20 Feb 2022 4:41 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 34
நேரச்செலவு : 4 நிமையங்கள் / 20-02-2022
காலம் கி.பி. நான்காம் நூற்றாண்டு.
ஏலாதி என்பதற்கு ஏலத்தை முதலாக உடையது என்று பொருள். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ (தக்கோலம், நாககேசரம்) சுக்கு, மிளகு, திப்பிலி என்ற ஆறும் கலந்தது ஏலாதி சூரணம் எனப்படும். உடலுக்கு மருந்து போல உள்ளத்திற்கு மருந்தாக அமைவது என்று பொருள் படும்.
இல்லறம் துறவறம் பற்றிய நூல்களையெல்லாம் ஆராய்ந்து ஞான நெறியை உணர்த்த வேண்டி இலக்கிய வடிவத்தில் படைக்கப் பட்ட ஒரு நூல்.
நூலின் ஆசிரியர் கணி மேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர்.
மொத்தம் என்பது (80) பாடல்கள் உள்ளன.
சமண சமயத்திற்குரிய சிறந்த அறநெறிகளாகிய கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுகிறது.
அறம் என்ற சொல்லை நம்மில் பலர் வடமொழியில் தருமம், புண்ணியம் என்ற சொற்களோடு ஒப்பு நோக்குகின்றோம். அது தவறாகும். தருமம், புண்ணியம் என்பன வினைச் சொற்கள். ஆனால் தமிழில் பேசப்படும் அறம் ஒரு பண்புச் சொல். அந்தப் பண்பில் ஈகையும் ஒன்றாக அமையலாமேயொழிய ஈகை மட்டுமே அறம் அல்ல.
“மனத்துக் கண் மாசிலன் ஆதல் அறம்”, “அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை” என மனித குலத்தின் ஒழுக்க நெறியாகத் தமிழ் இலக்கியம் கொள்கிறது.
அறநெறிப்படி வாழ்வை நடத்துபவன் எப்படி இருப்பான்? புலனடக்கம், பிறர்க்கு ஈதல், பொறுமை, பொய் சொல்லாமை, ஊன் உண்ணாமை, நற்குணமுடைமை முதலிய ஆறு பண்புகளை உடையவனாக இருப்பான். அவன் பல உயிர்கட்கும் தாய்போலும் அன்பினை உடையவன் என்று தாய்மையைச் சிறப்பிக்கும் பாடலைப் பாருங்கள்.
நிறையுடைமை நீர்மை உடைமை கொடையே
பொறையுடைமை பொய்ம்மை புலாற்கண் - மறையுடைமை
வேயன்ன தோளாய் இவை உடையான் பல்லுயிர்க்கும்
தாய்அன்னன் என்னத் தகும்
அது போலவே,
நன்கு படிக்கும் மாணவர்களுக்கு ஈகை செய்ய வேண்டும் என்கிறது ஏலாதி.
ஊணொடு கூறை எழுத்தாணி புத்தகம்
பேணொடும் எண்ணும் எழுத்து இவை –மாணொடு
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் - இம்மையான்
வேட்டு எழுத வாழ்வார் விரிந்து (ஏலம்.63)
ஊக்கத்தோடு கற்கும் மாணவர்களுக்கு உணவினையும், உடையையும், எழுத்தாணியும், நூலும், கொடுத்தும் உதவுகின்றவர்கள் செல்வராய் வாழ்வர்.
வாழ்வியல் அறம் கூறும் எண்ணற்றத் தமிழ் இலக்கியங்களில் எளிமையாக உணர்த்துவதில் ஏலாதியும் ஒன்று.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
20-2-2022.
We can not do it alone. Join with us.