துளி 37 – திரிகடுகம்

07 Mar 2022 10:34 am

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 37
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 06-03-2022

திரிகடுகம்

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் தொடர்ச்சியாக மூலிகைகளை உவமைகளாகக் கொண்டு ஆறு, ஐந்து, நான்கு என மூன்று இலக்கியங்களை முன்னர் கண்டோம் இன்று நாம் பேசவிருப்பது திரிகடுகம்.

திரி என்ற சொல்லுக்கு தமிழ், ஆங்கிலம், சமசுகிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் மூன்று என்று பொருள். எனவே இதன் வேர் எது என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கடுகம் என்பது காரம், கார்ப்பு அல்லது உறைப்பு என்று பொருள்படும்.
சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் கொண்டக கடுகம் நம் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நயன்மைக் கருத்துகள் மனிதனின் அறியாமை நோயைப் போக்கி, வாழ்க்கைச் செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது.

இந்நூலை இயற்றிவர் பெயர் புலவர் நல்லாதனார். இவர் ஒரு கடைச் சங்க காலப் புலவர். காலம் கி.பி. ஒன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டு.

101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதன் ஒவ்வொரு பாடலிலும் இம்மூவர் அல்லது இம்மூன்றும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முதற் பாடலிலேயே நூலின் பெயர்க்காரணத்தை, ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று ஆசிரியரே குறிப்பிடுகின்றார். திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களின் கருத்துகளை இந்நூல் பெரிதும் பின்பற்றுகிறது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல், அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற நல்வழிகளை இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.

கணவன், மனைவி, மக்கள் அடங்கியது குடும்பம். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன்.

குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று திரிகடுகம் சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்கு.

பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும். அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள். ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர். இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன். வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார்- (திரி-49)..

ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் - பொய்தெள்ளி
அம்மனை தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்கு உறுதியில்லார்

இதில் மேலும் சில பாடல்கள்:-

கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக் களனும், பாத்து உண்ணாத்
தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும்
நன்மை பயத்தல் இல. (10)

கற்பிக்க இயலாதவர் ஊரிலிருத்தலும், கல்வி கேள்விகளில் முதிர்ந்தவர் இல்லாத அவையும், பகுத்து உண்ணும் தன்மை இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும் ஒருவருக்கு நன்மை தராது.

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. (6)

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும், தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும், பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

தாளாளன் என்பான் கடன் படா வாழ்பவன்;
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்;
கோளாளன் என்பான் மறவாதான்; - இம் மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது. (12)

முயற்சியுடையவன் கடன்படாது வாழ்வான். வேளாண்மை செய்பவன் விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன். ஆசிரியர்களிடம் நூற்பொருளைக் கேட்டவற்றை மறவாதவன். இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.

உண் பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்
பால் பற்றிச் சொல்லா விடுதலும் தோல் வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம் மூன்றும்
தூஉயம் என்பார் தொழில். (27)

குளித்தபின் உண்ணுவதும், பொய் சொல்லாமல் இருத்தலும், தோல் வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயல்களாகும்.

நுண் மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல் மொழியைச்
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும், - இம் மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன். (32)

சொற்களை ஆராய்ந்து பொருள் கொள்ளுதலும், பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களை அறியாத மக்களுக்குச் சொல்லுதலும் படித்தறிந்தவர் மேற்கொள்ள வேண்டிய கடமையாகும்.

முறை செய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சின்
நிறை இல்லான் கொண்ட தவமும், நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும், - இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து. (80)

நிறை – உறுதிப்பாடு

முறையறிந்து ஆட்சி செய்யாத தலைவனும், மனஉறுதி இல்லாதவனின் தவமும், ஒழுக்கமில்லாதவன் அழகும், ஆகிய இம்மூன்றும், புதரில் தூவிய வித்துக்களாகும்.
இவ்வாறு பல நல்ல கருத்துகளைக் கொண்ட ஓர் இலக்கியம் திரிகடுகம் ஆகும்.

எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
6-3-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives