22 Feb 2022 12:46 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 35
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 22-02-2022
முன்னையப் பதிவில் ஆறு மூலிகைகள் கொண்ட ஏலாதி என்ற நூலைப் பார்த்தோம். அது போல இன்று ஐந்து மூலிகைகள் கொண்ட ஒரு நூல். சிறு பஞ்ச மூலம் என்னும் தொடர் ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். சிறுவழுதுணைவேர், நெருஞ்சி வேர், சிறுமல்லி வேர், பெருமல்லிவேர், கண்டங்கத்தரி வேர் என்பனவாம்.
சிறிய வழுதுணைவேர், சின்னெருஞ்சி மூலம்,
சிறுமலி, கண்டங்கத்தரிவேர், நறிய
பெருமலி, ஓர் ஐந்தும் பேசு பல் நோய் தீர்க்கும்
அரிய சிறுபஞ்சமூலம் - (495)
என்று பதார்த்த குண சிந்தாமணி மற்றும் பொருள் தொகை நிகண்டும் உரைக்கின்றது.
சிறுபஞ்சமூலம் மருந்து உடல் நலம் பேணுவது போல, சிறுபஞ்சமூலப் பாடல்களில் குறிக்கப்படும் ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. உள்ளத்தை தூய்மைப் படுத்துவன. அதனால் இந்நூல் சிறுபஞ்சமூலம் என பெயர் பெற்றது.
நூலின் ஆசிரியர் காரியாசான்.
இவரது காலம்: நான்காம் நூற்றாண்டு.
இந் நூலில் நூற்றிரண்டு (102) பாடல்கள் உள்ளன. 85-ஆம் பாடல் தொடங்கி, 89-ஆம் பாடல் வரை உள்ள ஐந்து பாடல்கள் நூல்களில் காணப்பெறவில்லை
ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் (சிறுபஞ். 51), அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்று கொள்ளலாம்.
அறமும் அறச்செயல்களின் சிறப்பும் இந்நூலில் பேசப்படுகின்றன. வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார் காரியாசான். அறிவுடையார் செயல்கள், அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்படுகின்றன.
நான்கு வரிகளிலே ஐந்து பொருள்களை அமைத்துப்பாடும் இவருடையத் திறம் நோக்கத்தக்கது. இந்நூற்செய்யுட்களில் அமைந்துள்ள ஐந்தைந்து பொருள்களும் நான்மணிக்கடிகை, திரிகடுகம் போன்ற நூல்கள் போன்று தெளிவுபட விளக்கமாக அமையவில்லை.
நாண் இலான் சால்பும், நடை இலான் நல் நோன்பும்,
ஊண் இலான் செய்யும் உதாரமும், ஏண் இலான்
சேவகமும், செந்தமிழ் தேற்றான் கவி செயலும்,-
நாவகம் மேய் நாடின் நகை. 10
நாணமில்லாதவனது அமைதியும், நல்லொழுக்கம் இல்லாதவனது நோன்பும், தனக்கே உணவில்லாதவன் செய்கின்ற ஈகையும், வலிமையில்லாதவன் வீரமும், தமிழறியாதவன் பாப்புனைவதும் எண்ணிப் பார்த்தால் நகைப்பு தோன்றும்.
பூத்தாலும் காயா மரம் உள; நன்று அறியார்,
மூத்தாலும் மூவார், நூல் தேற்றாதார்; பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்து உள; பேதைக்கு
உரைத்தாலும் செல்லாது, உணர்வு. 21
(நன்று - நன்மை தேற்றாதார் – தெரியாதார்)
ஆண்டுகள் முதிர்ந்து வயதாகியும் அறிவு முதிராதவர், பூத்தாலும் காயா மரம் போன்றவர். புதைத்தாலும் முளைக்காத விதையைப் போன்று அறிவில்லாதவனுக்கு எவ்வுரையாலும் அறிவுண்டாகாது.
மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்,
உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும், வனப்பு அல்ல; நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே, வனப்பு. 35
(உகிர் – நகம்)
தலைமயிர், மார்பு, நகம், செவி, பல் இவை தரும் அழகு ஒருவற்கு அழகற்றது. நூல்களைக் கற்று சொல்வன்மையால் வரும் அழகே அழகு எனச் செப்புகிறது. சிறந்தது.
நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும்
மாண்ட மலை, மக்கள், உள்ளிட்டு, மாண்டவர்
ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை
வேந்தனா நாட்டல் விதி. 47
(மாண்ட - மாட்சிமைப்பட்ட
விதி – முறை)
நகரைச் சுற்றி அகழியும், அதனைத் தொடர்ந்து காடும், வயல் நிலமும், மலையும், மாட்சிமையுடைய குடிமக்களும் அமைந்த நாட்டுக்கு அரசனாக அமைவது நன்மையாகும்.
இந்த நூலில் ஆங்காங்கே சில வடமொழிச் சொற்கள் காணப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
22-2-2022.
We can not do it alone. Join with us.