02 Apr 2022 5:56 pm
(செவ்வியல் இலக்கியங்கள் நிறைவுப் பதிவு)
தொல் தமிழர் மரபு வழிச் சிந்தனைகளைச் சற்று நினைவூட்டும் வகையில், அறிவுச் சுரங்கமாக விளங்கும் நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக சிறுதுளிச் செய்தியாக உங்கள் பார்வைக்குப் பதிவிடுகின்றோம். தமிழுக்காக ஒரு 5 மணித்துளிகள் ஒதுக்கிப் படித்துப் பயன் பெறுவீர் என்று நம்புகின்றோம்.
துளி: 45
நேரச்செலவு : 5 நிமையங்கள் / 1-04-2022
மணிமேகலை தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்று.
முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தின் நீட்சியாக அடுத்து எழுதப் பட்ட இரண்டாவது காப்பியம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு கூறுவது சிலப்பதிகாரம். கோவலன் மாதவி பெற்றெடுத்த மகள் மணிமேகலையின் வரலாறு கூறுவது மணிமேகலை. எனவே சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டையும் தமிழிலுள்ள இரட்டைக் காப்பியம் என்றழைப்பர்.
மணிமேகலைக் காப்பியத்தை எழுதியவர் சீத்தலை சாத்தனார் என்பவராவார்.
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை கி.பி. 150 – 250 க்குள் எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்றுத் தகவுகள் மூலம் அறிஞர்கள் கணித்துள்ளனர்.
மணிமேகலையை முதலில் ஜான் பேட்டன் என்பவரும் பின்னர் 1911 ஜி.யு. போப் அவர்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளனர். இது தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், ஜப்பானிய உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்ட இலக்கியம் மணிமேகலை ஆகும்.
விழாவறைக் காதை எனத் தொடங்கி பவத்திறம் அறுகெனப் பாவை நோற்றக் காதை ஈறாக மொத்தம் 30 காதைகளைக் கொண்டது.
இது ஒரு பௌத்த மதக் காப்பியம் ஆகும். எனினும் எல்லா சமயத்தவரும் படிக்கும் வண்ணம் இலக்கிய நயமும் பொதுமையும் நிரம்பப் பெற்றுள்ளன.
தமிழ் நாட்டின் வரலாறு, மக்களின் ஒழுகலாறு, பண்பாடுகளை நாம் மணிமேகலைக் காப்பியத்தின் மூலம் அறிய முடிகிறது.
அழகொழுகும் உயிரோவியமாய்த் திகழ்ந்த இளமங்கை மணிமேகலை இளமையின் வளமையைத் தடுத்து, துறவறம் பூண்டு, பசித்தவருக்கு உணவு வழங்குவதே பேரறம் எனக் கொண்டு வாழ்ந்து முடிவில் அறவண அடிகள் பால் அறங்கேட்டு நின்றாள் என்பதுவே இக்காப்பியம் தரும் செய்தியாகும்.
ஓர் இளமங்ககையைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு அவருடைய துறவு வரலாற்றைக் கூறும் காப்பியங்கள் உலகில் மணிமேகலையைத் தவிர வேறு எதுவும் இல்லை.
தமிழ் நாட்டின் வரலாறு, மக்களின் ஒழுகலாறுகள், பண்பாடுகளை மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாகவும் நாம் அறிய முடிகிறது.
பூம்புகார், மதுரை நகரமைப்பை நாம் சிலப்பதிகாரத்தில் காண்பது போல மணிமேகலையில் வஞ்சி, கச்சி நகரங்களின் அமைப்பைச் சிறப்பாகக் காட்டுகிறது மணிமேகலை. பூம்புகார் கடலில் மூழ்கியச் செய்தியை மணிமேகலை மூலமாகவே அறிகிறோம்.
இக்காப்பியத்தில் ஆங்காங்கே புராண இதிகாசக் குறிப்புகளும் தென்படுகின்றன. மேலும் பிற சமயப் பழிப்பும் சிற்சில இடங்களில் காணமுடிகிறது. எனினும் அறக்கருத்துகள் மிகுந்து காணப்படும் ஓர் இலக்கியம் மணிமேகலை ஆகும்.
இளமையும் நில்லா யாக்கையும் நில்லா
வளவிய வான்பெரும் செல்வமும் நில்லா
புத்தேள் உலகம் புதல்வரும் தாரார்
மிக்க அறமே விழுத்துணை ஆவது
என இராசமாதேவிக்கு மணிமேகலை அறிவு புகட்டும் அறவுரை சிறந்த ஒன்றாகும்.
பசிப் பிணியைத் தீர்த்தலே அறம் என மணிமேகலைக் காப்பியம் செப்புகிறது.
மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்க் கொடுத்தோரே;
எனவும்….
அறம் எனப் படுவது யாது? எனக் கேட்பின் மறவாது இது கேள், மன் உயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டது இல்.
என்கிறது மணிமேகலை.
உணவும், உடையும் உறையுளும் மக்கட்ககு இன்றியமையாது கிடைக்க வேண்டும் என இக்காப்பியம் வலியுறுத்துகிறது.
“பசி வாட்டுகிறது என்று வருந்தி வந்தவருடைய பசியைப் போக்கி, அவருடைய திருந்திய முகத்தைக் காட்டக் கூடிய தெய்வத் தன்மை பொருந்தியது அமுதசுரபி.
உண்டதும் பசித்தவன் முகத்தில் அதுவரை இருந்தச் சோர்வும், களைப்பும் நீங்கி அவன் முகம் ஒளி பெறுகிறதே- அதைக் காணும் இன்பத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை” என்னும் கருத்தை
வருந்தி வந்தோர் அரும் பசி களைந்து அவர்
திருந்து முகம் காட்டும் என் தெய்வக் கடிஞை;
எனும் வரிகள் உணர்த்துகின்றன.
மணிமேகலையின் ஆசிரியர் சீத்தலை சாத்தனார் திருவள்ளுவரை பெரிதும் போற்றி அவர் கருத்துகளைப் பரப்புவதில் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார்.
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் பெருமழை’ என்ற அப்
பொய்யில் புலவன் பொருளௌரை தேறாய்
என்னும் அடிகளில் திருக்குறளை அப்படியே கையாண்டுள்ளார்.
காப்பியத்திற்குள் சென்றால் விரிந்து கொண்டே போகும். படிப்பதற்கும் நாடகமாகக் காட்சிப் படுத்துவதற்கும் ஓர் இனிமையான இலக்கியம் மணிமேகலைக் காப்பியமாகும்.
இவ்வாண்டின் முதல் நாள் தொடங்கி தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப் பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் இறையனார் அகப் பொருள், முத்தொள்ளாயிரம், சிலப்பதிகாராம் மணிமேகலை உள்ளிட்ட 41 செவ்வியல் இலக்கியங்கள் குறித்து ஓர் அறிமுகமாக இதுவரை சிலவற்றைப் பகிர்ந்துளேன்.
தமிழர்கள் மகாபாரதம், இராமாயணம் போன்ற புராணக் காப்பியங்களில் காட்டும் ஆர்வம் தவிர்த்து தமிழ் மொழி, தமிழர் வாழ்வியல், தமிழர் வரலாறு குறித்தும், நாடகக் கலை குறித்தப் பல்வேறு நுண்ணியச் செய்திகளையும் தரும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற கலை வடிவங்களை காண்பதிலும் தமிழர் தம் பண்பாட்டு மரபுகளை உள்வாங்குவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அதுவே தமிழர்களுக்கு நலம் பயக்கும் வகை அமையும்.
தமிழ் நாட்டின் பழம் பெருமைக்கு இந்நூல் ஒரு நற்சான்றாக விளங்குகிறது.
தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர் என்ற தலைப்பில் எடுத்தியம்பியச் செவ்வியல் இலக்கியங்களின் அறிமுகப் பதிவு மணிமேகலைக் காப்பியத்துடன் இன்று நிறைவு பெறுகிறது. தொடர்ந்து படித்து வந்த அன்புத் தமிழ் உறவுகளுக்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களும் உரித்தாகுக!
அனைத்துப் பதிவுகளையும் படிக்க விரும்புவோர் எம் வலைத்தளமான
www.lemuriyafoundation.org என்ற தளத்தில் படித்து மகிழலாம்! இது காறும் படித்தப் பதிவுகள் குறித்து தங்கள் கருத்துகளை skumanarajan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பகிரலாம்.
எண்ணற்ற அமுதத் துளிகளின் கொள்கலம் தான் நம் செந்தமிழ் இலக்கியங்கள் என்பதால் தான் நம் புரட்சிக் கவிஞர் “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று பாடி வைத்தார். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். தமிழ் என்பது ஓர் அறிவுச் சுரங்கம். நலமும் வளமும் சூழ நாம் வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
கனிவுடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
2-4-2022.
We can not do it alone. Join with us.