11 Feb 2022 6:43 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 32
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 11-02-2022
பதினென் கீழ்க் கணக்கு நூல்களில் அகப்பொருள் குறித்து பேசுவன ஆறு நூல்களாகும். அவை
என்பன.
இந்த நூல்களுள் ஒன்று திணைமாலை ஐம்பது
இந் நூல் ஐந்திணை ஐம்பது போன்றே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்கள் வீதம் உள்ளன. அதனால் இந்நூல் திணைமொழி ஐம்பது என பெயர் பெற்றுள்ளது.
இந் நூலில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் அடைவில் ஐந்திணைகளும் அமைந்துள்ளன. இம்முறை அகப்பொருள் நிகழ்ச்சிகளின் போக்கிற்கு ஒத்ததாகும்.
புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல்,
ஊடல், இவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத் திணைக்குரிப் பொருளே
என ஆசிரியர் தொல்காப்பியர் (தொல். பொருள்.14) உரிப் பொருளை வகுத்துள்ள முறையை இது பெரிதும் பின்பற்றியுள்ளது. தொல்காப்பியர் இரங்கல், ஊடல், என்று கூற, இந் நூல் ஊடல், இரங்கல், என்று கொள்கிறது. இது ஒன்று தவிர, மற்றைய திணைகளின் அமைப்பு பொருளின் போக்கிற்கு ஒத்த முறைவைப்பு ஆகும்.
இந் நூலை இயற்றியவர் கண்ணஞ் சேந்தனார். இவ்வாசிரியர் குறித்து அதிக தகவல்கள் இல்லை.
கடைச்சங்க காலமாகையால் கி.பி. ஒன்றாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
இந்த நூல் 1918 ஆம் ஆண்டு பதிக்கப் பட்டது. திரு சோமசுந்தர தேசிகரால் சரிபார்க்கப் பட்டு திருவாரூர் தமிழ்ச் சங்கம் பதிப்பித்தது.
இந்த நூலிலும் கணம், வித்தகம், பவளம், சித்திரம் போன்ற வட சொற்கள் காணக் கிடைக்கின்றன. இதன் பாடல்களில் எதுகை, மோனை மிகுதியாகக் காணக் கிடைக்கின்றது.
பதச் சோறாக திணைக்கு ஒரு பாடல் என்ற அளவில் ஐந்து பாடல்களை இவண் காணலாம்.
“தலைவனே! யானைகள் திரியும் குறிஞ்சி நிலத்தில் வாழும் வேடமக்கள் நாங்கள். மேன்மகனாகிய தாங்கள் இத்தினைப் புனத்தில் என்ன பயன் கருதி வந்தீர்? எம்மவர் கண்டால் சினந்து உமக்குத் தீங்கு செய்வர். இங்கு வர வேண்டாம்” என்று தலைவனிடம் தோழி கூறினாள்.
யானை உழலும் அணி கிளர் நீள் வரைக்
கானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்;
ஏனலுள், - ஐய! - வரவு மற்று என்னைகொல்?
காணினும், காய்வர் எமர். (6)
“புன்னை மரங்கள் மலரவும் சிவந்த கண்களையுடைய குயில்கள் கூவி அழைக்கும்படியான வேனிற் காலத்தை அறிந்தும் பொருள் மீது கொண்ட ஆசையினால் நம்மை விட்டுப் பிரிந்து போன தலைவர் நம்மை நாடி வருவதை எதிர் நோக்குகின்றது என் நெஞ்சு” என்று இளவேனிற் பருவம் வந்ததை அறிந்த தலைவி கூறினாள்.
புன்கு பொரி மலரும் பூந் தண் பொழில் எல்லாம்
செங் கண் குயில் அகவும் போழ்து கண்டும்,
பொருள் நசை உள்ளம் துரப்ப, துறந்தார்
வரு நசை பார்க்கும், என் நெஞ்சு. (14)
(பொழில் - சோலை
நசை – விருப்பம்)
“காயாச்செடிகள் மை போன்ற மலர்களைப் பூக்கவும், குருக்கத்திச் செடிகளின் இலைகள் பெண்களின் பற்கள் போன்று விளங்கவும், இவற்றைக் கடந்து பொருள் பெறச் சென்ற தலைவர் மணம் பேச வந்தார். பிரிந்த போது மெலிந்த உன் தோள்கள் முன் போல் வீங்கி விளங்குக” என்று தோழி தலைவியிடம் கூறல்
அஞ்சனம் காயா மலர, குருகிலை
ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள,
தண் கமழ் கோடல் துடுப்பு ஈன, காதலர்
வந்தார்; திகழ்க, நின் தோள்! (21)
(அஞ்சனம் - மை, கருமை
கோடல் - வெண் காந்தள் மலர்)
வேனில் பருவத்து எதிர் மலர் ஏற்று ஊதும்
கூனி வண்டு அன்ன குளிர் வயல் நல் ஊரன்
மாண் இழை நல்லார் இள நலம் உண்டு, அவர்
மேனி ஒழியவிடும். (35)
“மலர்களில் உள்ள தேனை உட்கொள்ளும் வண்டினைப் போன்ற வாழ்க்கையை நடத்தும் தலைவன் பெண்களின் மேனியழகு நீங்கியவுடன் அகன்று விடுவான். அத்தகைய தலைமகன் உறவு வேண்டாம்” என்று தலைவி பாணனிடம் வாயில் மறுத்தாள்.
இன மீன் இருங் கழி ஓதம் உலாவ,
மணி நீர் பரக்கும் துறைவ! தகுமோ-
குண நீர்மை குன்றாக் கொடி அன்னாள் பக்கம்
நினை நீர்மை இல்லா ஒழிவு? (44)
(ஓதம் – அலை)
“மீன்கள் கூட்டமாக இருக்கக்கூடிய கழியிடத்தில் அலைகள் வந்து மோதும் துறையுடைய தலைவனே! நற்குணங்களில் சிறிதும் குறைவுபடாத தலைவியின் மணச்செயலை எண்ணிப் பார்க்கும்படியான நிலை தங்கள்பால் ஏற்படாதது உங்களுக்குத் தக்கதோ?” என்று தோழி தலைவனிடம் கூறினாள்.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
11-2-2022.
We can not do it alone. Join with us.