துளி 8 – கலித்தொகை

07 Jan 2022 10:58 am

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)

துளி: 8
வாசிப்பு நேரம் : 5 நிமையங்கள் / 7-01-2022

கலித்தொகை

கலித்தொகை சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூலாகும். பல புலவர்களின் பாடல்கள் அடங்கிய ஒரு தொகுப்பு நூலான கலித்தொகை சிறப்பான அமைப்புகளால் அமைந்த கலிப்பாவினால் பாடப்பட்டவையாகும்.

இதில் மொத்தம் 150 பாடல்கள் உள்ளன.

அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்களாக கலிப்பாவையும் பரிபாடலையும் தொல்காப்பியர் கூறுகிறார்.

துள்ளலோசையால் பாடப்பட்டு பாவகையால் பெயர்பெற்ற நூல் கலித்தொகை ஆகும். பிற அகத்திணை நூல்கள் எடுத்துரைக்காத கைக்கிளை, பெருந்திணை, மடலேறுதல் ஆகியவை கலித்தொகையில் மட்டுமே இடம்பெறுகின்றன. கலித்தொகை காதலர்தம் அகத்தொகை எனவும் கூறலாம்.

முன்னைய நாளில் கலித்தொகையைப் பயிலாத ஒருவனை கற்றவரென எவரும் போற்ற மாட்டார். கலித் தொகையைப் படிக்காதவன் ஒரு சிறந்த பாவலனாக முடியாது என்றும் கருதினர். திருதக்கத்தேவர், கம்பன், சேக்கிழார், சிவஞான முனிவர் போன்ற பெரும்புலவர்கள் கலித்தொகைப் பயின்றவர்களாவர்.

எனவே தான் இந்நூல் ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’, ‘கல்வி வலவர் கண்ட கலி’ என்றும் சிறப்பித்துக் கூறப்பட்டது.

இப்பாடல்களின் மூலம் பண்டைக் கால ஒழுக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள், மரபுகள், காலத்தின் தன்மை, நல்லவர் தீயவர் பண்புகள், விலங்குகள், பறவைகள், மரங்கள், செடி கொடிகளின் இயல்புகள் ஆகியனவற்றை அறிந்து கொள்ளலாம்.

கலித்தொகைப் பாடல்களில் கடவுள் வாழ்த்துப்பாடல் தவிர்த்து 149 பாடல்களுள், பாலைக்கலியில் 35, குறிஞ்சிக்கலியில் 29, மருதக்கலியில் 35, முல்லைக்கலியில் 17, நெய்தற்கலியில் 33 பாடல்களும் பாடப்பட்டுள்ளன.

கலித்தொகை நூலை முதன் முதலில் ஈழத்தைச் சார்ந்த தமிழறிஞர் சி.வை. தாமொதரம்பிள்ளை 1887 ஆம் ஆண்டில் பதிப்பித்தார். கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையுமாக “நல்லந்துவனார் கலித்தொகை” என்னும் பெயரில் அவர் பதிப்பித்தார். தமிழ் நூல்களைக் கண்டெடுத்துப் பதிப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் சி.வை. தாமோதரம்பிள்ளை ஆவார்.

அதன் பின்னர், பல ஏட்டுச் சுவடிகளை ஒப்பிட்டும், வேறு நூல்களை ஆராய்ந்தும், உரிய விளக்கங்களுடன், பல்கிய மேற்கோள்களை அடிக்குறிப்புகளாக அளித்தும், சென்னை பிரசிடென்சி கல்லூரியின் தமிழ்ப் பேராசரியராக விளங்கிய இ.வை. அனந்தராமரைய்யர் 1925இல் பதிப்பித்தார். அதன் பின்னரே பலரும் கலித்தொகைக்கு உரை கண்டனர் எனலாம்.

கலித்தொகையில் சேர,சோழ மன்னர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை. பாண்டிய மன்னர், பாண்டிய நாட்டுக் கூடல்மாநகர், வைகையாறு போன்ற பாண்டிய நாட்டுச் செய்திகளே அதிகம்

கலித்தொகை நூலில் உள்ள

  • பாலைத்திணைப் பாடல்களைப் பாடியவர்- பாலை பாடிய பெருங்கடுங்கோ
  • குறிஞ்சித்திணைப் பாடல்களைப் பாடியவர் – கபிலர்
  • மருதத்திணைப் பாடல்களைப் பாடியவர் – மருதன் இளநாகன்
  • முல்லைத்திணைப் பாடல்களைப் பாடியவர் – சோழன் நல்லுருத்திரன்
  • நெய்தல் திணைப் பாடல்களைப் பாடியவர்- நல்லந்துவன் ஆகியப் புலவராவர்.

ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களுள் இன்னின்ன திணைக்கு உரிய பொருள் இன்னின்ன என எளிமைப்படுத்தித் தெளிவாக்கும் பாடல்கள் உள்ளன.

“‘பண்பு’ எனப்படுவது, பாடு அறிந்து ஒழுகுதல்;”
எனக் கூறுகிறது.

பண்பு என்பது உலக நிலைமையறிந்து நடத்தலாகும். இவ்வாறு உலக நிலையறிந்து நாம் நடக்கும் போது மகிழ்ச்சியான வாழ்வு வாழமுடியும் என்பது இப்பாடலின் மூலம் வலியுறுத்தப்படுகின்றமை நோக்கத்தக்கது.
அன்பு

அன்பே வாழ்வின் ஆதாரமாகும். பொருளை விடவும் அன்பு சிறந்ததாகும். கலித்தொகையில் அன்பு நெறி பலவாறு எடுத்துக் காட்டப்படுகிறது.

“‘அன்பு’ எனப்படுவது தன் கிளை செறாஅமை” (-நெய்தற்கலி:16:9)

எனவரும் கலித்தொகைப் பாடலால், அன்பு என்பது தன் சுற்றத்தினரைக் கோபியாது இருத்தல்; எனப்படுகிறது. மேலும், தலைவன் மீது தலைவி கொண்ட அன்பினை எடுத்துக் கூறுவதன் மூலமாகவும் அன்புநெறி எடுத்துக்காட்டப்படுகிறது.

“அன்பு கொள மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறுகரால் ஆற்றும், ‘புறவு’ எனவும் உரைத்தனரே”,
(பாலைக்கலி:10:12-13)

எனவரும் பாடல்களின் மூலம் அன்பின் தன்மை வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்திலும் சமூகத்திலும் நாம் அன்புடன் வாழ வேண்டும், அப்போதே மனித வாழ்வு சிறப்புடையதாகும் என்பது வலியுறுத்தப்படுகிறது.
கலித்தொகையில் பழமொழிகள் போன்று ஒரே வரியில் அறக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
அன்பு எனப்படுவது தன்கிளை செறாமை
அறிவு எனப்படுவது பேதையர் சொல் நோண்றல்
செறிவு எனப்படுவது மறை பிறர் அறியாமை
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்
பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்

(கலி ,133) மேற்கண்ட பாடலை விரித்து விளக்க வேண்டியதில்லை.

தலைவியின் பெற்றோர்கள் தன் மகளுக்கு திருமணம் குறித்து ஆலோசிக்கின்றனர். தலைவியோ தன் காதலனைக் காண முடியாமையால் வருத்தம் ஒரு புறம், திருமண ஏற்பாடுகள் மறுபுறம் என துயரத்தில் உடல் மெலிந்து காணப் படுகிறாள். தன் தோழியை தூது அனுப்பி திருமண முயற்சியை மேற்கொள்ளுமாறு காதலனிடம் சொல்லி பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தை தடுக்க முயற்சி செய்யுமாறு இடித்துரைக்க வேண்டுகிறாள். அவன் நான் ஆணையிடுவதாக எண்ணாதவாறு அன்பாகச் சொல் என்னும் பொருள் பட இளமைக் கால நினைவுகளைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு பாடல்:.

………… கூறுக மற்று இனி
சொல் அறியாப் பேதை! மடவை! மர்று எல்லா!
நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல்; அகலும் நீடின்று;
நினக்கு வருவதாகக் காண்பாய்; அனைத்து ஆகச்
சொல்லிய சொல்லும் வியங்கொளக் கூறு;
தருமணல் தாழப் பெய்து; இல்பூவல் ஊட்டி,
எருமைப் பெடையொடு எமர் ஈங்கு அயரும்
பெருமணல் எல்லாம் தனித்தே ஒழிய
வரிமணல் முந்துறைச் சிற்றில் புனைந்த
திருநுதல் ஆயத்தார் தம்முள், பிணர்ந்த
ஒருமணந்தான் அறியுமாயின்; எனைத்தும்
தெருமரல் கைவிட்டிருக்கோ? அலர்ந்த
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அருநெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல் பன்றோ!

நட்பைப் பற்றிக் கூறுகையில்:-

“பொருந்திய கேண்மையின் மறையுணர்ந்து அம்மறை பிரிந்தகால் பிறருக்கு உரைக்கும் பீடிலார்”

கூடியிருந்தபோது அறிந்து கொண்ட மந்தணச் செய்திகளை பிரிந்தவுடன் பிறர்க்கு எடுத்துக் கூறுபவரை பெருமையற்றவர் (பீடிலார்) என்று கலித்தொகை இழித்து கூறியுள்ளது.

கற்றறியா விலங்குகள் கூட காதல் வயப்பட்டு எவ்வாறு செயல்படுகின்றன என்பதை:

கல்லா கடுவன் கணம் மலி சுற்றத்து
மெல்விரல் மந்தி குறை கூறும் செம்மற்றெ
தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும்
அல்லல் படுவான் மலை.

கல்வியறிவு இல்லாத ஆண் குரங்கு ஒன்று, கூட்டமாகக் கூடியிருக்கும் சுற்றத்தாரிடம் சென்று மெல்லிய விரல்களையுடைய மந்தியைப் பெண்கேட்டுத் தன் குறைகளைக் கூறும் தன்மையது, தான் காதலித்த மங்கையரின் அழகை நுகர்ந்து பின்னர் பிரியும் போது அவர் அழகிழந்து போனால் அவரினும் அதிகமாக வருந்தும் தலைவனுக்குரிய மலை.
( மலை கூட வருந்தும் எனக் கூறுகிறது)

ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடும் சூழ் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினை
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின்
நீங்கலம் என்பான் மலை
என நாம்
தன்மலை பாட நயவந்து கேட்டு அருளி
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான்

சோம்பியிருத்தலை அறியாத அழகிய ஆண் யானை, தான் விரும்பும் பெண்யானைக் கொண்ட முதல் கருவுறுதலின் போதான மசக்கை நோய்க்கு, மிக்க விருப்பத்துடன் நெடிதாகக் கிளைத்த இனிய கணுக்களைக் கொண்ட கரும்பின் கழைய வளைத்து முறிக்கும், தன்னைச் சேர்ந்தவரை ஒரு போதும் நீங்க மாட்டேன் என்று கூறுகிறவனின் மலை என்று நாம் அவன் மலையைப் பாட அதனை விரும்பிக் கேட்டருளி உடல் பூரித்த உவகையுடன் வந்து விட்டான் – என்ற பொருள் பட அமைந்த பாடல்.

கலித்தொகையில் வாழ்வுக்கு நலம் சேர்க்கும் வாழ்வியல் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. மிகச்சிறந்த நற்பண்புகளை பின்வரும் தலைமுறையினர் நன்முறையில் பின்பற்றும் வகையில் கலித்தொகை தொகுத்துரைத்திருக்கும் பாங்கு குறிப்பிடற்குரியது.

இந்நூலில் கூறப்படும், பண்புடமை, அன்பு, மனையறம், கற்புநெறி, ஈகை போன்ற வாழ்வியற் சிந்தனைகள் யாவும் மனித வாழ்வின் மேன்மைக்கு முகாமையானவையாகும். இத்தகு வாழ்வியல் தமிழர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது என்பதல்ல, இவை உலக மாந்தர் யாவருக்கும் பொருந்தக்கூடியவையாகும். எனவே கலித்தொகை காட்டும் வாழ்வியல் நெறிகளை நாம் கடைப்பிடித்து வாழும்போது நல்முறையில் வாழ்ந்து வாழ்வில் ஏற்றம் பெறலாம் என்பது திண்ணம்.

கலித்தொகை நூல் முழுவதையும் ஆழ்ந்து கற்றால் எல்லாப் பண்புகளையும் படித்தறிந்து இன்புறலாம். பண்பாடு மிக்க சங்க காலத் தமிழர் வாழ்வு மீண்டும் தழைக்கவும் அதனால் அன்பும் அறனும் செழிக்கவும் புதிய உலகம் பூக்கவும் வழிபிறக்கும்! இந்த வழிக்குரிய கதவுகளை நம் தமிழ் மொழி திறக்கும்!

நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!

தமிழா விழி! எழு!

தமிழும் நாமும் வேறல்ல! தமிழே நம் வேர்!

அன்புடன்,

சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
7-1-2022

We can not do it alone. Join with us.

Donate us

We can not do it alone. Want to join with us.

Donate us

Archives