05 Jan 2022 2:17 pm
(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும்.முன்பனிக் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)
துளி: 6
வாசிப்பு நேரம் : 5 நிமையங்கள் / 5-01-2022
பதிற்றுப்பத்து எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்து பத்தாகப் பாடியப் பாடல்களின் தொகுப்பு. முழுமையாகக் கிடைக்காத நூல்களில் இதுவும் ஒன்று.
இந்த நூலில் முதற் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள் இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன. உதியஞ்சேரல் வழித்தோன்றல்களான ஐந்து சேர மன்னர்கள் மற்றும் அந்துவஞ்சேரல் இரும்பொறை வழித்தோன்றல்கள் மூவர் என எட்டு (8) பேர்.
பத்து அரசர்களின் கொடை, வீரம், சிறப்பு ஆகியவற்றைக் கூறும் இந்நூலில், ஒவ்வொரு பத்திலும் உள்ள பாடல்களுக்குத் தனித்தனியாக தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன,
இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனக் கருதப்படுகின்றது.அனைவராலும் இது கடைச்சங்ககால நூல் என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கபிலர், பரணர் ஆகிய கடைச்சங்க புலவர்களால் இந்நூல் பாடப்பட்டுள்ளதால் இந்நூல் கடைச்சங்க கால நூல் எனலாம்.
1904ஆம் ஆண்டு முதன் முதலாக உ.வே.சா அவர்களால் பதிக்கப் பட்டது.
பதிற்றுப்பத்துக்கு பழைய உரை ஒன்று உண்டு. இந்த உரையாசிரியர் யார் என்பதை அறிய இயலவில்லை. எனினும் பிற்கால் உரையாசிரியர்கள்;-
அட்டு ஆனானே குட்டுவன் அடு தொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே
வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
வளிமினை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரிசுரைக் கவரும் நெய் வழிபு உராலின்
பாண்டில் விளக்கு பரூஉ சுடர் அழல
நன் நுதல் விரலியர் ஆடும்
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே
பகைவரோடு போரிட்டது போதும் என்று ஓய மாட்டான் குட்டுவன்; அவ்வாறு போரிடும் போதெல்லாம் களிறுகளைப் பெற்று ஓயமாட்டார் பரிசிலர்; மலைமேலிருந்து விழும் அருவியினைப் போல மாடங்கள் மேலிருந்து காற்றால் அலைக்கப் படும் ஒளிவிடும் கொடிகள் ஆடி அசையும் தெருவில் சொரிகின்ற சுரை பெற்றுக் கொண்ட நெய் வழிந்து பரவுதலால் பாண்டிலாகிய வட்ட விளக்கில் பருத்த சுடர் ஆடிக் கொண்டு எரிய, நல்ல நெற்றியக் கொண்ட விறலியர் ஆடுகின்ற பழமையான மாளிகையுள்ள ஊர்களில் அவனது புகழுரைகள் ஓய மாட்டா!
(சேரலாத!) வண்டு மொய்க்க அடும்பு பூத்திருக்கும் கானலில் நண்டு நடந்த கோடுகளை ஊதைக்காற்று நுண்மணலைத் தூவி மறைக்கும். அந்த இடத்தில் விறலியரின் பாடலைக் கேட்டுக்கொண்டே நீ காலம் கழிப்பதைப் பார்த்த நிலத் தலைவர்கள் நீ மெல்லியன் போலும் என்று நினைப்பராயின் அவர்கள் உன்னை உணராதவர்கள். இளையரின் தண்ணுமை முழக்கத்துடன் நீ போருக்கு வந்துவிட்டால் உன் நோக்கம் கூற்றுவன் வலை விரித்தது போல் இருக்கும். அரவைக் கொல்லும் மழைமேகத்து இடி போன்றவன் நீ. உன் படைவீரர் பனைமடல் மாலை சூடிக்கொண்டு செல்லும்போது இரை உண்டு என்ற நம்பிக்கையுடன் கழுகுகள் வட்டமிடும்.
வண்(டு)இறை கொண்ட தண்கடல் பரப்பின்
அடும்(பு)அமல் அடைகரை அலவன் ஆடிய
வடுஅடு நுண்அயிர் ஊதை உஞற்றும்
தூஇரும் போந்தைப் பொழில்அணிப் பொலிதந்(து)
இயலினள் ஒல்கினள் ஆடும் மடமகள் 10
……………
மறம்கெழு போந்தை வெண்தோடு புனைந்து
நிறம்பெயர் கண்ணிப் பருந்(து) ஊ(று)அளப்பத்
தூக்கணை கிழித்த மாக்கண் தண்ணுமை
கைவல் இளையர் கையலை அழுங்க
மாற்(று)அரும் சீற்றத்து மாஇரும் கூற்றம் 35
வலைவித் தன்ன நோக்கலை
கடியையால் நெடுந்தகை செருவித் தானே.
மீன்வயின் நிற்ப வானம் வாய்ப்ப
அச்(சு)அற்(று) ஏமம் ஆகி இருள்தீர்ந்(து)
இன்பம் பெருகத் தோன்றித் தம்துணைத்
துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோர் உடற்றும் கடும்தூ அஞ்சா 5
ஒளிறுவாள் வயவேந்தர்
…………………………….. எனத் தொடங்கி.
நின்நாள், திங்கள் அனைய ஆக திங்கள்
யாண்(டு)ஓர் அனைய வாக யாண்டே
ஊழி அனைய ஆக ஊழி
வெள்ள வரம்பின ஆ(க)என உள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக்(கு) 55
உரும்என முழங்கும் முரசில்
பெருநல் யானை இறைகிழ வோயே.
என முடியும் பாடலில்
· மக்கள் அச்சம் இல்லாமல் வாழவும், அறக்கடவுள் வாழ்த்தும்படியாகவும், ஈர நெஞ்சமோடு இனிது ஆண்டவன் இந்த அரசன். மாந்தரன் அரசனின் வழித்தோன்றல். இவன் வானம் போல அளக்க முடியாதவன். கடல் போல் அள்ள அள்ளக் குறையாதவன். பல மீன்களுக்கிடையே தோன்றும் திங்களைப் போல சுற்றம் சூழ வாழ்பவன். உரம் பெற்ற கடலில் வேலிட்டவனோடு ஒப்பிடுகையில் உம்பல் என்னும் பெருங்களிறு போன்றவன் என்ற பொருளமைந்த பாடல் இது.
சேர மன்னர்கள் பதின்மர்களின் புகழைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் ஓர் இலக்கியச் சுரங்கம் பதிற்றுப் பத்து என்ற இந்த நூலாகும். படித்து சுவைத்து இன்புறுக!
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
5-1-2022.
We can not do it alone. Join with us.