11 Mar 2022 11:51 am
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 39
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 11-03-2022
நாலடி நானூற்றைப் போலவே நானூறு பாடல்களைக் கொண்டு விளங்கும் கீழ்க்கணக்கு நூல் பழமொழி நானூறு. நாலடிப் பாடல்களின் சொற்பொருள்களைப் பல இடங்களில் தழுவிச் செல்வதனால், இது நாலடியாரோடு நெருங்கிய தொடர்புடையது எனலாம்.
இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன.
முன்றுறையரையனார் (முன்றுறை அரையனார்) என்பவர். இவருடைய காலம் கி.பி. 301 – 400 ஒரு கடைச் சங்கத் தமிழ்ப் புலவராவார். இவரும் ஒரு சமண முனிவராக இருக்கக் கூடும் என்பது பாடல்களிலிருந்து தெரிகிறது.
இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகுதியான வரலாற்றுக் கூறுகளை குறிக்கும் நூல் பழமொழி நானூறு.
தூங்கு எயில் எறிந்த சோழன், கரிகாலன், பாரி, பேகன், முதலியோரைப் பற்றிய முற்கால நிகழ்ச்சிகளை எடுத்தாளுதலோடு, பொற்கைப்பாண்டியன், மனுநீதிச்சோழன் முதலியோரைப் பற்றிய பிற்கால வரலாறுகளையும் பழமொழி ஆசிரியர் தம் நூலுள் சுட்டியுள்ளார்
பழமொழிப் பாடல்களின் வரிசை முறையை மாற்றி முதல்முதல் அச்சு இயற்றியவர் சுப்பராயச் செட்டியார் (1874). இவர் நாலடியாரைப் போலப் பத்துப்பாடல்கள் கொண்ட 39 அதிகாரமாகக் கொண்டு, அதற்குத்தக்கபடி பாடல்களின் வரிசை முறையை மாற்றி அமைத்து, பால், இயல் பாகுபாடுகளும் செய்திருக்கிறார்.
பழமொழி நானூற்றுப் பாடல்கள் பலவற்றில் காணும் ஒரு பொது இயல்பு கவனிக்கத் தக்கது. பழமொழி பாடலின் இறுதியில் வருகின்றது. முன் இரண்டு அடிகளில் அதற்கு உரிய விளக்கத்தைக் காணலாம்.
பழமொழி நானூறில் இடம்பெறும் முக்கிய பழமொழிகள் சில:
இவ்வுலகில் அளவுக்கு அதிகமாக பெருஞ்செல்வம் விரும்புவர்கள், அளவற்ற ஆசைப் படுபவர் பற்றி ஒரு செய்யுள்:-
நிலத்தின் மிகையாம் பெருஞ்செல்வம் வேண்டி
நலத்தகு வேந்தருள் நல்லாரைச் சார்ந்து
நிலத்து நிலை கொள்ளாக் காலரே, கானின்
‘உலக்கை மேல் காக்கை என்பர்
உலக்கையை உயர்த்துக்குத்துகின்ற காலத்து, அதன்மேல் காக்கை அமர்வதும் இயலாது. உரலின்கண் இருப்பதை அதனால் உண்ணவும் முடியாது. அதுபோல, மனத்திலே அறியாமையுடைய வர்களின் முயற்சியும் பயனற்றுப் போகும். ‘உலக்கை மேல் காக்கை என்பது பழமொழி. 84
வீண்பேச்சாளர்கள் முறித்து ஒரு செய்யுள் :-
கோவாத சொல்லும் குணனிலா மாக்களை
நாவாய் அடக்கல் அரிதாகும் - நாவாய்
களிகள்போல் தூங்கும் கடற்சேர்ப்ப! வாங்கி
வளிதோட்கு இடுவாரோ இல்.
காற்றினை ஒரு கொள்கலத்துள் அடக்க முடியுமா? இல்லை. (அதுபோல), கோவாத சொல்லும், பொருத்தமில்லாதவைகளைக் கூறும், குண, இலா மாக்களை -நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாத விலங்கொப்பாரை, நாவினிடத்து அடக்குதல், அரிதாகும். வீண் பேச்சு பேசுபவதை இயல்பாக உடையவனின் நாவை அடக்குவது அரிது – என்ற பொருள் பட அமைந்த பழமொழி செய்யுள் இது.
இது போல நானூறு செய்யுட்களைக் கொண்டு தமிழுக்கு அணி சேர்த்திருப்பது பழமொழி நானூறு என்ற இந்த நூல். தமிழர்களே படித்துப் பயன் பெறுக!
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
11-3-2022.
We can not do it alone. Join with us.