09 Mar 2022 10:13 pm
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 38
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 09-03-2022
பதினெண்கீழ்க் கணக்கு வரிசையில் அகப்பொருள் நூல்கள் ஆறு. இந் நூல்கள் நற்றிணை, அகநானூறு போன்ற சங்க நூல்களுடன் ஒப்பும் அளவுக்கு பாடல் அளவையும், பொருளையும் கொண்டவையாகும்.
திணை என்பது நிலம், ஒழுக்கம் என பல பொருள் படும் ஒரு சொல்லாகும். இங்கே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்நிலம் குறித்தும், அந் நிலத்திற்குரிய புணர்தல், பிரிதல், முதலிய ஒழுக்கங்கள் குறித்தும் சிறப்பித்துப் பாடப் பெறுகின்றன.
ஐந்திணை ஒழுக்கங்களைக் கோவையாக அமைத்து மாலை போலத் தந்துள்ளமையின் ‘திணைமாலை’ என்றும், பாடல் அளவினால் ‘திணைமாலை நூற்றைம்பது’ என்றும், இந்நூல் பெயர் பெற்றுள்ளது.
கீழ்க்கணக்கில் அமைந்த ஐந்திணை நூல்களில் அளவால் பெரியது
நூற்றைம்பது என்னும் எண் வரையறைக்கு ஏற்ப, திணை ஒவ்வொன்றும் 30 பாடல்களைக் கொண்டிருத்தலே முறை. அங்ஙனமாகவும், குறிஞ்சி, நெய்தல், முல்லை திணைகள் மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன. இதனால், இந் நூலுள் 153 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
இந் நூலின் ஆசிரியர் ஏலாதி என்ற இலக்கியம் தந்த கணி மேதாவியாரே ஆவார். இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், கலித்தொகை நூல்களுக்குப் பின்னர் தோன்றியது என ஆராய்ச்சியாளருள் சிலர் கருதுகின்றனர்.
சரி இனி நூலுக்குள் செல்வோம்
பனி வரை நீள் வேங்கைப் பய மலை நல் நாட!
'இனி வரையாய்' என்று எண்ணிச் சொல்வேன்; முனி வரையுள்
நின்றான் வலியாக நீ வர, யாய் கண்டாள்;
ஒன்றாள், காப்பு ஈயும், உடன்று. 27
முனி – கோபம்
ஓத நீர் வேலி உரை கடியாப் பாக்கத்தார்,
காதல், நீர் வாராமை கண் நோக்கி, ஓத நீர்
அன்று அறியும்; ஆதலால், வாராது, அலர் ஒழிய,
மன்று அறியக் கொள்ளீர், வரைந்து. 37
ஓதம் - அலை
தோழி தலைவனை நோக்கி, “தலைவ! முன்னம் நீ செய்த, உறுதி மொழிகளை அலைகளையுடைய கடல் நீர் அறியும். உம்மேல் உள்ள அன்பால் துன்பம் அடைந்து இவளுடைய கண்கள் நீர் வற்றி உள்ளதை, உம் கண்களால் இவள் அடைந்த வேறுபாட்டை உற்றுப் பார்த்து இங்ஙனம் வந்து கொண்டிராமல் பழிச் சொற்கள் நீங்குமாறு உறவினரான கூட்டத்தவர் அறிய இவளை மணந்து கொள்வீராக!” என்று உரைத்தான்.
என்னரே, ஏற்ற துணை பிரிந்தார்? 'ஆற்று' என்பார்
அன்னரே ஆவர், அவரவர்க்கு; முன்னரே
வந்து, ஆரம், தேம் கா வரு முல்லை, சேர் தீம் தேன்
கந்தாரம் பாடும், களித்து. 106
கா - சோலை
4.
தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா,
'இன் துணையோடு ஆட இயையுமோ? இன் துணையோடு
ஆடினாய் நீ ஆயின், அந் நோய்க்கு என் நொந்து?' என்று
போயினான் சென்றான், புரிந்து. 40
அலவன் - ஆண் நண்டு
“தலைவன் ஆண் நண்டைப் பார்த்து, ‘நீ உன் பெண் நண்டுடன் விளையாடுவது ஒன்றையே செய்திருப்பாயானால், பிரிவுத் துன்பத்தை நீ அறிய மாட்டாய்! எனவே பிரிவுத் துன்பத்தை எடுத்துச் சொல்வதில் என்ன பயன் உண்டு’ எனக் கூறி அகன்றுவிட்டான்” என்று தோழி தலைவியிடம் கூறியது.
5.
"முகம் தாமரை; முறுவல் ஆம்பல்; கண் நீலம்;
இகந்து ஆர் விரல் காந்தள்" என்று என்று, உகந்து இயைந்த
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல், வருந்தாதே,
ஏழைதான் செல்லும், இனிது. 72
மாழை - கூட்டம்
“தாமரை மலர் போன்ற முகம், ஆம்பல் போன்ற பற்கள், குவளை போன்ற கண்கள், காந்தள் போன்ற விரல்கள் என எண்ணி, அவ் உறுப்புகளை விரும்பித் தலைவியுடன் நெருங்கி வண்டுகள் வாழும். அத்தகைய வண்டுகளுக்கு தக்கதான சோலையில் துன்புற்று தன் தலைவியுடன் இன்று சென்றாள்” என செவிலிக்குக் கண்டவர் கூறினர்.
6.
கானம் கடி அரங்கா, கைம்மறிப்பக் கோடலார்,
வானம் விளிப்ப, வண்டு யாழாக, வேனல்,
வளரா மயில் ஆட, வாட்கண்ணாய்! சொல்லாய்,
உளர் ஆகி, உய்யும் வகை. 111
கடி - சிறந்த
வான் - ஒளி
“முல்லை நிலம் நாடக அரங்காகவும், முகில் இடிக்குரலான பாடலைப் பாடவும், வண்டுகள் இசைக்கவும், மயில் ஆடவும், வெண்காந்தள் கைகளை அசைக்கவும், பொருந்திய இக்கார் காலத்தில் காதலரைப் பிரிந்த காதலியர் இறவாமல் நிலை பெற்றுப் பிழைக்கக் கூடிய வழி இருந்தால் கூறு!” என்று தலைவி தோழியிடம் கூறியது.
7.
கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! வாடினீர்;
நின்றேன் அறிந்தேன்; நெடுங்கண்ணாள் சென்றாளுக்கு
என் உரைத்தீர்க்கு, என் உரைத்தாட்கு, என் உரைத்தீர்க்கு,என் உரைத்தாள்
மின் நிரைத்த பூண் மிளிர விட்டு? 81
பூண் - அணிகலம்
மிளிர - ஒளிவிடும்படி
“கொன்றை, குருத்த, முல்லை போன்ற மரம், செடி, கொடிகளே நீங்கள் வாடி இருக்கிறீர்கள். இதற்குக் காரணம் நீங்கள் தலைவியுடன் உரையாடியதே! நீங்கள் தலைவிக்கு யாது கூறினீர்? அவள் உமக்கு யாது கூறினாள்?” எனத் தலைவன் ஆற்றாமையால் வினவினான்.
8.
பகல் பருகிப் பல் கதிர் ஞாயிறு கல் சேர,
இகல் கருதித் திங்கள் இருளை, பகல் வர
வெண் நிலாக் காலும் மருள் மாலை, - வேய்த்தோளாய்! -
உள் நிலாது, என் ஆவி ஊர்ந்து. 94
வேய் - மூங்கில்
திங்கள் - சந்திரன்
“பகற்பொழுது மறைந்து, நிலவானது தோன்றி ஒளியை வெளியிடும் அத்தகைய மயக்கத்தை அளிக்கக் கூடிய மாலைப் பொழுதில் என் உயிர் வெளிப்பட்டு என்னுள் நிற்பதில்லை!” எனத் தலைவி தோழியிடம் கூறினாள்.
9.
வினை விளையச் செல்வம் விளைவதுபோல் நீடாப்
பனை விளைவு நாம் எண்ண, பாத்தித் தினை விளைய,-
மை ஆர் தடங் கண் மயில் அன்னாய்! - தீத் தீண்டு
கையார் பிரிவித்தல் காண்! 5
தடங்கண் - பெரிய கண்கள்
தீத்தண்டு - தினைத் தண்டு
“மை போன்ற பெரிய கண்களை உடையவளே! நாம் களவுப்புணர்ச்சியின் கண் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, அதற்கு இடையூறு செய்வதுபோல செல்வம் ஒருவனுக்குப் பெருகுவது போல பயிரானது விளைந்து, கொய்ய வேண்டிய நாள் வந்துவிட்டதென்று நம்மவர்க்கு அறிவித்து, நம்மைத் தலைவனிடம் இருந்து பிரியச் செய்தலைக் காண்பாயாக” என்று தலைவியிடம் தோழி கூறினாள்
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
9-3-2022.
We can not do it alone. Join with us.