துளி 4 – குறுந்தொகை

03 Jan 2022 4:26 pm

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்த ஐந்திணை ஒழுக்கத்தின் நானிலப் பரப்பின்
பனிக் குளிரில் காலை இளம்பருதியின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்காக யாம் பதிவிடுகின்றோம்)

துளி: 4
வாசிப்பு நேரம் : 3 நிமையங்கள் / 3-1-2022

சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் ஓர் இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு

குறுந்தொகை

சங்க கால மரபு என்பது …

காதல் பற்றிய கற்பனையை அகம் என்றும், வீரம், கொடை புகழ் முதலிய வாழ்க்கைத் துறைகளை புறம் என்றும் பகுத்தப் பாகுபாடு அந்த மரபுகளில் முதன்மையானது. தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகவும் அமைந்தது.

எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூம் மேவற்று ஆகும். (தொல் -219)

இன்பம் என்று கூறப் படுவது எல்லா வகையான உயிர்களுக்கும் தாமே மனம் பொருந்தி வரும் விருப்பம் உடைத்து.

உயிர்த் தொகுதியின் பெருக்கமும் நிலபேறும் பாலுணர்ச்சியைத் சார்ந்து அமைந்துள்ளன. பாலின்ப நாட்டம் என்பது மனித இனத்திற்கு மட்டும் உரியது அல்ல. அது மன்பதை முழுவதற்கும் பொதுவான ஒன்று. பாலுணர்ச்சி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அந்தப் பாலுணர்ச்சியை ஒரு வரையறைக்கு உட்பட்டதாக அமைத்துக் கொண்டு குமுகாய நலனுக்கு உகந்ததாக மாற்றிக் கொண்ட ஒரு விலங்கு மனித இனம் மட்டுமே. அது தான் மனித இனம் குடும்பமாகவும், குமுகாயமாகவும் கூடி உறவு கொண்டு வாழ்வதற்கு அடிப்படையாக அமைந்தது.

இதனை உடற் பசி, உள்ளப் பசி, உயிர்ப் பசி, பிறவிப் பசி, இதயத்தின் பசி என சொல்லலாம். பெத்தரன் ரசல் “ மனித வாழ்க்கையில் காதல் இன்றியமையாதது, அதன் இயல்பான போக்கில் தேவையின்றி குறுக்கிடும் அமைப்பு எதனையும் நான் வெறுக்கிறேன்” என்றார். பாலின்ப வேட்கை என்பது உணவு வேட்கையும் நீர் வேட்கையும் போன்றதென்றும் கூறுகின்றார்.

எனவே தான் உலக இலக்கியங்களில், வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்கதொரு பகுதி காதல் பற்றியதாகவே அமைந்துள்ளது.

அநத வகையில் சங்க இலக்கியங்களில் பெரும்பான்மையானவை ஆண் பெண் உறவு பற்றியவை. காதலர் தம் உளவியற்கூறுகளை நன்கு உணர்ந்து பாடியுள்ளனர். அகத்துறைச் செய்யுள்கள் அனைத்தும் கற்பனை படைப்புகள் தான் எனினும் அவை உண்மை மாந்தர்களின் உணர்வு வெளிப்பாடாகவே காட்சி தருகின்றன.

சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் அதிகம் பேசப் படும் அகத்திணை இலக்கியம் குறுந்தொகையாகும்.

குறுந்தொகை என்னும் இந்த நூல் அகப்பொருள் பற்றிய 400 ஆசிரியப் பாக்களையும் கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றையும் உடையது.

குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் இது குறுந்தொகை எனப்பட்டது. இத்தொகை நூல் நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் கொண்டு தொகுக்கப் பட்டது.

தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற இலக்கண, இலக்கியங்களின் உரையாசிரியர்கள் தொகை நூல்களிலிருந்து மேற்கோளாக எடுத்துக் காட்டும் பகுதிகளில் குறுந்தொகைப் பாடல்களே மிகுதியாக எடுத்தாளப் பட்டுள்ளன. இதன் மூலம் தொகை நூற்களில் இது காலத்தால் மூத்த ஒன்றாகவும் கருதப் படுகிறது.

இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ என்ற புலவனாவான்.

இந் நூல் 400 பாடல்களைக் கொண்டது. 205 புலவர்களால் பாடப்பெற்றது. இந் நூலின் முதல் 380 பாடல்களுக்கு பேராசிரியரும், 20 பாடல்களுக்கு நச்சினார்க்கினியரும் உரை எழுதியுள்ளார்கள்.

தலைவனும் தலைவியும் அன்பு கொண்டு இன்பம் நுகர்ந்து வாழும் வாழ்க்கையின் பல திறப்பட்ட நிகழ்ச்சிகளை அவர்கள் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இயையப் பல புலவர்கள் கூறியுள்ளனர். தலைவன் தலைவி அன்பைப் பற்றிய செய்திகள் மிக உயர்ந்த நிலையை உடையன. இவ்வன்பு காமம், கேண்மை, தொடர்பு, நட்பு, நயம் எனும் பெயர்களால் சூழலுக்கேற்ப எடுத்தாளப் பட்டுள்ளது.

குறுந்தொகைப் பற்றிய பொதுவான குறிப்புகள்:

  • எட்டுத்தொகை நூல்களுள்முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
  • பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
  • வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
  • உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகையே.
  • குறுந்தொகையின்236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
  • இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.

பதச் சோறாக ஓரிரு பாடல்களைக் கீழே காணலாம்.

இயற்கைப் புணர்ச்சிக்கண் தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.

என்பது இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்றன.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த வழித் தலைமகன் தலைமகளை, இயற்கைப் புணர்ச்சிக்கண் இடையீடு பட்டு நின்ற தலைமகன் தலைமகளை நாணின் நீக்குதற் பொருட்டு மெய் தொட்டுப் பயிறல் முதலாயின அவண்மாட்டு நிகழ்த்திக் கூடித்தனது (பி-ம். நிகழ்த்திப்பாடுமாற்றால் கூடிய தலைமகன் தனது) அன்பு தோற்ற நலம் பாராட்டியது.

திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் இந்தக் குறுந்தொகைப் பாடலே

அது போலவே மற்றொரு பாடல் – இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த பின், பிரிவாரெனக் கருதி அஞ்சிய தலைமகள் குறிப்பு வேறுபாடு கண்டு தலைமகன் கூறியதாக வரும் அருமையானப் பாடல் அன்பின் வெற்றியை உணர்த்தவல்லது.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே (குறு- 40)

இப்பாடலை எழுதிய புலவர் பெயர் புலப்படாமையால் இதை எழுதியவர் செம்புலப் பெயல்நீரார் என்றே அழைக்கப் படுகிறார். இது இக்கால சாதி மதங்களைக் கடந்து மனித நேயத்தையும் சமனியத்தையும் போற்றும் பாடலாக உள்ளது.

எவ்வவகை இடையூறு நேர்ந்தாலும் அன்பு அழியாதென்னும் துணிபு காதலர் மாட்டே இருத்தலால் அவர்கள் உலகியலோடு பொருந்தி வாழ்கிறார்கள். அடிக்கடி கண்டு அளாவளாவிடினும் மனமொன்றிய அன்பு தேயாது என்பதை

காம மொழிவ தாயினும் யாமத்துக்
கருவி மாமழை வீழ்ந்தென வருவி
விடரகத் தியமபு நாடவெம்
தொடர்புந் தேயுமோ நின்வயினானே (குறு: 42)

என்று கபிலர் உணர்த்துகிறா

இறுதிப் பாடலாக…. தலைமகள் தன்னுள்ளே சொல்லும் கூற்றாக

அடும்பி னாய்மலர் விரைஇ நெய்தல
ஓரை மகளி ரஞ்சி யீர்ஞெண்டு
கடலிற் பரிக்குந் துறைவனொ டொருநாள்
நக்குவிளை யாடலுங் கடிந்தன்
றைதே கம்ம மெய்தோய் நட்பே.

என்ற நெய்தல் திணைப் பாடலுடன் முற்றுப் பெறுகிறது

தலைவன் தலைவி ஆகியோரின் இணையற்ற அன்பும் அவர் ஒருவருக்கொருவர் மனங் கோணாதவாறு ஒழுகும் இயல்பும் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயத்தன; புகழை உண்டாக்கின என்ற உண்மையை உணர்த்தும் இலக்கியமாகத் திகழ்வது குறுந்தொகையாகும்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
3-1-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives