள்.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
9-2-2022.
We can not do it alone. Join with us.