துளி 40 – முதுமொழிக் காஞ்சி

13 Mar 2022 5:02 pm

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 40
நேரச்செலவு : 4 நிமையங்கள் / 13-03-2022

முதுமொழிக் காஞ்சி

18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் செய்யுள் தொகுதியில் மிகச் சிறியது இதுவாகும்.

'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடை மையும்
ஒண்மையும் என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப'
என்பது தொல்காப்பியர் கூறுவதாகும்.

இந்நூல் 1871 ஆம் ஆண்டு ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, உவே சாமிநாதர் ஆகியோர் முயற்சியால் பதிப்பிக்கப் பட்ட ஒன்று.

காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும், ஒரு வகை அணிகலக் கோவை ஆகும். பல மணிகள் கோர்த்த காஞ்சியின் மணி போல கருத்துக்கள் தொகுக்கப்பட்டு, முதுமொழிக் காஞ்சியென்பது அறிவுரைக் கோவையாக அமைகிறது.

மதுரைக் கூடலூர் கிழார் என்பவர் இயற்றிய நூல் முதுமொழிக்காஞ்சி. முதுமொழி என்பது பழமொழி என்னும் சொற்பொருளோடு தொடர்புடையது. எனினும் முதுமொழி, பழமொழி இரண்டும் ஒன்றல்ல என்பது தொல்காப்பியர் கருத்து.

இந்நூல் இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலமான ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகம் பத்து கொண்டது இந்த நூல். மொத்தம் 100 பாடல்கள் இதில் உள்ளன. ஒவ்வொரு பதிகமும் “ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்” என்னும் தரவு அடியோடு தொடங்குகிறது அதாவது கடல் சூழ்ந்த உலகின் மக்களுக்கெல்லாம் என்ற பொருளில் ……. உலகையே மற்ற இலக்கியங்கள் முதன்மைப் படுத்துவது போல முதுமொழிக் காஞ்சியும் முன் மொழிகிறது..

பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

  1. சிறந்த பத்து
  2. அறிவுப் பத்து
  3. பழியாப் பத்து
  4. துவ்வாப் பத்து
  5. அல்ல பத்து
  6. இல்லைப் பத்து
  7. பொய்ப் பத்து
  8. எளிய பத்து
  9. நல்கூர்ந்த பத்து
  10. தண்டாப் பத்து

ஓழுக்கமுடையவனாக வாழ்வதே சிறந்த பண்பு ஆகும். கற்றலைக் காட்டிலும் ஒழுக்கமுடைமையே சிறந்தது ஆகும் என்று மதுரைக் கூடலூர் கிழார் எடுத்துரைக்கிறார். இதனை,

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓதலின் சிறந்தன்று ஓழுக்கம் உடைமை (சிற.பத்.1)
என்ற பாடலடி உணர்த்துகிறது.

கற்றவரை வழிப்படுதல் வேண்டும்
கல்வி கற்பதை விட கற்றாரை வழிப்படுதல் சிறந்தது ஆகும். இதனை

கற்றலின் கற்றாரை வழிப்படுதல் சிறந்தன்று (சிறந்.பத்.8)

நட்பு பற்றியச் செய்திகள் 6 பாடல்களில் (13,37,44,45,55,83) இடம்பெறுகின்றன.

நெகிழாத உயர்ந்த நட்புடைமையே உதவியினால் அறியலாம்.இதனை,
சோராநல் நட்பு உதவியின் அறிப (அறி.3)

ஒருவனிடம் நட்பு கொள்ளும் போது அவரிடம் இரக்கக் குணம் இருக்க வேண்டும். மேலும் நட்பு கொண்டு பின்பு அவன் மேல் கண்ணோட்டம் இல்லாமலிருப்பது கொடுமை செய்யும் செயலாகும். இதனை,

கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது (துவ்.பத்.7)

தன்னை மேம்படுத்திக் கொள்ளவே எடுத்துரைக்கின்ற வரிகள்:-

பகைவரை உறுத்தலைப் பார்க்கிலும் தன்னை மேம்படுத்திக் கொள்ளுதல் சிறந்தாகும்.
செற்றாரைச் செறுத்திலின் தற்செய்கை சிறந்தன்று (சிற.பத்.9)
என்ற பாடலடி சுட்டுகிறது.

கோபம் கொள்ளக் கூடாது
மதிப்பில்லாதவரிடத்து கொள்ளும் கோபம் பயன்தராது என்கிறார் மதுரைக் கூடலூர் கிழார்.இதனை,

உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று (நல்கூர்ந்த.பத்.9)
என்ற பாடலடி மூலம் மதிப்பில்லாதவர்களிடம் கோபம் கொள்ளும் போது பயன்தராது என்பதை முதுமொழிக் காஞ்சி அறிவுறுத்துகிறது.

அவ்வையின் ஆத்திச் சூடி போன்ற வடிவில் நயமான 100 நல் அறிவுரைகள் அடங்கியக் கருவூலம் முதுமொழிக் காஞ்சியாகும்.

எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
13-3-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives