துளி 7 – பரிபாடல்

06 Jan 2022 2:27 pm

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்பும் ஆகும். மார்கழித் திங்கள் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)

துளி: 7
வாசிப்பு நேரம் : 5 நிமையங்கள் / 6-01-2022

பரிபாடல்

சங்க கால தமிழ் இலக்கியத் தொகுதியான எட்டுத் தொகை நூல்களில் ஐந்தாவதாகச் சிறப்பித்துச் சொல்லப் படும் நூல் பரிபாடல் ஆகும்.

பரிபாடல் என்பது பாட்டு வகைகளுள் ஒன்று. இதன் இயல்பைத் தொல்காப்பியம் நன்கு விவரித்துள்ளது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப் பாக்களில் அமையப் பெற்றுள்ள வரம்பு இலக்கணத்திற்கு சொல்ல முடியாத அளவு நான்கினுக்கும் பொதுவாக அமைந்த யாப்பு வகை கொண்டது பரி பாடல் ஆகும். இது ஒரு வகை இசைப்பாவாகும். இவ் வகைப் பாடல்களால் அமைந்ததொகை நூலும் ‘பரிபாடல்’ என்றே வழங்கி வந்துள்ளது.

பொதுவாகவே பரிபாடல்கள் அனைத்தும் அகப்பொருள் பற்றி எழுந்தனவே! ஆனால் பிற்காலத்தில் பல புலவர்களின் பாடல்கள் தொகுப்பில் சில இசைப் பாடல்களாகவும் சில கடவுள் வாழ்த்துப் பாடல்களாகவும் கையாளப் பட்டுள்ளன என்று அறிகிறோம்.

அவ்வாறு அமைந்த நூலே “பரிபாடல்” ஆகும். இதில் அகத்திணை, புறத்திணை என இரண்டு வகைப் பாக்களும் உள்ளன.

இந்த தொகை நூல் தொகுப்பு பெரும் பாலும் மதுரை அதன் அண்மையில் வாழ்ந்த தொகுப்பாகையால் பெரிதும் பாண்டிய மரபு சார்ந்ததாக உள்ளது.

பண்டைத் தமிழ் நிலத்தில் வாழ்ந்த செந்தமிழ்ப் புலவர்கள் அனைவரும் அறம், பொருள், இன்பம் என்னும் பொருள் பற்றியே பெரிதும் பாடியுள்ளனர். சங்க இலக்கியங்கள் என வரையறை செய்யப் பட்ட நூல்கள் எட்டுத் தொகை, பத்துப்பாட்டு ஆகிய பதினெட்டு நூல்களில் இறைவனைப் பாடி ஏத்தும் பழக்கம் எதிலும் இல்லை. எனினும் இதில் விதிவிலக்காக அமைந்த எட்டுத்தொகை நூல் பரிபாடல் மட்டுமே. இதில் சில பாடல்கள் தெய்வ வழிபாட்டைப் பற்றிக் குறிக்கிறது.

சங்க நூற்கள் பலவற்றில் கடவுள் வாழ்த்து என்பது பிற்காலத்தில் பாரதம் பாடிய பெருந்தேவனார் போன்ற புலவர்களால் இணைக்கப் பட்ட ஒன்று. எனவே தான் நானாற்பது போன்ற நூல்களில் 41, 43 பாடல்களாகவும், நானூறு என வரும் இலக்கியங்களில் 401 பாடல்களாக இன்று நாம் காண்கிறோம். இந்த வாழ்த்துப் பாக்கள் இலக்கியத்துடன் தொடர்பு உடையவை அல்ல.

பரிபாடல் என்ற இந்த இலக்கியத்தில் புனையப் பட்ட இப்பாடல்களில் யார் யாரைக் குறித்து எத்தனை பாடல்கள் இருந்தன என்பதைப் பின்வரும் செய்யுள் மூலம் அறிய முடிகிறது. .

திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்
தொரு பாட்டு; காடுகாட்கு ஒன்று; - மருவினிய
வையை இருபத்தாறு; மா மதுரை நான்கு என்ப-
செய்ய பரிபாடல் திறம்.

அதாவது திருமாலுக்கு எட்டு (8) பாடல்கள், செவ்வேளுக்கு (முருகன்) முப்பத்தோரு (31) பாடல்கள், காடுகாளுக்கு ஒரு பாடல், வையைக்கு இருபத்தெட்டு(28) பாடல் மதுரைக்கு நான்கு(4) பாடல்கள் என மொத்தம் எழுபது (70) என்று அறியப் பட்டுள்ளது. காடுகாள் என்றது காளியை. ‘காடுகாட்கு’ என்பதற்குப் பதில் ‘கார் கோளுக்கு’ என்றும் பொருள் உண்டு. கார் கோள் என்பது கடல். அந்த ஒரு பாடல் காளியைப் பற்றியதா? கடலைப் பற்றியதா? என்று இப்பொழுதும் அறிய வழியில்லை.

இந்த எழுபது பாடல்களில் நமக்குப் பதிப்பில் கிடைப்பன வெறும் 22 பாடல்கள் மட்டுமே. எஞ்சியவை இறந்து பட்டன. இதில் பாடப் பெற்றிருப்பவை செவ்வேள் (8) திருமால் (6) வையை (8) என மொத்தம் இருபத்திரெண்டு (22) பாடல்கள் மட்டுமே. எனினும், பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும் தெரியவருகின்றன.

பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளார்.

இந் நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர்க ஒன்றும் அறியக்கூடவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை.

இதன் காலம் சிலர் கி.பி. 6 நூற்றாண்டு எனவும் மற்றும் சிலர் கி.மு. 161 என்றும் குறித்துள்ளனர். ஆனால் இராசமாணிக்கனார் கருத்துப் படி கி.பி 3 ஆம் நூற்றாண்டை ஒட்டியது எனக் கொள்ளலாம்.

இந்நூல் 1918 ஆம் ஆண்டு முதன்முறையாக உ.வே.சாமிநாதர் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றது. இரண்டாம் பதிப்பை அவரே 1935 இல் மீண்டும் வெளியிட்டார். அது ஓர் அற்புதமான பதிப்பு.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் இந்நூலுக்கும் உரை எழுதியுள்ளார்.

பிற சங்க நூற்களைப் போலல்லாமல் இதில் வடமொழிக் புராணக் கதைகள், வடபுல வழிபாட்டு முறைகளும் இங்கு காணக் கிடைக்கின்றன. எனவே இவை குறித்து இயல்பான ஐயம் நமக்கு எழுகிறது. பிற்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியத்திற்கு இதுவே வழிகாட்டியாகவும் கொள்ளலாம்.

மதுரை :-

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்
நான்மாடக் கூடல் நகர்.
தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது,
குன்றுதல் உண்டோ மதுரை- கொடித் தேரான்
குன்றம் உண்டாகும் அளவு?

வைகையின் வெள்ளம்:-

வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு,
உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி;
உழவர் களி தூங்க, முழவு பணை முரல,
ஆடல் அறியா அரிவை போலவும்,
ஊடல் அறியா உவகையள் போலவும்,
வேண்டு வழி நடந்து, தாங்கு தடை பொருது;
விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப்
பொது நாற்றம் உள்உள் கரந்து, புது நாற்றம்
செய்கின்றே, செம் பூம் புனல்.

வைகையில் கட்டுக்கடங்க்கது பெருகி வரும் வெள்ளம் அணை உடைத்துப் போகின்ற செய்தியின் உழவர்கள் களிப்பினால் ஆடி மகிழவும், முழவுகளோடு பறையொலி எழுப்பியும் மகிழ்ந்தனர். உவமையாக இங்கு குறிப்பிடுவது ஆடத்தெரியாதவள் ஆடுவது போலவும், ஊடல் இயல்பறியாத பேதையொருத்தி காம மயக்கத்தில் கணவன் கருத்துக்கேற்ப ஒழுகாமல் அவனைக் கடந்தும் நீங்குவது போல செருக்குடன் சென்றது போலவும், விதிமுறைகளின்றி தன்னைத் தடுத்தவற்றை உடைத்துச் சென்றது என உவமைகளைப் கையாண்டுள்ளார்.

உலக உயிர்களின் தோற்றமும், நிலைபேறும், ஒடுக்கமும்

நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள;
நின் தண்மையும் சாயலும் திங்கள் உள;
நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள;
நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள;
நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள;
நின் தோற்றமும் அகலமும் நீரின் உள;
நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள;
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள;
அதனால், இவ்வும், உவ்வும், அவ்வும், பிறவும்,
ஏமம் ஆர்ந்த நிற் பிரிந்து,

திருமாலே!

உன்னுடைய வெம்மையும் ஒளியும் சூரியனிடத்தில் உள்ளது,
உன்னுடைய அருளும் மென்மையும் சந்திரனிடத்தில் உள்ளது,
உன்னுடைய கருணைப் பெருக்கும் கொடைத்தன்மையும் மழையிடத்தில் உள்ளது,
உன்னுடைய தாங்கும் தன்மையும் பொறுமையும் பூமியிடத்தில் உள்ளது,
உன்னுடைய நறுமணமும் ஒளியும் மலரிடத்தில் உள்ளது,
உன்னுடைய தோற்றமும் பெருமையும் கடலிடத்தில் உள்ளது,
உன்னுடைய உருவமும் மொழியும் வானிடத்தில் உள்ளது,
நீ வருவதும் செல்வதும் காற்றிடத்தில் உள்ளது (காற்றுபோல் நீ எப்போதும் எங்கும் இருக்கிறாய்),
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்
நன் பல நன் பல நன்பல வையை!
நின்புகழ் கொள்ளாது இம் மலர்தலை உலகே

எங்கும் இன்பம். எங்கும் பேரழகு. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம்.
மதுரை மூதூர், வையை இரண்டும் நல்லது, நல்லது, நல்லது.
இதன் புகழ் உலகமே கொள்ளாது.

என மதுரை, வையை சிறப்பு குறித்து பாடலின் இறுதி வரிகள் இவை.

இது போன்ற எண்ணற்ற பாடல்களின் மூலம் தமிழ்ப் புலவர்களின் அறிவுத் திறன் புலனாகின்றது. இது அகமும் புறமும் கலந்த ஓர் இலக்கிய நூலாகும்.

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ்வு அமைந்திட தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
6-1-2022

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives