துளி – 42 இறையனார் அகப்பொருள்

22 Mar 2022 3:57 pm

தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.

துளி: 42
நேரச்செலவு : 4 நிமையங்கள் / 21-03-2022

இறையனார் அகப்பொருள்

இறையனார் களவியல் அல்லது இறையனார் அகப்பொருள் என்னும் நூல் தமிழரின் காதல் வாழ்க்கையைப் பற்றிக் கூறும் ஓர் அருமையான இலக்கண நூல். இது தொல்காப்பியத்துக்குப் பிந்தியது. சற்றொப்ப 2100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.

தமிழர் வாழ்வியலில் அகம், புறம் என இரு கூறுகள் மிகுதியாகப் பேசப் பட்டுள்ளன. அகம் என்பது உள்ளத்தின்கண் நிகழும் ஒன்றாகும். வெளியில் தோன்றாத ஒன்று. அது பல வகையாயினும் உணர்வால் அறிய முடியுமே யொழிய வெளியில் எடுத்துரைக்க முடியாத ஒன்று. அன்பு என்பது குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும் போல இது தான் அன்பு எனத் திறந்து காட்ட இயலாத ஒன்று.

மனத்தினால் மட்டுமே அறியும் மாண்புடையது அகம் சார்ந்த காதல்.

பருவம் வாய்ந்த ஆண், பெண் மனதில் அகத்தே பூத்து மலரும் சிறப்புடையது. இதனைத் தான் தமிழர் அகம் என்றனர்.

கற்பியல், களவியல் எனவும் உரைக்கலாம்.

இது குறித்து தமிழில் நமக்குக் கிடைத்திருக்கும் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருளதிகாரப் பாடல்களாக அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என்னும் சில பிரிவுகளில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது.

இந்த இயல்களில் சற்றொப்ப 212 நூற்பாக்கள் உள்ளன. அந்தச் செய்திகளை இறையனார் களவியல் என்ற இந்த நூல் அகக் கருத்தை விரிவாகவும், எழுத்தில் சுருக்கமாகவும் அறுபது (60) நூற்பாக்களில் சொல்கிறது.

இதற்கு நக்கீரர் உரை எழுதியுள்ளார். இவர் சங்க காலத்தவரா? என்பதில் ஐயம் உள்ளது. அகப்பொருள் இலக்கணம் கூறும் இந்த நூலை மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அந்த உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றியிருக்கவேண்டும் அல்லது இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும்

தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என்ற மூன்று சங்கத்தின் வரலாறு பற்றிய தொகுப்புக் குறிப்பினை முதன்முதலில் தந்த உரையாசிரியர் இவர்.

சூத்திரம் – 2

தானே அவளே தமியர் காணக்
காமப் புணர்ச்சி இருவயின் ஒத்தல்
– என்ற இந்த இரண்டு வரிகளில்

காமப் புணர்ச்சி என்பது தானே அவள், அவளே தான் என்னும் வேற்றுமை இல்லாது இருப்பதாகும். இதில் தமியர் என்ற சொல் தம் உணர்வினர் அல்லாதவராக இருத்தல் என்று பொருள் படும். (இதில் அன்பு, குணம், அறிவு, உருவம், செல்வம் என்ற அனைத்தும் வேற்றுமையின்றி அமையும் )

இந்த இலக்கிய உரையில் தான் தலைமகன் குணம் நான்கு – அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்றும்

தலைமகள் குணம் நான்கு – நாண், மடம், அச்சம், பயிர்ப்பு எனச் சொல்லப் பட்டிருக்கிறது. இதை விரித்துக் கூற இப்போது நேரமில்லை.

சூத்திரம் : 3

அவ்வியல் பல்லது கூட்டக் கூடல்
எவ்விடத்தானுங் களவிற்கில்லை. .
களவு இலக்கணம், கற்பு இலக்கணம் வேறுபாட்டை விளக்கும் ஒன்றாக உள்ளது.

சூத்திரக் கிடக்கை நான்கு வகைப் படும் ஆற்றொழுக்கு, அரிமா நோக்கு, தவளைப் பாய்த்து, பருந்தின் வீழ்க் காடு என்பவை.

களவொழுக்கத்திற்கு எவ்விடமும், எந்நேரமும் இன்றி கூட்டக் கூடல் களவினுக்கில்லை என்றவாறு அமையும்.

சூத்திரம் : 15

முற்படப் புணராத சொல்லின் மையில்
கற்பெனப் படுவது களவின் வழித்தே… (15)

புணராத முன் சொல் இன்மையின், கற்பென்று சிறப்பிக்கப் பட்ட ஒழுக்கம் களவென்னும் ஒழுக்கத்தின் வழித்தே ஆகும் என்பதாகும். களவும் கற்பும் தொடர்ச்சியான இன்பத்தைத் தருவன.

இறையனார் அகபொருள் என்ற இந்த நூலை நாம் நக்கீரர் உரை மூலமே அறிய முடிகிறது. ஆழமும் அகலமும் கொண்ட ஓர் அகத்திணை வாழ்வின் இலக்கண நூல்.
எண்ணற்ற அமிழ்தத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
22-3-2022.

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives