04 Jan 2022 12:45 pm
(தொல் தமிழர் வகுத்த ஐந்திணை ஒழுக்கத்தின் நானிலப் பரப்பின்
பனிக் குளிரில் காலை இளம்பருதியின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக உங்கள் பார்வைக்காக யாம் பதிவிடுகின்றோம்)
துளி: 5
வாசிப்பு நேரம் : 3 நிமையங்கள் / 4-1-2022
சங்க கால இலக்கியங்கள் என்று பகிரப் படும் எட்டுத்தொகை, பத்துப் பாட்டு எனும் பதினெட்டு நூல்களில் எட்டுத் தொகையில் பெருமையாகப் போற்றப் படும் பிறிதொரு இலக்கியம் குறித்து இன்றையப் பதிவு.
ஐங்குறுநூறு எட்டுத்தொகை தொகுப்பு நூல்களுள் ஒன்று. இதிலுள்ள பாடல்கள் சங்க காலத்தைச் சேர்ந்தவை.
மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, முல்லை என்னும் ஐந்து நிலம் சார்ந்த திணை ஒவ்வொன்றிற்கும் நூறு பாடல்கள் வீதம் இந் நூலில் ஐந்நூறு அகத்திணைப் பாடல்கள் உள்ளன.
இந்நூலைத் தொகுத்தவர் “புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்” என்னும் புலவர்.
இது 3 அடி சிற்றெல்லை 6 அடி பேரெல்லை என்ற அளவில் உள்ள பாடல்கள் ஆகும். ஆசிரியப்பாவால் ஆன இந்நூலுக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.
அடி அளவால் குறுமையேனும் விரிக்கும் பொருள் நயத்தாலும், விளக்கும் உணர்வுக் களங்களாலும் மிக உயர்ந்து நிற்கும் ஓர் தொகை நூலாகும்.
ஐங்குறு நூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணையைச் சேர்ந்த பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்படுள்ளன. ஆகமொத்தம் ஐந்து புலவர்கள் இவற்றை இயற்றியுள்ளனர். இதனைப் பின்வரும் பாடலால் நாம் அறியலாம்.
மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே
நூலையோ தைங்குறு நூறு.
ஐங்குறுநூற்றில் அமைந்துள்ள ஒவ்வொரு திணையைச் சார்ந்த 100 பாடல்களையும் ஒவ்வொரு புலவர் இயற்றியுள்ளார். அவ்வகையில் இந்நூலில் அமைந்த 500 பாடல்களும் ஐந்து வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டுள்ளன.
ஐங்குறுநூறு குறைந்த அளவினதான அடிகள் கொண்டிருந்தாலும் இந்நூல் பாடல்களில் அகப்பொருளுக்குரிய முதல், கரு, உரி பொருட்கள் மூன்றும் குறைவின்றி அமைந்துள்ளதோடு உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்களும் நிறைந்துள்ளன. ( இறைச்சி என்பது ஓர் இலக்கணக் கோட்பாடு. அதாவது உரிப் பொருளின் புறத்தே நின்று அதன் கருத்தை சிறப்பிக்கப் பயன் படும் குறிப்பு எனக் கொள்ளலாம்.)
“இறைச்சித் தானே உரிப்புறத் ததுவே” – தொல்காப்பியம் 1175
“இறைச்சியிற் பிறக்கும் பொருளுமார் உளவே” – தொல் 1176
என்ற சூத்திரங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஓரம்போகியரின் மருதத்திணை பாடல்கள் “வேட்கை பத்து” முதலாவதாக இடம் பெறுகிறது. வேட்கை என்பது விருப்பம் ஆகும். புற ஒழுக்கத்திலே நெடுநாள் ஒழுகிய தலைவனின் உடனுறை இன்பம் பெற்றிலாத காலத்திலே, தலைவியின் மன வேட்கை எவ்வாறு பொறுப்புணர்வுடன் சென்றது என்பதும், அவள் நலத்தைக் கருதும் தோழியரின் மனவேட்கை எவ்வாறு நிகழ்ந்தது என்பதையும் இப்பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
அதில் ஒரு துளியாக
“பால் பல ஊறுக” என்ற பொருள் படும் படி…
“வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லோடு பெயரும்
பூக்கஞு லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக என்வேட் டேமே” – (மருதம்- 3)
ஆதன் வாழ்க; அவினி வாழ்க! பசுக்களிடத்திலே பால் பயன் மிகுதியாகச் சுரப்பதாக; பகடுகள் பலவாகப் பெருகுக’ என வேண்டினள் தலைமகள். யாமோ வயல்களிலே விதை விதைத்துத் திரும்பும் உழவர்கள் அவ்வட்டிலே நெல்லைக் கொண்டவர்களாகத் தம் வீடு நோக்கிச் செல்லும், பூக்கள் நிரம்பிய ஊரான, தலைவனின் மனையற வாழ்க்கை என்றும் சிறப்பதாக வேண்டினோம்.
அகத்திணை ஒழுக்கத்தினைக் கூட எவ்வளவு பொறுப்புணர்வுடன் புலப்படுத்த இயலும் என்பதற்கு இப்பாடல் ஒரு நல்ல எடுத்துக் காட்டு ஆகும்.
அதுபோலவே மற்றொரு பாடல்-
வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோ ளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்துறை யூரன் தன்னோடு
கொண்டனன் செல்க எனவேட் டேமே
இதன் கருத்து தலைவியோ நாட்டு வளமையை விரும்பி வேண்டினாள். யாமோ அவளின் மனயறை வாழ்வு விரைவில் கைகூட வேண்டி விரும்பினோம் என்பதாகும்.
பிறிதொரு பாடல்
புளியங்காய் வேட்கை
நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே
நீரிலே வாழும் நீர்க்கோழியின் நீல நிறச் சேவலை, கூரிய நகங்களையுடைய அதன் பேடையானது தன் வேட்கை மிகுதியால் நினைந்திருக்கும் ஊரனே. இவளது வேட்கை நோய்க்கு நின் மலர்ந்த மார்பானது புளியங்காயின் வேட்கை போல இராநின்றது.
புளி அல்லது புளியங்காய் தின்பது, இதனை பிறர் தடுத்தாலும் அவரறியாத வேளைப் பார்த்து மீண்டும் உண்ண விழைவைத் தரும். அது போலவே இவளுடைய வேட்கை என்பது நின்பால் பெரும் காதலை உடையது என்பதாகும்.
இதனையடுத்து “பெருமணல் உலகம்” எனும் நெய்தல் நில மக்களின் அகவொழுக்கம் செப்பும் பாடலாக அம்மூவனார் எழுதிய நூறு பாடல்கள் இடம் பெறுகின்றன. அதில் ஒரு பாடல்:
அன்னை வாழி! வேண் டன்னை - முழங்குகடல்
திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தெனப்
பொன்னினும் சிறந்தன்று! கண்டிசின் நுதலே. – (105)
வாழ்வாயாக அன்னையே! இதனையும் விரும்பிக் காண்பாயாக! முழக்கமிடும் கடலலைகள் கொண்டு தந்த முத்துக்கள், வெண்மணலிடையே எடுப்பாரற்றுக் கிடந்து ஒளி செய்யும், குளிர்ந்த அழகிய துறைக்கு உரியவன் வந்தனன். அவன் வந்தான் என்றதும் இவள் நுதலானது பொன்னினும் சிறந்தவோர் புத்தொளி பெற்றதனை நீயும் காண்பாயாக!
அவள் களிப்பும் காதலும் அத்தகையது என்பதை உணர்த்தும் ஓர் நெய்தல் நிலப் பாடல்.
இது போன்று எண்ணற்ற முத்துக்களின் குவியலே ஐங்குறுநூறு என்ற இந்த தொகை நூலாகும். படித்து இன்புறுவீர்!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
4-1-2022.
We can not do it alone. Join with us.