துளி – 41 ஆசாரக் கோவை

15 Mar 2022 3:18 pm

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 40
நேரச்செலவு : 4 நிமையங்கள் / 15-03-2022

ஆசாரக் கோவை

இந்த நூல் பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று. அன்றாட வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல நெறிகளை இலக்கியத்தில் பதிவு செய்திருப்பதை ஆசாரக்கோவை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.


இந்த அன்றாட வாழ்க்கை முறைகளில் கூட நாம் ஒரு நெறிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்நூல் உரைக்கின்றது.

நீர் குடிக்கும் முறை, உண்ணல், உறங்கல், நீராடல், பெரியவர்களுடன் பேசும் முறை, மலம், சிறுநீர் கழிக்கக் கூடிய இடங்கள் ஆகியன பற்றிய செய்திகள் இது எழுதப் பட்ட காலத்திற்கொப்ப வரையறை செய்யப்பட்டிருப்பதை ஆசாரக்கோவையால் அறியலாம்.

இந்த நூலை இயற்றியவர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.

இதன் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர்.

ஆசாரக்கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்பது பொருளாம். தமிழில் ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்படுகிறது. அடிப்படை ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டியவை இவை; தவிர்க்க வேண்டியவை இவை என்பதையும் இந்நூல் கூறுகின்றது.

இந்த நூலுக்கு மூல நூல் என்ற வடமொழி நூலாக இருந்திருக்க வேண்டும் என்பது எம் கணிப்பு.

இந்நூல் பாயிரம் நீங்கலாக நூறு வெண்பாக்களைக் கொண்டது. இதில் வெண்பாக்கள் பலவாறாகப் பல வரிகளில் அமைந்துள்ளன.

இதில் காணப் படும் சில நல்ல செய்திகள்

இயற்கையிடமிருந்து கற்றல்

மனிதர்கள் தம்மைச் சுற்றியுள்ள பறவைகள், விலங்குகள் ஆகியவற்றிடமிருந்தும் சில நல்ல பழக்கங்களைக் கற்றுத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார் பெருவாயின் முள்ளியார்.

சிறிய எறும்பும் கிடைக்கின்றபோதே உணவுப்பொருளை எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்துக் கொள்ளும். தூக்கணாங்குருவி குளிர், காற்று முதலியவற்றால் இடையூறு ஏற்படாத வகையில் தனக்குரிய வீட்டைக் கட்டிக் கொள்ளும். காக்கை தன் இனத்தாரை அழைத்த பின்னரே உண்ணும் பழக்கமுடையது. இம்மூன்று பழக்கங்களையும் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்தவர் சிறப்புறுவர். சுறுசுறுப்பும், எதிர்காலச் சேமிப்பும், சுற்றத்தாரை அழைத்து உண்ணலும் சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டுவன.

நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை யென்றிவைபோல்
தங்கருமம் நல்ல கடைப்பிடித்துத்-தங்கருமம் 
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம் எப்பெற்றி யானும் படும்

(நந்து = ஆக்கமுள்ள, சேகரிக்கும்; ஆசாரம் = ஒழுக்கம்; பெற்றி = தன்மை; படும் = சிறப்படையும்)

உணவு உண்ணும் முறை

உடலைப் பாதுகாக்க உணவு அவசியம். அந்த உணவை எவ்வாறு உண்ண வேண்டும் என்பது பற்றியும் உண்ணுதல் தொடர்பாக நாம் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றியும் ஆசாரக் கோவையில் பல பாடல்கள் சொல்லுகின்றன.

உடல் தூய்மையைக் காப்பது உடல் நலத்திற்கு முதற்படி. நீராடிய பின்னரே உண்ண வேண்டும் (ஆசாரக்கோவை-18). உணவினைத் தொழுது, சிந்தாமல் உண்ண வேண்டும் (ஆசா கோவை – 20). எப்படி உண்ணக்கூடாது? படுத்தோ, நின்றோ வெளியிடையில் இருந்தோ கட்டில் மேல் இருந்தோ உண்ணல் கூடாது.

உணவுப் பொருள்களில் எதை முதலில் உண்ண வேண்டும், எதைக் கடைசியில் உண்ண வேண்டும் என்ற பழக்கங்களும் குறிக்கப் பட்டுள்ளன. முதலில் இனிப்பான பண்டங்களை உண்ண வேண்டும். இறுதியில் கசப்பானவற்றை உட்கொள்ள வேண்டும். வேறு சுவைப் பொருள்களை இடையே சுவைத்தல் வேண்டும்.

கைப்பன எல்லாம் கடைதலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத்
துய்க்க முறை வகையால் ஊண்

விருந்தினர், மிக மூத்தோர், பசுக்கள், பறவைகள், பிள்ளைகள் இவர்களுக்குக் கொடுத்த பின்னரே ஒருவர் உணவு உண்ண வேண்டும் என்ற உயர்ந்த பண்பாட்டினையும் ஒரு பாடல் எடுத்துச் சொல்கிறது (ஆசா கோவை – 21).

விருந்தோம்பல் பற்றி ஆசாரக்கோவை சொல்லும் சேதி

முகத்தைப் பார்த்தே நம் உள்ளத்தில் இருப்பதை உணர்ந்து கொள்வார்கள் விருந்தினர்கள். நம் முகம் மாறிவிட்டால் அவர்கள் உள்ளமும் மாறிவிடும். விருந்தினர் அனிச்ச மலரை விட மென்மையானவர்கள். அதனால் சிரித்த முகத்தோடு அவர்களை வரவேற்க வேண்டும். பின்னர் இனியவை கூற வேண்டும். அவர்கள் கால் கழுவ நீரும், படுக்கப்பாயும், அமர இருக்கையும் அளித்து அவர்களைப் பாராட்ட வேண்டும். இதன் பின்னர், நல்ல உணவு படைத்து அவர் பசியைப் போக்குதல் வேண்டும் என்பதை,

முறுவல் இனிதுரை கால்நீர் மணைபாய் கிடக்கையோடு
இவ்வைந்து மென்ப தலைச்சென்றார்க்கு ஊணொடு செய்யும் சிறப்பு
என இப்பாடல் விளக்குகிறது.

(முறுவல் = புன்னகை; இனிதுரை = இனிய பேச்சு; கிடக்கை = படுக்கை; தலைச் சென்றார் = விருந்தினர்)

இதில் நமக்கு ஒவ்வாத பல நடைமுறை நெறிகளும் அடங்கியுள்ளன.
எடுத்துக் காட்டாக மனுதர்மத்தில் கூறியது போன்றே

ஈன்றாள், மகள், தம் உடன் பிறந்தார் ஆயினும் சான்றார் தனித்து உறையற்க
ஐம்புலனும் தாங்குதற்கு அரிது ஆகலான்

என்றதொரு பாடலில் தாய்,மகள், தமக்கையர் கூட தனித்திருப்பது தவறு என்ற பொருளில் கையாளப் பட்டிருப்பது தமிழ் மரபுக்கு ஏற்புடையதல்ல.

ஆங்காங்கே சாதி, குலத் தொழில் பற்றியக் குறிப்புகள், சனாதனக் கோட்பாட்டை ஒட்டியச் செய்திகளும் உள்ளன. புலையன், இடையன், அந்தணர், பார்ப்பார் என்ற குறியீடுகள் உள்ளன.

இது ஓர் பண்பாட்டுச் செருகலாக இருக்கலாம் என்பது எம் முடிபு.

இந்த நூலில் உள்ள பல செய்திகள் தற்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. எனவே அல்லவைத் தள்ளி நல்லவை ஏற்று அறியும் வகையில் கவனமாகப் படிக்க வேண்டிய நூல் இதுவாகும்.

எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு. (குறள்)

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
15-3-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives