27 Feb 2022 6:31 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 36
நேரச்செலவு : 4 நிமையங்கள் / 27-02-2022
முன்னையப் பதிவுகளில் ஆறு மூலிகைகளுடன் ஏலாதி, ஐந்து மூலிகைகளுடன் சிறுபஞ்ச மூலம் என்ற இலக்கியங்களைத் தொடர்ந்து இன்று பார்க்க இருப்பது நான்மணிக்கடிகை.
பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் இதுவும் புற வாழ்க்கைப் பற்றிப் பேசும் ஒரு நீதி நூல் ஆகும்.
இந்த நூல் விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இவர் ஒரு கடைச் சங்க காலப் புலவர்.
இந்நூல் நூற்றியொரு பாடல்களைக கொண்டது.
ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது.
இந்த நூல் இயற்றப் பட்ட காலம் கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்கு முன்னையதாகும்.
இந்நூல் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றதாகக் கொள்வர்.
உலகில் அறிவாளிகளாகப் பலர் விளங்கினாலும், மனித இயல்புகளைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் சிலராகத்தான் இருப்பர். அப்படிப் பட்ட மனிதர்களே வாழ்க்கையில் வெற்றியை ஈட்டுகின்றனர்.
சொல்லாமலே செய்வர் பெரியர்; சொல்லிச் செய்வர் சிறியர்; சொல்லியும் செய்யார் கயவர் – என்று அவ்வையார் போன்றவர்கள் இடித்துரைக்கக் கண்டுள்ளோம்.
அது போல வாழ்க்கையின் தன்மைகள் அறிந்து செயல் படுவது தான் சாலச் சிறந்தது என்று காட்டும் நீதி நூல்களில் இதுவும் ஒன்று.
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து
மன்னுதல் வேண்டின் இசை நடுக- தன்னொடு
செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது
வேண்டின் வெகுளி விடல்.
இழிவை விரும்பினால் இரத்தலை (பிச்சை எடுப்பதை) மேற்கொள்க; எஞ்ஞான்றும் நிலைபெறுதலை விரும்பினால் புகழை நிறுத்துக; தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால் அறம் செய்க; பிறரை வெற்றி கொள்ள வேண்டுமாயின் சினத்தைக் கை விடுக.
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்
வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்
கிளைஞரில் போழ்திற் சினம்குற்றம் குற்றம்
தமரல்லார் கையகத் தூண். ….. ..(94)
இளமைப் பருவத்தில் கல்லாமை குற்றம், பொருளில்லாத காலத்தில் ஈதல் குற்றம், உறவினர் துணையில்லாத காலத்தில் பிறரை சினத்தல் குற்றம், உள்ளன்பிலார் வீட்டில் உண்ணுதல் குற்றம் என இங்கே நான்கு குற்றங்கள் சொல்லப் பட்டுள்ளன.
வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச்
சாயிறுந் தோன்றா கரப்புச்சொல் - தீய
பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல்
கீழ்கள்வாய்த் தோன்றி விடும். ….. ..(98)
அன்பில்லாதவர் வாயில் பழிச் சொற்கள் தோன்றும்; கற்றார் வாயில் வஞசனைச் சொற்கள் தோன்றா; சான்றோர்கள் வாயில் தீயவற்றைப் பரப்பும் சொல் தோன்றா; கீழ் மக்கள் வாயில் ஒளிப்புச் (கரப்புச் சொல்) சொல் தோன்றி விடும். இங்கு தோன்றுபவை இரண்டு, தோன்றாதவை இரண்டு எனக் குறிக்கப் பட்டுள்ளது.
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப்
பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த
கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங்
கூடார்கண் கூடி விடின். ….. ..(23)
ஒற்றுமையின்மை வலிமையைச் சிதைக்கும்; பொய்மை உடம்பைச் சிதைக்கும்; பொருந்தாப் பாண்டம் பாலின் இன்சுவையைச் சிதைக்கும்; தீ நட்பு குலத்தையே கெடுத்து விடும். இங்கு இன்னல் தரும் அல்லது சிதைக்கும் நான்கு கூறுகள் சொல்லப் பட்டுள்ளன.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
27-2-2022.
We can not do it alone. Join with us.