15 Feb 2022 4:42 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 33
நேரச்செலவு : 6 நிமையங்கள் / 14-02-2022
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தத் தனிப்பாடல் ஒன்று;
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." [1]
இன்னிலைய காஞ்சியுடனேலாதி யென்பதூஉம், கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு” என்பது இவ்வேறுபாட்டில் ஒன்று. முன்னது “இன்னிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது. பின்னது “கைந்நிலை” ஒரு நூலாகக் காட்டுகின்றது.
இன்னிலை முதலிற் பதிப்பித்ததும் இரண்டாவது பதிப்பித்ததும் வ.உ.சி அவர்களே!
இன்னிலை நாற்பத்தைந்து பாடல்கள் கொண்டது.
ஆசிரியர் : பொய்கையார் என்பது வ.உ.சி.யின் கூற்று.
“இந்நூல், அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டுப்பால் என நான்கு பகுதிகளாகவும், அவற்றில் வீட்டுப்பால் “இல்லியல்” “துறவியல்” என இரண்டு இயல்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன.
அறப்பால் பத்து வெண்பாக்களையும், பொருட்பால் ஒன்பது வெண்பாக்களையும், இன்பப்பால் பன்னிரண்டு வெண்பாக்களையும், வீட்டுப்பால் (இல்லியல் எட்டு வெண்பாவும், துறவியல் ஆறு வெண்பாவுமாக) பதினான்கு வெண்பாக்களையும், கொண்டுள்ளன” என்பது வ. உ. சி அவர்களின் முன்னுரையாகும்.
கழிவிரக்கம் கொள்ளார் கதழ் வாளார் வேர்த்துப்
பழிமுறுகக் கோடார் பயன் பேர்த்து – அழிமுதலை
இல்லம் கொண்டு ஆக்கார் இடும்பைத் தளை தணப்பர்
நல்லறனை நாளணி கொள்வார்.
தம்மிடமிருந்து நீங்கிய பொருள்களைக் குறித்து வருந்தாதவரும், சினத்தை மேற்கொள்ளாதவரும், வெகுண்டு பழி மிகுதியாகும்படி அதற்குரிய செயல்களைச் செய்யாதவரும், அறப்பயனை நீக்கிக் கெடுக்கும் முதற் பொருளைத் தமது மனையிற் கொண்டுபோய்ச் சேர்த்துச் செல்வத்தைப் பெருக்காத வரும் (ஆகிய அறிஞர்) துன்பமாகிய கட்டினை யறுப்பார்,
கடல் முகந்து தீம்பெயலை ஊழ்க்கும் எழிலி
மடனுடையார் கோதகற்றி மாண்புறுத்தல் ஏமம்
படைத்தாக்கல் பண்பறிந்தோர் சால்பு
மேகமானது, கடலினுள்ள (உப்பு நீரை) முகந்து (நன்னீராக்கி) இனிய மழையாகப் பெய்யும் (அதுபோல) நற்பண்புகளை அறிந்தவரது செயலானது, அறியாமை யுடையவரது குற்றங்களைப் போக்கி நற்குணங்களைப் பொருந்துவித்தலும், (அவர்கட்கு) காவலாக வேண்டியவற்றை உண்டாக்கிப் பெருக்குவதும் ஆம்.
கருத்து : மேகம் கடல் நீரையுண்டு மழை பொழிந்து உலகத்தாரைக் காப்பது போலச் சான்றோர்களும் மக்களிடத்துள்ள அறியாமையை யகற்றி அவரைக்காப்பது கடமையாகும்.
முப்பொருள் உண்மை தெளிவான் அருஞ்சீலன்
முப்பொருள் உண்மை உடையான் அருமுனிவன்
முப்பொருள் உண்மை மடுப்பான் இறையாங்கு
முப்பொருள் உண்மைக்கு இறை.
(அறம் பொருள் இன்பம் என்ற) மூன்று பொருள்களின் உண்மை இயல்புகளை உணர்ந்து தெளிந்தவன் அருமையான நல்லொழுக்க முடையவனாவான். அம்மூன்று பொருள்களின் உண்மையறிவுடையவன் அரிய தவ முனிவனாவான். அம்மூன்று பொருள்களின் உண்மையை மனிதர்கட்குக் காட்டி வளர்ப்பவன் அரசனாவான், அம்மூன்று பொருள்களும் மெய்ப் பொருளுக்கு உறைவிடமாம்.
கருத்து: அறம் பொருள் இன்பம் என்ற மூன்று பொருள்களின் இயல்புணர்ந்து தெளிந்தவன் நல்லொழுக்கமுள்ளவன்; அவற்றை அறிந்தவன் முனிவன்; அவற்றை மனிதர்க்குக் காட்டிப் பெருக்குவோன் அரசன். பரம்பொருட்கு இருக்குமிடமும் அவையாம்.
இன்ப இயலோரார் யாணர் விழைகாமம்
பொன்னின் அணிமலரின் செவ்விதாம் – தன்மேனி
முத்தம் முறுவல் முயக்கொக்கின் அன்னத்தின்
பெற்றியரின் என்பெறும் பேறு
காம இன்பத்தின் இலக்கணங்களை அறியார் (சிலர்) , புதுமையாக விரும்பும் காம இன்பம் பொன்னைப் போலவும், அழகிய மலரைப் போலவும் சிறப்புடையதாகும், ஒருவன் தனது உடம்புக்கு முத்துப்போன்ற பற்களையுடையார் புணர்ச்சி இன்பம் கிடைத்தால், அன்னப்பறவையின் இயல்புவாய்ந்த அம்மங்கையரால் பெறும் இன்பத்தினும் வேறு சிறந்த பேறு யாது? (இல்லை) .
கருத்து: காம இன்பத்தின் இயல்பறியார் சிலர் இகழ்ந்து பேசுவர். காமம் பொன்மலர் போல அழகும், இன்பமும் தருவது. காமத்தைப் போலச் சிறந்த பேறு வேறு ஒன்றும் இல்லை.
காமம்வீழ் இன்பக் கடலாமே காதலரின்
ஏம் இருக்கையே தூம்திரையாம் – ஏமத்தீண்டு
ஆம்பாலே தோன்றும் அளிஊடலாம்வரலில்
தெற்றித் தெறிப்பாம் ஒளி ஒளியாய் கண்ணே சீர்த்
துற்றுகப்பாய்ப் பெற்ற மகவு
காமமானது யாவரும் விரும்புகின்ற இன்பக் கடலாகும், காதலன் காதலி இருவரும் கூடிய இன்பத்தின் இருக்கையே வீசும் அலையாகும், அவ்வின்பத்தினின்று இங்கு உண்டாகும் அன்பே முத்தாகும், அம்முத்தினின்று தெளிந்து எழுகின்ற ஒளியே ஊடலாம், அவ்வொளி பாய்கின்ற இடமே சிறந்து மகிழ்வுடன் பெற்ற குழந்தைகளாம்.
கருத்து : காமம் கடலாகும்; புணர்ச்சியே அக்கடலிற் றோன்றும் அலையாம்; அன்பு அலையில் வந்த முத்து ஆம்; ஊடல் அம்முத்தின் ஒளியாகும்; மக்கள் அவ்வொளி கூடும் இடமாகும்.
ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்
குற்றும் ஒருஉம் குணத்தளாக் – கற்றறிஞர்ப்
பேணும் தலையளாக் கொண்கண் குறிப்பறிந்து
நாணும் தகையளாம் பெண்.
ஒத்த உரிமையுடையவளாகியும், ஊடலில் இனிமையுடையவளாகியும், குற்றங்கள் நீங்கிய நற்குணங்களையுடையவளாகியும், (பலநூல்களையும்) கற்ற அறிவுடையவரைப் பேணும் தன்மையுடையவளாகியும், கணவனுடைய குறிப்பினை அறிந்து (அதற்கியைய) நாணுகின்ற தன்மையுடையவளே பெண் ஆவள்.
கருத்து: ஒத்தவுரிமையும், ஊடலினிமையும், குற்ற நீங்கிய குணமும், கற்றவரைப் பேணும் கருத்தும், கணவன் குறிப்பறிந்து நாணும் பண்பும் உடையவளே இல்லறத்திற்குத் தக்க பெண்ணாவள்.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
15-2-2022.
We can not do it alone. Join with us.