08 Jan 2022 1:39 pm
(தொல் தமிழர் வகுத்தவை ஐந்திணை ஒழுக்கமும் நானிலப் பரப்புமாகும். சிலை (மார்கழி) திங்கள் குளிரில் காலைக் கதிரவனின் ஒளிக் கீற்றுகளுக்கு முன்பாக உலகையே தன்னுள் அடக்கி வைத்திருக்கும் ஒரு பனித் துளியின் நுனித்துளியாக நம் தமிழ் இலக்கியங்கள் குறித்து ஒரு சிறு துளிச் செய்தியாக யாம் உங்கள் பார்வைக்காகப் பதிவிடுகின்றோம்)
துளி: 9
வாசிப்பு நேரம் : 6 நிமையங்கள் / 8-01-2022
அகநானூறு – எட்டுத் தொகை எனப்படும் சங்ககாலத் தொகுப்பில் உள்ள ஒரு அருமையான நூலாகும். இந்நூல் அகத்திணை சார்ந்த நானூறு பாடல்களின் தொகுப்பாக விளங்குவதால் அகநானூறு என வழங்கப்படுகிறது.
இதற்கு நெடுந்தொகை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
இந்நூல் 13 அடி சிற்றெல்லையும் 31 அடி பேரெல்லையும் கொண்ட நீண்ட பாடல்களைக் கொண்டிருப்பதால் இதனை, ‘நெடுந்தொகை’ என்பர். (நெடுமை+தொகை. நெடிய அல்லது நீண்ட பாடல்களின் தொகுப்பு)
இதில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். எட்டுத்தொகை நூல்களுள் குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகிய ஐந்தும் அகப்பொருள் பற்றியன. ஆயினும் அவற்றுள் அகம் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது இந்த இலக்கியம் மட்டுமே!
இத் தொகையைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிக்குடி கிழார் மகனார் உருத்திரசன்மர். இதனைத் தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியார்.
அகநானூற்றுப் புலவர்கள் சற்றொப்ப 146 பேர். அவர்களுள் 65 பேர் அகநானூற்றில் மட்டுமே பாடல் பாடியுள்ளார்கள்.
நாடாள்வோர், அந்தணர், இடையர், எயினர், பொற்கொல்லர், வணிகர், வேளாளர் எனப் பல தரப்பினர் புலவர்களாக இருந்த செய்தி அவர் தம் பெயர்களின் முன்னால் அமையும் அடைமொழிகளால் தெரிகிறது. மூன்று பாடல்களின் (114, 117, 165) ஆசிரியர் பெயர் காணப் பெறவில்லை.
பண்டைத் தமிழர்கள் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பிரித்தனர். “உள்ளம் ஒன்றுபட்ட தலைவனும் தலைவியும் ஊழினால் ஒன்று கூடி தாம் உணர்ந்த இன்பம் இதுதான் என பிறருக்குச் சொல்ல முடியாமல் உள்ளத்தே அனுபவிக்கும் உணர்ச்சியே “அகம்” எனப்படும். அகப்பாடல்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, என்ற ஐந்திணைகளுக்கும் உரிய அக ஒழுக்கங்களை ”அன்பின் ஐந்திணை” எனக் கூறுகின்றன. பொருந்தாத காதலைப் பெருந்திணை என்றும் ஒருதலைக் காமத்தைக் கைக்கிளை என்றும் கூறுகின்றன.
1 முதல் 120 வரையில் உள்ள 120 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் யானைக்களிறு போல் பெருமித நடை கொண்டவை. யானைகளின் அணிவகுப்பைப் போன்று ஓரினப் பாடல்களின் அணிவகுப்பாக அவை அமைந்துள்ளன.
121 முதல் 300 வரை உள்ள 180 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நீலநிற மணிகள் போலவும் செந்நிறப் பவளம் போலவும் பெருமதிப்பு உடையனவாக அமைந்து ஈரினப் பாடல்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. மணியும் பவளமும் கோத்த ஆரம் போன்று இத்தொகுப்பு அமைந்துள்ளது.
301 முதல் 400 வரை உள்ள 100 பாடல்கள் இத்தொகுப்பில் உள்ளன. இதில் உள்ள பாடல்கள் நித்தில முத்துக்கள் போலப் பெருமதிப்பு கொண்டவையாக அமைந்து ஓரினக் கோவை போல அமைந்துள்ளன. இத்தொகுப்பு முத்தாரம் போல் அமைந்துள்ளது.
அகநானூறு பாடல் எண், மற்றும் திணை முறைவைப்பில் ஓர் ஒழுங்கினைப் பின்பற்றியிருப்பது தனிச் சிறப்பிற்குரியதாகும்.
இதுவே அகநானூற்றில் காணப்படும் முறை வைப்பாகும். இச்சிறப்பு வேறு எந்த நூலிலும் காணப்படவில்லை.
இம் முறை வைப்பை, ஒன்றுமூன்று ஐந்துஏழ்ஒன் பான்பாலை ஓதாது நின்றவற்றில் நான்கு நெறிமுல்லை - அன்றியே ஆறாம் மருதம் அணிநெய்தல் ஐயிரண்டு கூறுதலைக் குறிஞ்சிக் கூற்று
என்ற பழம்பாடல் குறிப்பிடும்.
நாட்டை ஆளும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க “குடவோலை முறை” பழக்கத்தில் இருந்ததென்ற அரசியல் செய்தி அகநானூறு வழியாகவே நமக்குத் தெரிகிறது.
யவனர்கள் வாசனைப் பொருளான மிளகைப் பெறுவதற்காகவே தமிழத்துடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்ற செய்தி காணப்படுகிறது. முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி
(அகநானூறு, 149:9-11)
(நன்கலம் = நல்ல கப்பல்; கறி = மிளகு) இது தமிழர்களின் வாணிப வளத்தைக் காட்டுகிறது.
அகநானூற்றில் இடம்பெற்றுள்ள உள்ளுறை, உரிப்பொருள் போன்றவை அகநானூற்றின் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன. இதில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகளும் சிறப்புக் கூறுகளாக அமைந்துள்ளன.
உள்ளுறையைப் பயன்படுத்திய அக நூல்களில் அகநானூறு நான்காவது இடத்தில் உள்ளது. மொத்தம் 51 பாடல்களில் உள்ளுறை அமைந்துள்ளது.
குறிஞ்சித் திணையில் 22 பாடல்களிலும் மருதத் திணையில் 14 பாடல்களிலும், நெய்தல் திணையில் 11 பாடல்களிலும், பாலைத் திணையில் 4 பாடல்களிலும் ஆக 51 பாடல்களில் உள்ளுறை இடம் பெற்றுள்ளது. முல்லைத் திணைப் பாடல்களில் உள்ளுறை இடம்பெறவில்லை.
தொல்காப்பிய அகத்திணை இயலில் ஐந்து திணைகளின் உரிப்பொருளுக்குச் சான்று காட்டியுள்ள உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல்களை மட்டுமே காட்டி உள்ளது இந் நூலுக்குக் கிடைத்த சிறப்பு எனலாம்.
இந்நூலில் மிகுதியான அளவில் வரலாற்றுச் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
116 பாடல்களில் ஏறத்தாழ 87 அரசர்கள் மற்றும் படைத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ஒரே பாடலில் (44) ஒன்பது அரசர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவும் இந் நூலுக்குரிய சிறப்பு ஆகும்.̀
அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!'' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே.. (அக-155)
அறம் செய்வதே வாழ்க்கை. அதில் கடைப்பட்ட நிலை கூடாது. வாழ்க்கைக்காகப் பிறர் வாசற்படிக்குச் செல்லக்கூடாது. செல்வம் இந்த இரண்டு நெறி நிலைகளையும் செய்யும் என்று என் கூந்தலை நீவிக்கொண்டே சொல்லியவர் பொருளீட்டச் சென்றுள்ளார். அணிகல ஒப்பனை பூண்டவளே! கேள்.
அன்பும் மடனும் சாயலும் இயல்பும்
என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி
இன்றே இவணம் ஆகி நாளை
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற
அகலா அம் துளை கோடை முகத்தலின்
நீர்க்கு இயங்கு இன நிரை பின்றை வார் கோல்
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும்
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து
யாத்த தூணி தலை திறந்தவை போல் …..
காதலும், குற்றம் காணா அறியாமையும் மென்மையும் ஒழுக்கமும் எலும்பையும் நெகிழ்க்கும் இன்சொல்லும், பிற பண்புகளும் தலைவியுடன் ஒன்று பட்டுள்ள நல்ல கொள்கையையுடையவராய் ஒன்றிணைந்து தழுவி இன்றைக்கு இவ்விடத்தில் இருக்க, நாளைப் பொழுது புதர்கள் வளர்ந்துள்ள இடத்திலுள்ள அசைகின்ற மூங்கிலின் மேல் வண்டு துளைத்த அகலமில்லாத சிறிய அழகிய துளை வழியே மேல்காற்று புகுந்து வருவதால் நீருக்காகச் செல்லுகின்ற பசுக் கூட்டத்தின் பின்னால் செல்லும் நீண்ட கோலையுடைய இடையர்கள் ஊதுகின்ற குழலின் இசையைப் போல இனிதாக வந்து இசைக்கும்
இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகுபெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடை கோல் சிறு தீ அடைய மாட்டி
திண் கால் உறியவன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள் உடை குறும் தூறு இரிய போகும்
தண் நறு புறவினதுவே நறு மலர்
முல்லை சான்ற கற்பின்
மெல் இயல் குறு மகள் உறைவு இன் ஊரே (274)
பெரிய வானம் முழுவதும் அதிரும்படி இடித்து முழங்கி, பாம்புகளை வருத்தி விழுகின்ற மழையாகிய மிகுந்த மழைத்துளிகளைப் பெய்து, மேகமானது கார்ப் பருவத்தைச் செய்த நள்ளிரவில் ஆடுகின்ற தலையினையுடைய செம்மறியாட்டின் கூட்டம் பாதுகாப்பாக இருக்க, தீக்கடையும் கோலால் கடைந்தெடுத்த சிறிய தீப்பொறியை விறகில் சேர்த்து வளர்த்து திண்ணிய கால்களையுடைய உறியையும், பானையினையும், தோல்படுக்கையினையும் உடையவனாய் நுண்ணிய பல மழைத் துளிகள் தனது ஒரு பக்கத்தை நனைக்க, தண்டினை ஒரு காலக ஊன்றி, ஒற்றைக் காலில் நிற்கும் இடையன் உதட்டை மடித்து விடும் சீழ்க்கை (விசில்) விரைந்து சென்று ஒலிக்க துள்ளி விளையாடும் குட்டியைக் கவர்ந்து செல்லப் பார்த்துக் கொண்டிருக்கும் குள்ள நரி அஞ்சி முட்களையுடைய சிறிய புதர்களின் விழுந்தடித்துக் கொண்டு போகும் குளிர்ச்சியான மணங்கமழும் முல்லைக் காட்டில் உள்ளது. நறுமணமுடைய மலரான முல்லையை அணிந்த கற்பொழுக்கம் உடைய மெல்லிய இயல்பினையும் இளமையும் உடைய எம் காதலியின் வாழ்வு.
இவ்வாறு எண்ணற்ற வாழ்வியல் அறத்தையும், நுண் உணர்வுகளையும் பதிவு செய்துள்ள ஒரு சிறந்த இலக்கியம் “அகநானூறு” ஆகும்.
நம் தாய்த் தமிழ் உறவுகளுக்கு யாம் விடுக்கும் கனிவான வேண்டுகோள். நலமும் வளமும் சூழ வாழ தமிழே நமக்கு விழி, அதுவே வாழ்க்கையின் ஒளி!
அன்புடன்,
சு.குமணராசன்
மும்பை.
தொடர்பு : +91 9820281623,
Email: tamil.lemuriya@gmail.com
8-1-2022
We can not do it alone. Join with us.